பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்?

பெரிய பர்வதமே,  நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய், தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்,  அதற்குக் கிருபையுண்டாவதாக,  கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார் (சகரியா 4:7).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/MFQjWNm4Ri4

எருசலேம் தேவாலயத்தைத் திரும்ப எடுத்துக் கட்டுகிற பணி  செருபாபேலுக்கு முன்பாக பெரிய பர்வதம் போலக் காணப்பட்டது. சத்துருவும் பர்வதத்தைப் போலப் பல நபர்கள் மூலமாக எதிர்த்து நின்றதினால் தேவாலயம் கட்டுகிற பணி சுமார் பதினைந்து வருடங்களுக்கு  மேலாகத்  தள்ளிப்போனது.  ஆகாய் மற்றும் சகரியா போன்ற   தீர்க்கதரிசிகளைக் கர்த்தர் எழுப்பி,  சத்துருவின் தந்திரங்களை  அறிந்துகொள்ளும் படிக்குச் செய்து,  ஜனங்களை உற்சாகப்படுத்தினதின் நிமித்தம்,  தேவாலயம் கட்டி முடிக்கப்பட்டது.  கர்த்தருடைய பிள்ளைகளே,  சத்துரு உங்களுக்கு முன்பு பர்வதத்தைப் போலப் பல தடைகளைக் கொண்டுவரலாம்.  ஆனால் உங்களுக்கு ஜெயத்தைத்  தரும்படிக்கு கொல்கொதா என்னும் பர்வதத்தில் சத்துருவின் மேல் வெற்றி கொண்ட ஆண்டவரை நோக்கிப்பாருங்கள். கல்வாரிச் சிலுவையில் சத்துருவையும் அவனுடைய ஆயுதங்களையும் கர்த்தர் உரிந்து போட்டு,  அவனை வெளியரங்கமாக்கிய கோலமாக்கி,  அவன் தோற்கடித்ததின் நிமித்தம் பர்வதங்கள் உங்களுக்கு முன்பாக  சமபூமியாகும்,  உங்களுக்கு முன்பாக காணப்படுகிற தடைகள் விலகும்.

தனிப்பட்ட நபர்களுக்கு விரோதமாகப் பிசாசு பர்வதத்தைப் போல எதிர்த்து நிற்பான். தானியேல்  மூன்று வாரமுழுவதும் துக்கித்து,  ருசிகரமான அப்பத்தைப் புசிக்காமல்,  இறைச்சியும் திராட்சரசமும் உண்ணாமல்,  பரிமளதைலம் பூசிக்கொள்ளாமல் தன் ஜனங்களுடைய சிறையிருப்பு எப்பொழுது விலகும் என்று ஜெபித்துக் கொண்டிருந்தான். அவன் ஜெபிக்கும் போதே கர்த்தரிடத்திலிருந்து கட்டளை பிறந்தது. ஆனால் அந்த பதில் வந்து சேரக் கூடாதபடிக்கு பெர்சியா ராஜ்யத்தின் அதிபதியாய் காணப்பட்ட பொல்லாத சத்துரு  இருபத்தியொன்று  நாள்மட்டும் எதிர்த்து நின்றான் என்று வேதம் கூறுகிறது. பிரதான ஆசாரியனாகிய யோசுவா கர்த்தருக்கு ஊழியம் செய்யும்படிக்கு நின்றான். ஆனால் சாத்தான் அவனுக்கு விரோதஞ்செய்ய அவன் வலது பக்கத்திலே நின்றான். அவனுடைய அழுக்கு வஸ்திரங்களைச் சுட்டிக்காட்டி சுத்த மனசாட்சியோடு கர்த்தருக்கு ஊழியம்  செய்யக் கூடாதபடிக்கு குற்றப்படுத்துகிறவனாய் காணப்பட்டான். கர்த்தருடைய பிள்ளைகளே,  சத்துரு உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பர்வதங்களைப் போலத்  தடையாக எழுப்பக் கூடும். ஆனால் தடைகளை நீக்கிப்போடுகிற உங்கள் ராஜாவாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்,  அவர் உங்கள் தடைகளை நீக்கி,  வாசல்களை  உங்களுக்காகத் திறப்பார்.

குடும்பம் என்னும் பலிபீடத்தைத் தகர்த்துப் போடும் படிக்கு,  குடும்பங்களுக்கு விரோதமாகச் சத்துரு பர்வதத்தைப் போலத் தடையாக எழும்புவான். எலியாவின் நாட்களில் பலிபீடம் இடிந்து காணப்பட்டது,  அதை அவன் செப்பனிட்டான் என்று வேதம் கூறுகிறது. கர்த்தருடைய ஜனங்களுடைய குடும்பம் என்னும் பலிபீடத்தை நீங்கள் இந்நாட்களில் செப்பனிட வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.  பிலேயாமின் யோசனைகளுக்கும்,  யேசபேலின்  வேசித்தனங்களுக்கும்  இடம்கொடாதிருங்கள். கர்த்தருடைய பார்வையில் குடும்பமும் சபையும் ஒன்றாய் காணப்படுகிறது. ஆகையால் குடும்பங்களுக்குள்  அசுத்தங்கள் காணப்படலாகாது. பொல்லாத சத்துரு குடும்பங்களை உடைத்து அதின் மூலம் சபையை அழிக்க நினைப்பவன். ஆகையால் அவனுடைய தந்திரங்களை அறிந்து அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்,  அப்போது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church|
Mobile  +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *