அந்நிய நுகம் (Unequal Yoke).

அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக (2 கொரி. 6:14).

வேதம் ஒரு திருமணத்தில் துவங்கி, இன்னொரு திருமணத்தில் முடிகிறது. ஆதாமுக்கு ஏற்ற துணையாக ஏவாளை உருவாக்கி, அவர்களை ஒரே சரீரமாய் திருமணத்தில் இணைத்தார். அதுபோல ஆட்டுக்குட்டியானவருடைய  கலியாணம் வந்தது, மணவாட்டி தன்னை ஆயத்தப்படுத்தினாள் என்று இயேசுவுக்கும் மணவாட்டி சபைக்கும் நடக்கப்போகிற விவாகத்தைக் குறித்து வெளி. 19:7ல் எழுதப்பட்டிருக்கிறது.  இயேசுவும் தன் ஊழியத்தில் முதல் அற்புதத்தை கானாவூர் கலியாண வீட்டில் செய்து திருமண  வாழ்வைக்  கனப்படுத்தினார். விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதென்றும், விவாக மஞ்சம் அசுசிப்படலாகது என்றும் வேதம் கூறுகிறது. கர்த்தருடைய பார்வையில் சபை எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியமாய் குடும்பமும் காணப்படுகிறது. ஆகையால் கர்த்தருடைய பிள்ளைகள் ஒருநாளும் அவ்விசுவாசிகளோடு விவாகத்தில் இணைக்கப்படலாகாது. விசுவாசிகளுக்கும் அவ்விசுவாசிகளுக்கும் சம்பந்தமேது என்று வேதம் கேட்கிறது.

மோசேயின் வாழ்க்கையில் மூன்று பகுதிகள் காணப்படுகிறது. முதல் நாற்பது வருஷமும் பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்ற ஸ்தானத்தில் அரண்மனையின் வாழ்க்கை. இரண்டாவது நாற்பது வருஷம் எத்திரோவின் மருமகனாக, சிப்போராளின் புருஷனாக ஆடுகளின் பின்னால் காணப்பட்ட  மீதியான்  தேசத்தின்  வனாந்தர  வாழ்க்கை. மூன்றாவது நாற்பது வருஷமும் கர்த்தருடைய ஊழியக்காரனாக, இஸ்ரவேல் ஜனங்களை நடத்தின வாழ்க்கை. மூன்றாவது பகுதியின் துவக்கத்தில் கர்த்தருடைய அழைப்பைப் பெற்று சிப்போராளோடும், கெர்சோம், எலியேசர் என்ற தன் குமாரர்களோடும் எகிப்திற்கு சென்று கொண்டிருந்த வழியில், கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு மோசேயைக் கொல்லப் பார்த்தார் என்று யாத். 4:24ல் எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தர் தன்னுடைய ஊழியத்திற்காய் அழைத்து அனுப்புகிறார், ஆனால் அவரே  எதிர்ப்பட்டு அவனைக் கொல்லப் பார்த்தார் என்பது நமக்கு ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. ஆனால் அது ஏன் என்று பார்க்கும்போது, சுமார் ஐந்நூறு வருஷங்களுக்கு முன்பு முதல் எபிரேயனாகிய ஆபிரகாமோடு நுனித்தோலின் விருத்தசேதன உடன்படிக்கையைக் கர்த்தர் செய்திருந்தார். மோசே பிரமாணங்களை நன்கு அறிந்தவன்,  பிரமாணங்களுக்குக்  கீழ்ப்படிகிறவன். ஆனால் சிப்போராள் புறஜாதி பெண்மணி, ஆகையால் மோசேயின் மூலம் விருத்தசேதன பிரமாணத்தை அறிந்திருந்தும் அவளது கலாச்சாரத்தின் படி விருத்தசேதனத்தை அருவருப்பாகக் கருதினாள். இரண்டு பேரும் ஒன்றித்து குடும்பமாக அனேக வருஷங்கள் வாழ்ந்திருந்தும் கருத்து வேறுபாடுகளோடும், ஒருமனமில்லாமலும் காணப்பட்டார்கள்.  மோசே விருத்தசேதன பிரமாணத்தை தன்னுடைய குமாரர்களுக்கு நிறைவேற்றும் படிக்குக் கூறியிருக்கக் கூடும், ஆனால் சிப்போராள் ஒத்துபோகாமல் காணப்பட்டதால் கால தாமதமானது. ஆனால் கர்த்தர் எதிர்ப்பட்டு மோசேயை கொல்ல பார்த்தவுடன் சிப்போராள் கருக்கான ஒரு கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து, நீர் எனக்கு இரத்தசம்பந்தமான புருஷன் என்றாள், உடனே கர்த்தர் அவனைக் கொல்வதை விட்டு விலகினார். அவள் விவேகத்தோடு அந்த வேளையில், தன் புருஷனுடைய சொல் கேட்டுச் செயல்படாமல் இருந்திருப்பாள் என்றால்  மோசேயின்  மரணத்திற்குக்  காரணமாயிருப்பாள்.  நோவாவின் நாட்களில் வெள்ளத்தினால் ஜனங்களைக் கர்த்தர் அழித்துப் போட்டதின் காரணமும் பரிசுத்த வித்து, அந்நிய வித்துகளோடு கலந்ததினால் என்பதை (ஆதி. 6:1,2) கர்த்தருடைய ஜனங்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

கர்த்தருடைய பிள்ளைகள், அவ்விசுவாசிகளோடு பிணைக்கப்படும் போது, குடும்பங்களில் ஒருமனக்கேடு உண்டாகிறது, குடும்பம் என்னும் பலிபீடம் சிதைந்து போகிறது, உங்களைக் குறித்து தேவன் கொண்ட நோக்கமும் தோல்வியில் முடிகிறது.  மனைவியானவளே, நீ உன் புருஷனை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? புருஷனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? (1 கொரி. 7:16) என்று வேதம் கேட்கிறது. ஆகையால் உங்கள் வாழ்க்கையில் தவறுகள் நடந்திருக்கக் கூடும், அறியாமையின் காலத்தை கர்த்தரும் அறியாதவர்  போல காணப்படுவார்.  ஆனால் சத்தியத்தை அறிந்த பின்பு, உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையில் தவறுகள்  நடவாதபடிக்கு  பார்த்துக்கொள்ளுங்கள். வாலிபர்கள் உங்கள்  வாழ்க்கைத்  துணைகளைத் தெரிந்துகொள்ளும் போது, தேவச் சித்தத்தை அறிந்து, உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஏற்ற  நபர்களைத்  தெரிந்துகொள்ளுங்கள்.  

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *