எண் 20:12. பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்திற்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார்.
இஸ்ரவேல் ஜனங்கள் சீன்வனாந்தரத்தில் தண்ணீரில்லை என்று முறுமுறுத்தபோது ஆண்டவர் மோசேயிடம் கன்மலையை பார்த்து பேசு என்று சொன்னார். ஆனால் மோசே கன்மலையை அடித்துவிட்டான். கன்மலையாகிய கிறிஸ்து சிலுவையில் ஒருமுறை தான் அடிக்கப்படவேண்டும். அதன்பின்பாக சிலுவையில் அடிக்கப்பட்ட கன்மலையாகிய கிறிஸ்துவை பார்த்து பேச தான் வேண்டும். ஆனால் மோசே கர்த்தரின் சொல்லுக்கு கீழ்ப்படியாமல் கன்மலையை அடித்துவிட்டான். இந்த ஒரே ஒருவிசயத்தில் தான் மோசே கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் போய்விட்டான். அதன் விளைவு கர்த்தர் அவனை கானானுக்குள் பிரவேசிக்கக்கூடாது என்ற தீர்ப்பை கொடுத்துவிட்டார்.
இஸ்ரவேல் ஜனங்கள் சுமார் 10 முறை கர்த்தரை கோபப்படுத்தினபிறகுதான் அவர்களை பார்த்து ஆண்டவர் கானானுக்குள் பிரவேசிக்கக்கூடாது என்ற தீர்ப்பை கொடுத்தார். ஆனால் மோசேக்கோ அவன் செய்த ஒரு கீழ்ப்படியாமையினிமித்தம் சுமார் 40 வருடங்கள் பிரயாசத்திற்குப்பிறகும் கூட கர்த்தர் அவனை எல்லாருக்கும் முன்பாக தண்டிக்கவேண்டியதாகிவிட்டது. எவனுக்கு அதிகமாக கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகமாக கேட்கப்படும்.
இருந்தாலும் கர்த்தர் நல்லவர். சுமார் 1500 வருடங்களுக்கு பிறகு ஆண்டவர் மோசேயை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானானுக்குள் வரும்படியாக மோசேக்கு கர்த்தர் அநுக்கிரகம் பண்ணினார். ஆண்டவர் அவருடைய பிள்ளைகளை கனப்படுத்துகிறவர். மறுரூபமலையில் இயேசுவோடுகூட கானானுக்குள் பிரவேசிக்கும் சிலாக்கியதை கர்த்தர் மோசேக்கு கொடுத்தார்.
மோசேயின் கீழ்ப்படியாமையினிமித்தம் கன்மலையை அடித்தபோது தண்ணீர் வந்ததா இல்லையா என்று பார்த்தால், தண்ணீர் வந்தது. மோசே கீழ்ப்படியாதபோது ஏன் கர்த்தர் தண்ணீரை வரவழைத்தார்? காரணம் அவர் ஜனங்கள் மீது வைத்த அன்பு. அவருடைய அன்பு மாறாது. இன்றும் அநேக மேடைகளில் கூட்டங்களில் கர்த்தர் அற்புதங்களை செய்கிறார் என்றால் அது கர்த்தர் ஜனங்கள் மீது வைத்த அன்பு.
எத்தனையோ முறை கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாதவர்களாய் இருந்தபோதும், இன்றும் இயேசு உங்கள் மீது அன்பாகவே இருக்கிறார். அவருடைய நேசத்திற்குள் வந்துவிடுங்கள். இனிமேல் இயேசுவுடைய வார்த்தைக்கு செவிசாய்த்து கீழ்ப்படிந்து நடக்க உங்களை ஒப்புக்கொடுங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org