3G (Girl, Gold, Glory)

இன்றைக்கு தேவ பிள்ளைகள் கவனமாக இருக்க வேண்டிய மூன்று காரியங்களை (3G) குறித்து பார்ப்போம்.

  1. பெண்கள் அல்லது எதிர்பாலரோடு பழகுதல் (Girl / Opposite Sex)

ஒரு தேவ பிள்ளை எதிர்பாலரோடு தனியாக பேசுவதை தவிர்க்க வேண்டும். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஒரு சமாரிய பெண்ணிடம் தனியாக பேசுவதை சீஷர்கள் கண்டு ஆச்சரியப்பட்டார்கள் காரணம் சீஷர்கள் இரவு பகலாக இயேசு கிறிஸ்துவோடு இருந்தார்கள் அந்த மூன்றரை வருட நாட்களில் ஒரு சமயம் கூட ஒரு பெண்ணிடம் அவர் தனியாக பேசியதை அவர்கள் பார்த்ததில்லை எனவே தான் இயேசு கிறிஸ்து சமாரிய பெண்ணிடம் பேசுவதை கண்டு ஆச்சரிய பட்டார்கள் (John 4:27) .

ஒரு சமயம் Billy Graham அவர்களை Hilary Clinton தன்னோடு தனியாக உணவு சாப்பிடவும், சில ஆலோசனைகளை கேட்கவும் விரும்பி அழைத்தார் ஆனால் அதற்கு Billy Graham மறுத்து விட்டார். மேலும் தான் தனியாக ஒரு பெண்ணிடம் பேசமாட்டேன், வேண்டுமானால் மூன்றாவது ஒரு நபரை கூட வைத்து கொண்டோ அல்லது ஒரு பொதுவான இடத்தில் மற்றவர்கள் பார்க்கக்கூடிய இடத்தில் இருந்து பேசலாம் என்று பதில் அனுப்பினார். தன்னுடைய சாட்சியின் ஜீவியம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தார். இதை பின் நாட்களில் Billy Graham Rule என்று அழைத்தார்கள்.

இன்றைக்கு எத்தனையோ பேர் இந்த விஷயத்தில் விழுந்து போனவர்கள் உண்டு. ஊழியம் செய்கிறேன், ஜெபிக்கிறேன், ஆலோசனை சொல்கிறேன் என்ற பேரில் பாவத்தில் விழுந்தவர்கள் ஏராளம். பெரும்பாலானோர் பாவம் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் செய்யவில்லை ஆனால் சொற்ப மதியீனம் வீழ்த்திவிடுகிறது.

சாலொமோன் வாழ்க்கையை பார்க்கும் போது துவக்கத்தில் அவர் ஜெபிக்கும் போது அக்கினி இறங்குகிறது, தேவ மகிமை மூடுகிறது (2 Chronicle 7:1). ஆனால் பின் நாட்களில் பெண்கள் விஷயத்தில் விழுந்துபோனார். ஜீவனுள்ள தேவனுக்கு ஆலயத்தை கட்டினவன், விக்கிரக கோவில்களை கட்ட ஆரம்பித்தான். தேவன் இரண்டு முறை எச்சரித்தும் மனந்திரும்ப கூடாமல் போயிற்று (1 Kings 11:9).

பாலியல் இச்சைகளுக்கு விலகி ஓடுங்கள் – 2 Tim 2:22

  1. பண ஆசை (Gold / Money)

பணம் நமக்கு அவசியம் அதே நேரத்தில் பணம் நம்மை ஆண்டு கொள்ளக்கூடாது. ‘’பண ஆசை எல்லா தீமைக்கும் வேர்” (1 Tim 6:10) என்று வேதம் சொல்கிறது. பண ஆசையை மேற்கொள்ள ஒரு எளிய வழி கொடுப்பதை அதிகப்படுத்த வேண்டும். பண ஆசையால் அழைப்பை இழந்தவர்கள் ஏராளம்.

யூதாஸ் காரியோத்து, இயேசு கிறிஸ்வோடு மூன்றரை ஆண்டுகள் இருந்து, அநேக போதனைகளை கேட்டு அவருடைய பலத்த செய்கைகளை கண்டும், 30 வெள்ளிக்காசுக்காக அவரை காட்டிக்கொடுத்தான் இன்றைக்கும் திருச்சபைகளில் அநேக யூதாஸ்கள் காணப்படுகிறார்கள். அதே நேரத்தில் கிறிஸ்துவின் வார்த்தையை ஏற்று மனம் திரும்பின மந்திரவாதிகள் 50,000 வெள்ளி காசுகளை இழக்க ஒப்புக்கொடுத்தார்கள் (Acts 19:19).

அநேகருக்கு பணம் தேவனாய் மாறிவிட்டது. எலிசாவை காண்பதற்கு நாகமான் கொண்டுவந்த காணிக்கையை கணக்கிட்டு பாருங்கள்

10 தாலந்து வெள்ளி = 340 KG வெள்ளி (750 pounds)
6000 சேக்கல் நிறைபொன் = 68 KG பொன் (150 pounds)

இன்றைய மதிப்பில் சுமார் 4.1 Million USD. இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 30 கோடி (15 Million QAR) எத்தனை கோடிகளை கொண்டுவந்தாலும் எலிசாவை அது அசைக்க வில்லை. இப்படிப்பட்ட எலிசாக்கள் இன்றைக்கு தேவை.

பண ஆசைக்கு விலகி ஓடு – 1 Tim 6:10,11

  1. மகிமை (Glory)

‘’உலகத்திற்கு உன்னை காண்பி’’ (show yourself to the world) என்று இயேசுவின் சாகோதரர்கள் அவருக்கு ஆலோசானை கூறினார்கள் (John 7:4). இன்றைக்கு தன்னை காண்பிக்க வேண்டும், பிரபலமாக வேண்டும் என்று துடிப்பவர்கள் ஏராளம்.

நாம் ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பு தேவனை மகிமை படுத்துவதற்கு செய்கிறேனா அல்லது என்னை காட்டுவதற்கு செய்கிறேனா என்று ஆராய வேண்டும். நாம் சிறுகினால் தான் கிறிஸ்து பெருகுவார். ஒன்றையும், ஒரு வேளை ஊழியமே ஆனாலும் பெருமைக்காக செய்யாதிருங்கள். மனுஷரால் அல்ல தேவனால் வரக்கூடிய மகிமையை நாடுங்கள். நாம் நம்மை காண்பிக்க ஆரம்பித்தால் அது சாபத்தை கொண்டு வரும். நம்மிடத்தில் ஒரு நன்மையையும் இல்லையே!

எசேக்கியா ராஜாவை தேவன் அற்புதமாய் சுகமாக்கினார், இயற்கைக்கு மேலான காரியத்தை செய்தார். இதை எல்லாம் கேள்விப்பட்டு பாபிலோனிய தேசத்து ஸ்தானதிபதிகள், எசேக்கியா ராஜாவிடம் நலம் விசாரிக்க வந்தார்கள் ஆனால் எசேக்கியா ராஜாவோ தனக்கு அற்புதம் செய்த தேவனை காட்டாமல் தன் அரண்மனை, பொக்கிஷங்கள் போன்றவற்றை காட்டினான் அதின் நிமித்தம் அவனுடைய சந்ததிகளுக்கு சாபம் வந்தது (2 Kings 20).

மகிமை கர்த்தருக்குரியது!

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

B. Thivakar
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *