அபிஷேகத்தினால் நுகங்கள் முறியும்(The Anointing Breaks the Yoke).

அந்நாளில் உன் தோளினின்று அவன் சுமையும், உன் கழுத்தினின்று அவன் நுகமும் நீக்கப்படும்,  அபிஷேகத்தின் நுகம் முறிந்துபோம் (ஏசாயா 10:27).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/gakjnHAZfoA

நுகம் என்பது  அடிமைப்படுத்தவும் கீழ்ப்படுத்தவும்  பயன்படுத்தப்படுகிறது.  எருதுகளைப்  பழக்கப்படுத்துவதற்கு  அனுபவமுள்ளவற்றோடு, அனுபவமில்லாதவற்றை நுகத்தில் இணைத்துவிடுவார்கள். அப்படிச்செய்யும் போது கொஞ்ச நாட்களில் அனுபவமில்லாதவையும் கீழ்ப்படிந்து அடங்கி விடும். வேதத்தில் பலவிதமான நுகங்களைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. சத்துரு பாவம் என்னும் நுகத்தையும், வியாதி என்னும் நுகத்தையும் ஜனங்கள் மேல் சுமத்துகிறான். கூனி ஒருத்தி பதினெட்டு வருஷமாய் ஆலயத்திற்கு வந்து சென்றாள், சத்துரு பலகீனமென்னும் நுகத்தை அவள் மேல் சுமத்தியிருந்ததை இயேசு கண்டு, ஆபிரகாமின்  குமாரத்தியாகிய  அவளை விடுவித்தார்.

மனுஷர்கள் சுமத்துகிற நுகங்கள் உண்டு. சாலொமோன் மரித்த பின்பு அவன் குமாரனாகிய ரெகொபெயாம் ராஜாவானான், அந்த வேளையில் இஸ்ரவேல் சபை அனைத்தும் அவனிடத்தில் வந்து, உம்முடைய தகப்பன் பாரமான நுகத்தை எங்கள்மேல் வைத்தார், இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த வரியென்னும் பாரமான நுகத்தையும் இலகுவாக்கும், அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள். ஆனால் அவன் முதியோர்களுடைய ஆலோசனையைத்தள்ளி,  தன்னோடே வளர்ந்து தன் சமுகத்தில் நிற்கிற வாலிபரோடே ஆலோசனை பண்ணினான். அவர்கள்  அவனை நோக்கி, உம்முடைய தகப்பன் எங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நீர் அதை எங்களுக்கு இலகுவாக்கும் என்று உம்மிடத்தில் சொன்ன இந்த ஜனத்திற்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால், என் சுண்டுவிரல் என் தகப்பனாருடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும். என் தகப்பன் பாரமான நுகத்தை உங்கள்மேல் வைத்தார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன், என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று நீர் அவர்களோடே சொல்ல வேண்டும் என்றார்கள். அப்படி அவன் அவர்களோடு சொன்னதின் நிமித்தம் இஸ்ரவேல் தேசம் இரண்டாகப் பிரிந்தது. இந்நாட்களிலும் வரிகள் என்னும் பாரத்தை ஏழை ஜனங்கள் மேல் நுகத்தடியாய் சுமத்தி, அவர்களுடைய கண்ணீரில் தங்கள் வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ளுகிற திரளான தலைவர்களும், அதிகாரிகளும் உண்டு.

பலவிதமான போதனைகள் என்னும் நுகத்தை ஜனங்கள் மேல் சுமத்துகிற ஊழியர்கள் உண்டு. இயேசுவின் ஊழியத்தின் நாட்களில் வேதபாரகர், பரிசேயர்கள், நியாயசாஸ்திரிகள் என்பவர்களைப் பார்த்துச் சுமக்க அரிதான சுமைகளை மனுஷர்மேல் சுமத்துகிறீர்கள், நீங்களோ உங்கள் விரல்களில் ஒன்றினாலும் அந்தச் சுமைகளைத் தொடவும் மாட்டீர்கள் என்று கடிந்து கொண்டார். இந்நாட்களிலும் பலவிதமான போதனைகளை ஜனங்கள் மேல் சுமத்தி அடிமைப்படுத்தி, தன்னைப் பின்பற்றும் படிக்கும், தன்னுடைய சபை கொள்கைகளை பின்பற்றும் படிக்குச் செய்கிற திரளான ஊழியர்கள் காணப்படுகிறார்கள்.

நுகங்கள் எப்படிப்பட்டவையாகக் காணப்பட்டாலும் கர்த்தர் உங்களை விடுவிக்கிறவர். கர்த்தர் அண்டை வந்து விடுங்கள். குமாரன் உங்களை விடுதலையாக்கும் போது மெய்யான விடுதலையைப் பெற்றுக்கொள்வீர்கள்.  அவருடைய சத்திய வசனத்தை  ; அறியும்போது, வசனம் உங்களை விடுதலையடையும் படிக்குச் செய்யும். கர்த்தர் ஆவியாயிருக்கிறார், ஆவியானவருடைய அபிஷேகம் சகல நுகத்தடிகளையும் முறிக்கிறது.  ஆகையால் உங்கள் மேல் காணப்படுகிற நுகங்கள் எதுவாய் இருந்தாலும் கர்த்தருடைய வல்லமை அவற்றையெல்லாம் முறித்து உங்களுக்கு விடுதலையைத் தர வல்லமையுள்ளது. 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *