எபி 12:14. யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/zUI9smJIero
பணம் இல்லாவிட்டால் கூட தேவனை தரிசித்துவிடலாம். வீடு வாசல் இல்லாவிட்டால் கூட தேவனை தரிசித்துவிடலாம். கல்வி, தொழில் போன்றவைகள் இல்லாவிட்டால் கூட தேவனை தரிசித்துவிடலாம். ஆனால் பரிசுத்தம் இல்லாமல் தேவனை ஒருவரும் தரிசிக்க முடியாது. பிதாவாகிய தேவன் நாம் அனைவரும் பரிசுத்தமாய் இருக்கும்படி கட்டளையிடுகிறார். மனிதன் நினைத்தான், பிதா பாவமே இல்லாத பரலோகத்தில் பரிசுத்தமாய் வாழ்வது எளிது. எங்களை போன்று பாவ உலகில் வாழ்ந்தால் தான் பரிசுத்தமாய் ஜீவிப்பது கடினம் என்பதாக. பிதாவாகிய தேவன் இயேசு என்னும் நாமத்தில் மனிதனாக இவ்வுலகில் அவதரித்து பரிசுத்தமாய் வாழ்ந்தார். ஒவ்வொரு மனிதனின் மீதும் தம் அன்பினிமித்தம் சிலுவையில் பரிசுத்த இரத்தத்தை ஊற்றிக்கொடுத்தார்.
பிதாவானவர் பரலோகத்திலிருந்து பரிசுத்தமாய் இருங்கள் என்று சொன்னார். இயேசு நமக்கு அருகில் பரிசுத்தமாய் வாழும்படி மாதிரியையும், அவருடைய இரத்தத்தினால் கழுவி சுத்திகரிக்கும்படி செய்தார். பரிசுத்த ஆவியானவர் என்ன செய்தார்? அவர் பரலோகத்திலிருந்து நேரடியாக வந்து, நமக்குள்ளே தங்கிவிட்டார். ஆகையால் நாம் பரிசுத்தமான ஜீவியம் செய்ய வேண்டும்.
அதற்காகத்தான் இயேசுவின் இரத்தம், அதற்காகத்தான் பரிசுத்த வேதாகமம், அதற்காக தான் பரிசுத்தவான்களின் ஐக்கியம், அதற்காகத்தான் பரிசுத்த ஆவியானவர், அதற்காகத்தான் பின்மாறி மழையை பொழிகிறார். எப்படியாவது இயேசுவின் வருகையில் ஒருகூட்ட ஜனங்கள் இரட்சிக்கப்படவேண்டும் என்று.
பரிசுத்தமாய் இருந்தால் தான் பரலோகத்தில் சீயோனில் வாசம் செய்ய முடியும். நீங்கள் அங்கே காணப்படுவீர்களா? ஜீவ புஸ்தகத்தில் உங்கள் பெயர் எழுதப்பட்டிருக்கிறதா? நித்தியத்தை குறித்து நம்பிக்கை இருக்கிறதா? இன்று இயேசுவின் வருகை இருக்குமென்றால் அவரோடு நீங்கள் சேர்த்துக்கொள்ள முடியுமா ? என்று உங்கள் ஆத்துமாவை பார்த்து கேட்டு பாருங்கள். பரிசுத்தமாய் வாழ்ந்து பரலோகத்தில் அநேகர் அழகாய் நிற்கிறார்கள். அந்த வரிசையில் நீங்கள் நிற்க முடியுமா? பேதுரு, யோவான், யாக்கோபு, பவுலோடு காணப்பட முடியுமா ? முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபை சந்திக்க முடியுமா? ஆட்டுக்குட்டியானவரை கண்டு மகிழ முடியுமா?
அழகாய் நிற்பவர்கள் வரிசையில் இருப்பவர்கள் ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தில் தங்கள் அங்கிகளை தோய்த்தவர்கள். ஆட்டுக்குட்டியானவரை பின்பற்றுகிறவர்கள். வேறுபிரிக்கப்பட்டவர்கள். அந்த வரிசையிலிருக்க பரிசுத்தத்தின்மேல் வாஞ்சையாய் இருங்கள். ஒவ்வொருநாளும் பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் அடையுங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org