ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள் (யாத். 1:12).
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் காணப்பட்ட வேளையில், அங்கே நிலங்களைக் கையாட்சி செய்து மிகவும் பலுகிப்பெருகினார்கள். யாக்கோபு எகிப்தில் பதினேழு வருடம் காணப்பட்டு பின்பு மரித்தான், அதுபோல யோசேப்பு எகிப்தின் அதிகாரியாக சுமார் எண்பது வருடங்கள் காணப்பட்டு பின்பு மரித்தான், யோசேப்பின் சகோதரர்கள் யாவரும், அந்த தலைமுறையார் எல்லாரும் மரித்தார்கள். அதன்பின்பு யோசேப்பை அறியாத புதிய ராஜா எகிப்தில் தோன்றி, இஸ்ரவேல் ஜனங்கள் மீண்டும் பெருகாதபடிக்கு அவர்களுக்கு விரோதமாகப் பல தந்திரங்களைப் பண்ணினான். அவர்களைச் சுமை சுமக்கிற வேலையினால் ஒடுக்கும் படிக்கு விசாரணைக்காரரை வைத்து பித்தோம் ராமசேஸ் பட்டணங்களைக் கட்டுவித்தான். ஆனால் எவ்வளவாக ஒடுக்கினார்களோ அவ்வளவாய் இஸ்ரவேல் ஜனங்கள் பலுகிப் பெருகினார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே, பூமியில் நாம் நம்பிக்கை வைத்திருக்கிற யோசேப்புகளைப் போன்ற வேலைகள், தொழில்கள், ஐசுவரியமும் ஆஸ்திகளும் ஒரு நாள் நம்மை விட்டுக் கடந்து சென்றுவிடலாம். வேலை ஸ்தலங்களில் நமக்கு உதவி செய்கிற அதிகாரிகள் மாறி, நம்மையறியாதவர்கள் வந்து நம்மை ஒடுக்கலாம். ஆனால் கர்த்தர் உங்களோடு கூட இருந்து உங்களைப் பெருகச்செய்வார். ஆபிரகாம் ஒருவனாய் இருக்கையில் அவனை ஆசீர்வதித்துப் பெருகச் செய்த கர்த்தர், உங்களையும் ஆசீர்வதித்துப் பெருகச் செய்வார்.
ஆதிசபையின் நாட்களில், தேவனுடைய ஜனங்கள் பெருகாதபடிக்கு, இயேசு கிறிஸ்துவின் நாமத்தைக் குறித்து எவ்வளவும் பேசக் கூடாதபடிக்கு, ஆசாரியர்களும், வேதபாரகர்களும், பரிசேயர்களும், சதுசேயர்களும் அப்போஸ்தலர்களைப் பயமுறுத்தி, பலவிதங்களில் ஒடுக்கினார்கள். ஆனால் மூவாயிரம், ஐயாயிரம் என்று கர்த்தருடைய ஜனங்கள் பலுகிப் பெருகினார்கள், தேவவசனம் விருத்தியடைந்து பெருகிற்று என்று வேதம் கூறுகிறது. திரளான புருஷர்களும், ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடம் அதிகமாய் சேர்க்கப்பட்டார்கள். நாகரீகங்கள் வளர்ந்த இந்நாட்களிலும் கூட அனேக நாடுகளில் கர்த்தருடைய ஜனங்கள் ஒடுக்கப்பட்டு, உபத்திரவப்படுத்தப் படுகிறார்கள், சபைகள் அடைக்கப்படுகிறது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் வைத்த விசுவாசத்தின் பொருட்டு இரத்தசாட்சிகளாக அனேகர் கொலை செய்யப்படுகிறார்கள். கோதுமை மணிகள் நிலத்தில் விழுந்து சாகும் போது அது மிகுந்த பலனைக் கொடுக்கும் என்பது கர்த்தருடைய வார்த்தையாகக் காணப்படுகிறது. ஆகையால் பரிசுத்தவான்களின் ஒவ்வொரு இரத்தத்தின் துளிகளும் பூமியில் சிந்தப்படும்போது, அது அனேக ஜனங்களைக் கர்த்தரண்டை கொண்டுவருகிறது. ஆகையால் ஒடுக்கங்களையும், நெருக்கங்களையும் கண்டு சோர்ந்து போகாதிருங்கள், உங்கள் பெருக்கத்தின் நாட்கள் துரிதமாய் வருகிறது.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar