உபா 1:13. நான் உங்களுக்கு அதிபதிகளை ஏற்படுத்தும்பொருட்டு, உங்கள் கோத்திரங்களில் ஞானமும் விவேகமும் அறிவும் உள்ளவர்கள் என்று பேர்பெற்ற மனிதரைத் தெரிந்துகொள்ளுங்கள் என்று சொன்னேன்.
தலைமைத்துவத்திற்க்கு முதலாவது தகுதி ஞானம்(Wisdom). ஞானத்திற்கும் அறிவுக்கும் வித்தியாசம் உண்டு. அறிவு என்பது படிப்பதினால் வருவது. ஞானம் என்பது பல்வேறு சோதனைகளின் ஊடாக செல்லும்போது கற்றுக்கொள்வது தான் ஞானம். அநேகர் வேதாகமத்தை தன்னுடைய அறிவிற்காக, அறிவை பெருக்கி கொள்வதற்காக படிக்கிறார்கள். அறிவு இறுமாப்பை உண்டாக்கும் என்று வசனம் சொல்கிறது. அப்படி படிப்பவர்கள் வேதாகமத்திலிருக்கும் தெய்வீக வெளிப்பாட்டை பெற்றுக்கொள்ளமாட்டார்கள். நீதிமொழிகள் புஸ்தகத்தை வாசிக்கும்போது ஞானத்தை குறித்து அநேக காரியங்களை அறிந்துகொள்ளலாம். எதை எந்த நேரத்தில் செய்யவேண்டும், எதை எந்த நேரத்தில் பேசவேண்டும், எப்படி சரியான தீர்மானங்களை எடுக்கவேண்டும் என்ற தெளிவு தலைமைத்துவத்திலிருப்பவர்களுக்கு கண்டிப்பாக அவசியம்.
இரண்டாவதாக விவேகம் (Experience) என்ற தகுதி தலைமைத்துவத்தில் இருப்பவர்களுக்கு அவசியம். தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர் (2 கொரி 1:4) என்று வசனம் சொல்லுகிறது. உபத்திரவத்தினூடாக செல்லும்போது தான் அநேக அனுபவங்கள் வருகிறது. பவுல், பேதுரு போன்ற அநேக பரிசுத்தவான்கள் அநேக உபத்திரவங்களை சந்தித்தார்கள். அதின் மூலம் அநேக அனுபவங்களை பெற்றுக்கொண்டு விவேகமாக செயல்பட்டார்கள். அது போல தேவ ஜனங்களுக்கு வருகிற நெருக்கம், கண்ணீர், பாடுகள், உபத்திரவம் மூலமாக நல்ல அனுபவத்தை பெற்றுக்கொண்டு கீழே வேர்பற்றி மேலே கனி கொடுக்கிறவர்களாக காணப்பட வேண்டும்.
மூன்றாவதாக அறிவு (Descernment) என்ற தகுதி மிக முக்கியமான ஒன்று. ஆண்டவருக்கும், பிசாசுக்கும் உள்ள வேறுபாட்டை பகுத்தறிவது மிக சுலபம். அதே வேளையில் ஆண்டவருக்கும் மனிதனுக்கும் உள்ள காரியங்களை பகுத்து பார்க்கக்கூடிய தகுதி தலைமைத்துவத்தில் இருப்பவர்களுக்கு வேண்டும். ஒருவன் ஆவிக்குரிய பிரகாரம் முடிவெடுக்கிறானா இல்லை சுயத்தினால் முடிவெடுக்கிறானா என்பது மிக அவசியம். பவுல் கொரிந்து சபையை பார்த்து சொல்லும்போது பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா? (1 கொரி 3:3) என்று சொல்லுவதை பார்க்கலாம். ஆவிக்குரிய காரியங்களை பகுத்துப்பார்க்கும் தகுதியை தேவ ஜனங்கள் பெற்றுக்கொள்ளவேண்டும்.
இம்மூன்று தகுதிகளையும் அணைத்து விசுவாசிகளும் பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறவர்களாக காணப்படவேண்டும்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org