கண்ணிகள்(Snares).

அதினால் கிதியோன் ஒரு ஏபோத்தை உண்டாக்கி, அதைத் தன் ஊரான ஒப்ராவிலே வைத்தான், இஸ்ரவேலரெல்லாரும் அதைப் பின்பற்றிச் சோரம் போனார்கள், அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாயிற்று.

இஸ்ரவேல் ஜனங்களைச் செம்மையாய் நியாயம் விசாரித்த நியாயாதிபதிகளில் கிதியோனும் ஒருவர்.  அந்நாட்களில்  மீதியானியர்கள்  இஸ்ரவேல் ஜனங்களை அதிகமாய் ஒடுக்கினார்கள்.  இஸ்ரவேலர் விதை விதைத்திருக்கும்போது,  மீதியானியரும்  அமலேக்கியரும் கிழக்கத்தியப் புத்திரரும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பி வந்து, அவர்களுக்கு எதிரே  பாளயமிறங்கி,  காசாவின்  எல்லைமட்டும்  நிலத்தின் விளைச்சலைக் கெடுத்து,  இஸ்ரவேலிலே  ஆகாரத்தையாகிலும், ஆடுமாடுகள் கழுதைகளையாகிலும் வைக்காதே போவார்கள். இஸ்ரவேல் ஜனங்களுடைய கைகளின் பிரயாசத்தை  மீதியானியர்கள் புசிக்கிறவர்களாய் காணப்பட்டார்கள். அந்த வேளையில் தான் கர்த்தர்  கிதியோனை  சந்தித்து,  இஸ்ரவேல்  ஜனங்களை மீதியானியரின் கைகளுக்கு தப்புவிக்கும் இரட்சகனாக அவனைத் தெரிந்து கொண்டார். நான் உன்னோடே கூட இருப்பேன், ஒரே மனுஷரை முறிய அடிப்பது போல நீ மீதியானியரை முறியடிப்பாய் என்ற வாய்க்குத்தத்தையும் கொடுத்தார். அப்படியே கிதியோன், முந்நூறு ஜனங்களோடு கடற்கரை மணலைப் போலக் காணப்பட்ட  மீதியானியர்களை முறிய அடித்தான்.  இஸ்ரவேல்  ஜனங்கள்  கிதியோனை நோக்கி, மீதியானியரின் கரங்களிலிருந்து எங்களை விடுவித்த படியால் நீரும் உம்முடைய குமாரர்களும் எங்களை  ஆளக்கடவீர்கள் என்று  சொன்ன வேளையில் நாங்கள் உங்களை ஆள்வதில்லை, கர்த்தரே உங்களை ஆளுவாராக என்று கூறி கர்த்தரை மகிமைப் படுத்தினான். ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் கொள்ளையிட்ட கடுக்கன்களையும் ஆபரணங்களையும் வாங்கி அதில் ஒரு ஏபோத்தை செய்து, அதை தன் ஊராகிய ஓப்ராவில் வைத்தான், அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாய் மாறிற்று. பிரதான ஆசாரியர்கள் தங்கள் மார்பில்  ஏபோத்து  என்ற  நியாயவிதி மார்ப்பதக்கத்தை அணிந்து, அதில் ஊரிம் தும்மிம் என்ற கற்களை வைத்து எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்பதைத் தீர்மானிப்பார்கள். ஆனால் கிதியோன் அந்த வஸ்திரத்திற்கு ஒத்த உருவத்தைப் பொன்னினால் செய்து வைத்ததினால்,  இஸ்ரவேல் ஜனங்கள் அதன் அழகில் மயங்கி, சோரம் போனார்கள். அது அவர்களுக்குக் கண்ணியாய் முடிந்தது. ஆகையால் தான் எனக்குக் கல்லினால் பலிபீடத்தை  உண்டாக்கவேண்டுமானால், அதை வெட்டின  கல்லுகளால்  கட்டவேண்டாம்,  அதன்மேல்  உளியிட்டவுடனே, அதை அசுசிப்படுத்துவாய் (யாத். 20:25) என்று கர்த்தர் கூறினார். கற்களை உளியினால் அடித்து அழுகு படுத்தி,  அதில் ஜனங்கள் கவர்ச்சிக்கப்பட்டு, வஞ்சிக்கப்படுவதற்கு அல்ல, பலிக்குரிய அவரே முக்கியம் என்பதைக் கற்றுக் கொடுக்கும் படிக்கு அப்படிச் செய்தார்.

  எசேக்கியா ராஜாவின் நாட்களில் அவன்  வியாதிப்பட்டு,  கர்த்தருடைய இரக்கத்தினால் குணமடைந்த பின்பு, பாபிலோனிய ராஜாவின் பிரதானிகள் இவனை விசாரிக்க வந்த வேளையில், தன் அரண்மனையில் எல்லாவற்றையும்  அவர்களுக்குக்  காண்பித்தான்.  ஏசாயா தீர்க்கதரிசி, உம்முடைய வீட்டில் என்னத்தைப் பார்த்தார்கள் என்று கேட்டவேளையில,என் வீட்டிலுள்ள எல்லாவற்றையும் பார்த்தார்கள், என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக்  காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை என்றான். அப்போது  ஏசாயா தீர்க்கதரிசி, இதோ நாட்கள் வரும், அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம்  பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும், நீர் பெறப்போகிற உமது சந்தானமாகிய உமது குமாரர்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.  யூதாவின்  குடிகள்  பாபிலோனியச்  சிறையிருப்பில் எழுபது வருஷங்கள் காணப்படுவார்கள் என்று  எரேமியா தீர்க்கதரிசி கூறுவதற்கு முன்பாகவே  எசேக்கியா ராஜாவின் செய்கையினித்தம் கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு வெளிப்பட்டது. அது அவனுடைய குமாரர்களுக்கும்,  இஸ்ரவேல்  ஜனங்களுக்கும் கண்ணியாய் முடிந்தது.

கர்த்தருடைய பிள்ளைகளே! நீங்கள் செய்கிற எந்த காரியங்களும் உங்களுக்கும், உங்கள் சந்ததிகளுக்கும் கண்ணியாகி விடக்கூடாது. சிலவேளைகளில் உங்கள் வீடுகளில் அனுமதிக்கிற நபர்கள் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் கண்ணிகளாய் காணப்படலாம். பகையாளிக் குடியை உறவாடிக் கெடு என்று கூறுகிற பழமொழியைப் போல, உங்கள் வீடுகளில் உறவாடுகிறவர்கள் எல்லோரும் உங்களுக்கு நன்மை செய்கிறவர்கள் என்று கருதிவிடாதிருங்கள். சபைகளிலும், வீடுகளிலும் வருகிற ஊழியர்கள், சில வேளைகளில் உங்களுக்குக் கண்ணியாய் காணப்படலாம். ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்திருக்கிற, விசுவாசிகள் என்று அழைக்கப்படுகிற நயவஞ்சகங்கள்,   மந்தைக்குக் கண்ணியாய் காணப்படலாம். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அனுமதிக்கிற தகாத உறவுகள் உங்களுக்குக் கண்ணிகளாய்க் காணப்படலாம். பொல்லாத சத்துருவை வேடன் என்று வேதம் அழைக்கிறது, வேடன் கண்ணிகளை வைத்து வஞ்சிக்கிறவன். ஏவாளைப் போல உங்களையும் நயங்காட்டி  வஞ்சிக்கிறவன். ஆகையால் தான் கர்த்தருடைய பிள்ளைகள் இந்த கடைசி நாட்களில் அதிக ஜாக்கிரதையோடு காணப்பட வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம் என்று சங்கீதக்காரனைப் போல நாமும் சாட்சி பகிரும்படிக்கு, கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் சத்துருவின் மறைவான கண்ணிகளுக்கு தப்பும் படிக்குக் கிருபை செய்வாராக.  

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *