என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார் (மத்தேயு 11:6).
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/ZR5sN4CuzHY
ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவான் ஸ்நானகனைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான். ஏனெனில், நீர் உன் சகோதரன் மனைவியை வைத்துக் கொள்வது உனக்கு நியாயமல்ல என்று அவனுக்குச் சொல்லியிருந்தான். ஏரோது அவனைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், ஜனங்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான். காவலிருந்து யோவான் ஸ்நானகன் இயேசு கிறிஸ்துவின் கிரியைகளைக் குறித்துக் கேள்விப்பட்டான். உடனே தன்னுடைய சீஷர்கள் இரண்டு பேரை அழைத்து, வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படிக்கு அனுப்பினான். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக, நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.
இயேசுவின் ஊழியத்தின் நாட்களில் அனேகர் அவரைக் குறித்து சந்தேகம் கொண்டு இடறல் அடைந்த வேளைகள் அனேகம் உண்டு. அவருடைய சகோதரர்கள் கூட அவரை மேசியா என்று விசுவாசிக்கவில்லை. அவருடைய சொந்த ஊரிலே யாரும் அவரை அங்கீகரிக்கவில்லை. இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா? இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறலடைந்தார்கள் (மத்தேயு 13:55-57). அவருடைய உபதேசமும் கடினமாயிருக்கிறது என்று சொல்லி இடறலடைந்து அனேகர் அவரை விட்டுப் பின்வாங்கிப் போனார்கள். ஒரு நாள் இயேசு தன்னுடைய சீஷர்களை நோக்கி, மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்ட வேளையில், அவர்கள், சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள் (மத். 16:13,14). இயேசு அனேகருடைய இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாய் காணப்பட்டார்.
இந்நாட்களில் கூட கர்த்தருடைய பிள்ளைகள்; இயேசுவின் நிமித்தம் இடறல் அடைகிற வேளைகள் உண்டு. அவருடைய வல்லமையைக் குறித்துச் சந்தேகப்படுகிறோம், இன்றும் அற்புதம் செய்கிறவராய் இயேசு இருக்கிறாரா என்று எண்ணுகிறோம். என்னுடைய ஜெபங்களைக் கேட்கிறரா என்றும் சந்தேகப்படுகிறோம். அவருடைய வருகை உண்மையா? இரகசிய வருகை உண்டா? என்றும் இடறல் அடைகிறோம். அனேக விசுவாசிகள் மற்றவர்களை, புதிய ஆத்துமாக்களை, சபைகளில் இடறல் அடையும்படி செய்கிறார்கள். அவர்களைக் குறித்து கர்த்தர் கூறும் போது, சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டி சமுத்திரத்தின் ஆழத்தில் அவனைப் போடுவது நல்லது. இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ என்றும் கர்த்தர் எச்சரித்தார். அதுபோல அனேக ஊழியக்காரர்களும் வேறொரு இயேசுவைக் குறித்தும், வேறொரு ஆவியைக் குறித்தும், வேறோரு சுவிஷேசத்தைக் குறித்தும் பேசி, ஜனங்களை இடறலடையும்படிக்கு செய்கிறவர்களாய் காணப்படுகிறார்கள். வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறவர்களும் உண்டு. உலகத்தின் முடிவுக்கும் உம்முடைய வருகைக்கும் அடையாளம் என்ன என்று சீஷர்கள் கேட்ட வேளையில், அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக் கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள் (மத்தேயு 24:10) என்று இயேசு கூறினார்.
இயேசு சொல்லுகிறார், என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் பாக்கியவான். ஆண்டவரைக் குறித்தும், அவருடைய பிறப்பைக் குறித்தும், அவருடைய வல்லமை அதிகாரத்தைக் குறித்தும், சிலுவை மரணத்தைக் குறித்தும், உயிர்த்தெழுதலைக் குறித்தும், அவருடைய வார்த்தையைக் குறித்தும், வருகையைக் குறித்தும், இயேசுவைப் பற்றிய சகல காரியங்களைக் குறித்தும் சற்றும் சந்தேகப்படாமல் காணப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். வேதத்தில் எழுதப்பட்டவைகள் எல்லாம் நமக்காகவும் நம்முடைய பிள்ளைகளுக்காகவும் எழுதப்பட்டவைகள், என்று முழுமையாய் அவைகளை விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள். அப்படிப்பட்ட பாக்கியவான்களாய் காணப்படக் கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar