திரித்துவம், திரியேகத்துவம்:-

I யோவான் 5:7. பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;

தமிழில் Trinity என்ற வார்த்தைக்கு திரித்துவம் மற்றும் திரியேகத்துவம் என்ற அர்த்தம் உண்டு. திரித்துவம் என்றால் மூன்று என்று அர்த்தம். திரியேகத்துவம் என்றால் மூன்றாய் இருந்தாலும் அது ஒன்றாய் இயங்குவது என்று அர்த்தம். தேவனின் திரித்துவம் உண்டு. அவர் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாக இருக்கிறார். அவரால் ஒருவராகவும், அதேநேரத்தில் பிரிந்து மூவராகவும் செயல்பட முடியும். அதாவது அவர் திரித்துவராகவும், திரியேகத்துவராகவும் செயல்பட முடியும்.

இவற்றை புரிந்துகொள்வது மிகவும் எளிது. ஒரு மனிதனுக்குள் ஆவி, ஆத்துமா, சரீரம் என்ற மூன்று பகுதிகள் இருக்கிறது. ஆனால் மனிதன் உயிரோடிருக்கும் நாளெல்லாம் இந்த மூன்றையும் தனி தனியாக பிரிக்க முடியாது. திருத்துவதை புரிந்துகொள்ளாதவர்கள் கிறிஸ்துவத்தில் மூன்று தெய்வங்களா என்று கேட்கிறார்கள். வசனம் சொல்கிறது இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் (உபா 6:4) என்பதாக.

உதாரணத்திற்கு சில வருடங்களுக்கு முன்பாக டேப் ரெக்கார்டர் இரண்டில் ஒன்று (two in one) என்றும் பின்பு மூன்றில் ஒன்று (three in one) என்றும் வந்தது. ஒரு பொருளில் திட, திரவ, வாயு என்ற மூன்று பொருள்கள் காணப்படுகின்றன. சாதாரணமாக திரவமாக தண்ணீரை காண்கிறோம், அதை உறைய வைத்தால் ஐஸ் கட்டியாக திடமான பொருளாய் காணப்படுகிறது. சூடாக்கினால் வாயு பொருளாக நீராவியாக வெளியே வருகிறது. கிணற்றிலிருந்து தண்ணீர் இறைப்பதற்கு பெரிய கயிறை பயன்படுத்துவார்கள். பார்ப்பதற்கு ஒரு கயிறாக இருக்கும், ஆனால் பிரித்து பார்த்தால் மூன்று சிறிய கயிறாக இருக்கும். அது ஒரு கயிறா என்று கேட்டால், இல்லை இது மூன்று கயிறு என்று சொல்லுவார்கள். இது மூன்று கயிறா என்று கேட்டால் இல்லை மூன்றையும் இணைத்து ஒன்றாய் இருக்கிறது என்று சொல்லுவார்கள். அதுபோலத்தான் தேவன் மூன்று விதமாக செயல்படுகிறார்.

திரித்துவதை சரியாக ஏற்றுக்கொள்ளாத கிறிஸ்துவர்கள் சிலர் பிரிவினைவாதிகளாக யெகோவாவையே நம்புகிறோம் என்றும், சில பிரிவினர்கள் இயேசு நாமம் மட்டும் என்று வாதிடுகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் நாம் ஆராதிக்கிற தேவன் திரித்துவ தேவன். நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம் என்று இயேசு சொன்னார். சிருஷ்டிப்பிலே பிதா உண்டாகக்கடவது என்று சொன்னார்(ஆதி 1:3). குமாரன் தான் பேசப்பட்ட வார்த்தையாய் இருந்தார் (யோவா 1:1). ஆவியானவர், தம்முடைய வல்லமையினால் அசைவாடி யாவற்றையும் சிருஷ்டித்தார்(ஆதி 1:2). மனிதனை படைக்கும்போது என்னுடைய சாயலில் என்று சொல்லாமல் நமது சாயலில் உண்டாக்குவோமாக என்று சொல்லி மனிதனை சிருஷ்டித்தார். நாம் அனைவரும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்னும் திரியேக தேவனின் சாயலில் சிருஷ்டிக்கப்பட்டவர்கள். ஆம் நம் ஆண்டவர் திரித்துவ திரியேக தேவன்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *