எண் 8:19. லேவியர் இஸ்ரவேல் புத்திரருடைய பணிவிடையை ஆசரிப்புக் கூடாரத்தில் செய்யும்படிக்கும், இஸ்ரவேல் புத்திரருக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கும், இஸ்ரவேல் புத்திரர் தாங்களே பரிசுத்த ஸ்தலத்தில் சேருகிறதினால் இஸ்ரவேல் புத்திரரில் வாதையுண்டாகாதபடிக்கும், லேவியரை அவர்களிலிருந்து எடுத்து, ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் தத்தமாகக் கொடுத்தேன் என்றார்.
இஸ்ரவேல் கோத்திரத்தில் லேவியர்களை கர்த்தர் பிரித்தெடுத்தார். லேவியர்களை இஸ்ரவேல் ஜனங்களில் பிறக்கும் முதற்பலன்களுக்கு பதிலாக ஆசாரிப்புகூடாரத்தில் பணிவிடை செய்யும் படியாக தெரிந்துகொண்டார். அவர்களை ஆசாரிய ஊழியம் செய்கிற ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் தத்தமாகக் கொடுத்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். தத்தமாக என்று சொன்னால் பரிசாக என்று அர்த்தம். ஆரோனை போல அழைக்கப்பட்டால் ஒழிய ஒருவனும் ஆசாரிய ஊழியத்திற்கு வரலாகாது என்று வசனம் சொல்லுகிறது. ஆனால் பணிவிடை செய்யும்படியாக கர்த்தர் சபையில் உள்ள அனைவரையும் தத்தமாக தெரிந்துகொள்ளவேண்டும் என்று வாஞ்சை உள்ளவராக இருக்கிறார். காரணம் வசனம் சொல்லுகிறது உலகமெங்கும் போய் சீஷர்களை உருவாக்கவேண்டும் என்பதாக.
நீங்கள் உங்களுக்கு பிரியமானவர்களுக்கு பிறந்தநாளுக்கோ இல்லை திருமண நாலுக்கோ இல்லை வேறே ஏதொரு விசேஷத்திற்கு போகும்போது நல்ல விலையுயர்ந்த பரிசை வாங்கி செல்லவேண்டும் என்று விருப்பப்படுவீர்கள். கடைக்கு சென்று எந்த பரிசு சிறந்ததோ அவற்றை வாங்கிசெல்லுவீர்கள். அதுபோலத்தான் சபையிலிருக்கும் உங்கள் அனைவரையும் கர்த்தர் தத்தமாக, பரிசாக தெரிந்துகொண்டுள்ளார். ஆகையால் நீங்கள் ஒவ்வொருவரும் விசேஷித்தவர்கள். சபையில் அநேக வேலைகள் உண்டு. அவற்றை செய்வதற்கு ஒரு சில ஆட்கள் என்று அல்ல அனைவரும் முன்னுவர்ந்து பணிகளை செய்ய வேண்டும் என்று கர்த்தர் விருப்பமுடையவராய் இருக்கிறார்.
மோசேக்கு துணையாக 70 பேரை கர்த்தர் நியமித்தபோது அவர்கள் அனைவரும் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். அவர்களில் இரண்டு பேர் பாளையத்திலே இருந்துவிட்டார்கள். அவர்களும் பாளையத்திலிருந்தவாறு தீர்க்கதரிசனம் சொன்னார்கள். அப்பொழுது யோசுவா அந்த இரண்டு பேரும் தீர்க்கதரிசனம் உரைக்காதவாறு தடைப்பண்ணும் என்று மோசேயிடம் சொன்னான். அதற்கு மோசே: நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே என்றான் (எண் 11:29). அதுபோல சபையில் எல்லாரும் சபையிலிருக்கும் சிறியதோ பெரியதோ வேலைகளை செய்யவேண்டும் என்று அனைவரையும் தத்தமாக பரிசாக தெரிந்துகொண்டுள்ளார். நீங்கள் யாவரும் கர்த்தருடைய பரிசு. ஆகையால் அந்த எண்ணத்துடன் அவருடைய இராஜ்யத்தை கட்ட முன்வாருங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org