ரோமர் 12:1. அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/hLoUfHmdqr4
கருப்பாக பிறந்தவன் சிவப்பாக மாறவேண்டுமென்று அநேக கிரீம் போடுவதுண்டு. சிலர் Body Lotion என்று சொல்லக்கூடிய கிரீம் போடுவதுண்டு. சிலர் தங்கள் நிறம் மாறுவதற்கு சில மாத்திரைகளும் சாப்பிடுவதுண்டு. வெள்ளையாக பிறந்தவர்களும் தாங்கள் நிறம் வெயிலால் மாறிவிடக்கூடாது என்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதுண்டு. திருமணம் நிச்சயிக்கப்பட்டவுடன் தங்கள் சரீரத்தை அதிகமாக பேணிக்காப்பதுண்டு. சரீரம் கவர்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக உடற்பயிற்சி செய்வது உண்டு. இப்படி ஒருபுறமிருக்க நம்முடைய சரீரம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்?
முதலாவது நம்முடைய சரீரம் பரிசுத்தமாய் இருக்கவேண்டும். பாவ கறைகள் இல்லாமல் இயேசுவின் ரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். நம்முடைய சரீரத்தை காமவிகாரத்திற்கும், வேசித்தனத்திற்கும், விக்கிரக ஆராதனைக்கும், குடிவெறிக்கும் பயன்படுத்தக் கூடாது. நாமெல்லாரும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்கிறோம் என்று வசனம் சொல்லுகிறது. ஆகையால் சபையில் சரீரத்திற்கும் மாம்சீகத்திற்கும் ஒருபோதும் நாம் இடம் கொடுக்கலாகாது. உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும் (மத்தேயு 5:29). நம்முடைய சரீரத்தில் ஒரு பாகமும் கெட்டுப்போகாமல் பரிசுத்தத்திற்கு ஒப்புக்கொடுக்கிறவர்களாய் நாம் காணப்படவேண்டும்.
இரண்டாவதாக நம்முடைய சரீரத்தை தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும். உங்கள் சரீரம் தேவன் தங்கும் ஆலயம் என்று வசனம் சொல்லுகிறது. தாவீது சொல்கிறான் ஆண்டவரே உமக்கு பிரியமானதை செய்ய எனக்கு கற்று தாரும் என்று தன்னை சமர்ப்பிக்கிறவனாக காணப்படுகிறான். ஆகையால் தான் ஆண்டவரும் கூட தாவீதை பார்த்து இவன் என் இருதயத்திற்கு ஏற்றவன் என்று சொல்லிகிறவராய் காணப்படுகிறார். நம்முடைய சரீரத்தை அநேக உலக வேலைக்கு உபயோகப்படுத்துகிறோம். ஆனால் தேவ இராஜ்யம் கட்டப்படுவதற்கு நம்முடைய சரீரத்தை ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க தவறிவிடுகிறோம். ஒரு கிருஸ்துவ நண்பரிடம் வந்து ஒரு அரசியல்வாதி தன்னுடைய தலைவனுக்கு போஸ்டர் ஒட்ட அழைத்தார். அதற்கு கீழ்ப்படிந்து அவன் போய்விட்டான். அதே நபரிடம் சபையில் நாற்காலியை போடுமாறு கேட்டதற்கு அவன் செவி சாய்க்காமல் போய்விட்டான்.
தேவ ஜனமே ஆண்டவர் நமக்கு இரண்டு முக்கியமான காரியங்கள் நிமித்தம் புத்தியுள்ள ஆராதனை செய்ய கற்றுக்கொடுத்திருக்கிறார். புத்தியுள்ள ஆராதனை என்பது நடனமும், வித விதமான ஒளியும், வெறும் வாய் வார்த்தைகளும் அல்ல. புத்தியுள்ள ஆராதனை என்பது உங்கள் சரீரத்தை பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும். அதுவே புத்தியுள்ள ஆராதனை. புத்தியுள்ள ஆராதனை செய்வதற்கு நம்மை நாமே அர்ப்பணிப்போம்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org