இயேசுவின் பெருமூச்சு(Jesus sighed deeply).

அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு, இந்தச்  சந்ததியார்  அடையாளம் தேடுகிறதென்ன? இந்தச்  சந்ததியாருக்கு  ஒரு அடையாளமும் கொடுக்கப்படுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மாற்கு 8:12).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/jZjx_XUbmvE

இயேசு ஏழு அப்பங்களையும், சில சிறுமீன்களையும் எடுத்து ஸ்தோத்திரம் பண்ணி, ஏறக்குறைய நாலாயிரம் பேரைப் போஷித்த பின்பு  தம்முடைய சீஷரோடே கூடப் படவில் ஏறி, தல்மனூத்தாவின்  எல்லைகளில் வந்தார். அப்பொழுது பரிசேயர் வந்து ஆண்டவரோடு  தர்க்கித்து  வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக்  காட்டுப்படிக்குக்  கூறினார்கள்.   அந்த வேளையில் அவர்களுடைய அவ்விசுவாசத்தின் நிமித்தம் ஆண்டவர் பெருமூச்சுவிட்டார். பெருமூச்சு அனேக வேளைகளில் அதிக வருத்தத்தின் நிமித்தமும்,பாரத்தின் நிமித்தமும் வெளிப்படுகிறது. என் போஜனத்துக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது,என் கதறுதல் வெள்ளம்போல் புரண்டு போகிறது என்று யோபு தன்னுடைய வேதனையின் நிமித்தம் கூறினார். என் பெருமூச்சினால்  இளைத்துப்போனேன் என்று  சங்கீதக்காரன்  கூறினான்.  இஸ்ரவேல் ஜனங்களும் எகிப்தில் அடிமைகளாய்  காணப்பட்ட வேளையில்  தங்கள் வேதனைகளைப் பெருமூச்சுகளாக வெளிப்படுத்தினார்கள். ஆண்டவரும் தன்னுடைய சொந்த ஜனங்கள் மத்தியில் அனேக அற்புதங்களாலும்,அடையாளங்களாலும் தன்னை மேசியா என்று வெளிப்படுத்தியும் தன்னை அவர்கள்  விசுவாசியாமல் சந்தேகப்பட்டதினால் ஆவியில் அதிக  துக்கமுற்று  பெருமூச்சு விட்டு,அவர்களை விட்டு மீண்டும் படவில் ஏறி அக்கரைப்பட்டார்.

 கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் அதிகமாய் நேசித்தவர்கள் உங்களை வெறுக்கும் போதும், நீங்கள் மிகவும் நம்பினவர்கள் உங்களைக் கைவிடும் போதும்,உங்களால் பல உதவிகளைப் பெற்றவர்கள் உங்கள் தேவைகளின் நேரத்தில் மறந்து போகும் போதும்,நீங்கள் பெற்ற பிள்ளைகள் உங்களை உதாசீனம் செய்யும் போதும்,உங்கள் வேதனைகளும் பெருமூச்சுகளாய் வெளிப்படக் கூடும். கர்த்தருடைய ஊழியத்தைச் செய்கிறவர்களும்கூட தங்கள் ஊழியங்களின் பாதைகளில் பெருமூச்சு விடுகிற வேளைகள் வரும். பல வருடங்களாய் சபையிலிருந்தும் கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்டும் வாழ்க்கையில் மாற்றம் இல்லாதபடிக்கு  கிறிஸ்துவை  அறியாத உலகத்தானைப் போல மாமிசத்தில் காணப்படுகிற விசுவாசகளினிமித்தம் போதகர்கள் பெருமூச்சு விடுகிற நேரங்கள் உண்டு. மேய்ப்பனுடைய சத்தத்தை அறியாத  ஆடுகளின் நிமித்தம்   பெருமூச்சுவிடுவதுமுண்டு. சபை என்னும் அழகிய தோட்டத்தில் ஒருமனதைக் கெடுக்கிற சில குள்ளநரிகள் மூலம்  பெருமூச்சுவிட்டழுகிற  நேரங்கள்  உண்டு.  இஸ்ரவேல் ஜனங்களுடைய பெருமூச்சைக் கேட்டு அவர்களை விடுவித்த தேவன், உங்கள் புலம்பலின் பெருமூச்சைக் கேட்டு உங்களுக்குப் பதில் செய்வார். ஆகையால் சோர்ந்து போகாதிருங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *