இந்த உலகத்தில் அநேகர் தங்களுடைய இலக்கை அடைவதற்கு கடுமையாக ஓடி கொண்டிருக்கிறார்கள். கடுமையாக அதிகப் பிரயாசத்தோடு உழைத்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் எல்லாரும் தங்கள் இலக்கை அடைந்து விட்டார்களா? அநேகர் சொல்வது உண்டு. நீ கடினமாக உழைத்தால் இலக்கை அடைந்துவிடலாம் என்று. அப்படி என்று பார்த்தால் இந்த உலகத்தில் அநேகர் கடுமையாக உழைத்து கொண்டு தான் இருக்கிறார்கள். குறிப்பாக ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அநேகர் கடுமையாக உழைக்கிறார்கள். இருந்தும் அவர்களுடைய வாழ்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தங்களுடைய இலக்கை அடையவுமில்லை, இன்னும் வறுமை நிலையில் தான் இருக்கிறார்கள். ஆசீர்வாதமான வாழ்க்கை இல்லையே! அதிகப் பிரயாசத்தோடு ஓடி கடினமாக உழைத்தவர்கள் தங்கள் இலக்கை அடைந்ததுமில்லை, மிதமாக ஓடினவர்கள் அதிக தோல்வியை அடையவுமில்லை. ஆகையால் விரும்புகிறவனாலுமல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்(ரோமர் 9:16) என்று வேதம் சொல்லுகிறது.
ஒருவன் எவ்வளவுதான் அதிகப் பிரயாசத்தோடு ஓடினாலும், கடினமாக உழைத்தாலும் தேவனுடைய இரக்கம் பெறவில்லை என்றால் அல்லது தேவனுடைய இரக்கம் இல்லை என்றால், அவனால் வெற்றி பெறவும் முடியாது எத்தகைய இலக்கை அடையவும் முடியாது.
உதாரணத்திற்கு; யாக்கோபின் வாழ்க்கையை எடுத்து கொள்வோம் யாக்கோபு ஒரு கடின உழைப்பாளி தன்னுடைய மாமனாரின் ஆட்டு மந்தைகளை மேய்த்தவர். அவர்களுக்கு ஆசீர்வாதமாய் இருந்தவர். அவர் தன்னுடைய கடின உழைப்பினால் ஆசிர்வதிக்கப்பட்டார் என்று பார்த்தால் இல்லை, அவர் கடின உழைப்பினால் ஆசீவதிக்கபடவில்லை, தேவனுடைய தயவினாலும், இரக்கத்தினாலுமே ஆசிர்வதிக்கப்பட்டார். தேவனுடைய தயவு, இரக்கம், அவரோடு இருந்தது. நான் உன்னோடு இருப்பேன்(ஆதி.28:15) என்று கர்த்தர் அவருக்கு வாக்கு கொடுந்திருந்தார். ஆகையினால் அவர் ஆசீர்வதிக்கப்பட்டார் என்று பார்க்கிறோம்.
யோசேப்பின் சகோதரர்கள் கடின உழைப்பாளிகள் தன் தகப்பனாரின் ஆட்டு மந்தைகளை மேய்த்தவர்கள் ஆனாலும் அவர்களுடைய வாழ்க்கையில் எந்த ஒரு ஆசிர்வாதமும் இல்லை, எந்த ஒரு முன்னேற்றங்களும் இல்லை, தங்களுடைய குடும்பத்திற்கு ஆசிர்வாதமாகவும் இருக்கவில்லை காரணம் அவர்கள் கர்த்தருடைய இரக்கத்தை பெறவில்லை. ஒரு சமயம் இஸ்ரவேலிலே பஞ்சங்கள் வந்தபொழுது அவர்களால் தங்களுடைய குடும்பத்தை பாதுகாக்க முடியவில்லை அவர்கள் தானியத்திற்கு எகிப்திற்கு போக வேண்டியிருந்தது. இவர்களுடைய பிரயாசங்கள் ஓட்டங்கள் எல்லாம் மாமிசத்திற்கு ஏதுவாக இருந்தபடியினால் அவர்களால் எந்த ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் மறுபுறம் யோசேப்பை பார்த்தால் அவன் கடின உழைப்பாளி என்றோ? அல்லது உழைக்காதவன் என்றோ? நினைத்து விட முடியாது தனக்கு கொடுக்கின்ற வேலையை செய்பவன் அவ்வளவுதான். ஆனால் இவனுடைய ஓட்டங்கள் பிரயாசங்கள் எல்லாம் கர்த்தருக்குள் இருந்தபடியினால் கர்த்தர் அவனை எகிப்து தேசத்திற்கு முழுமைக்கும் ஆசீர்வாதமாக வைத்தார். கர்த்தருடைய இரக்கம், தயவு அவனோடு இருந்தது. கர்த்தர் யோசேப்போடே இருந்தார்(ஆதி39:2, 21) யோசேப்பின் நிமித்தம் கர்த்தர் எகிப்தை முழுவதுமாக ஆசீர்வதித்தார். அது மாத்திரமல்ல ராஜாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் கர்த்தர் அவனை உயர்த்தி வைத்தார் என்று பார்க்கிறோம்.
பிரியமானவர்களே! உங்கள் இலக்கை அடைய வேண்டும், குடும்பத்திலே ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அதிகப் பிரகாசத்தோடு ஓடுகிற நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளாக ஓடுங்கள். தேவனுடைய இரக்கம், தயவு இல்லாமல் ஓடுகிறவர்கள் எந்த இலக்கையும் அடைய முடியாது. ஒருவன் ஆசீர்வாதங்களை பெற வேண்டும், தான் நினைத்த இலக்கை அடைய வேண்டுமென்றால் அவன் அதிகப் பிரகாசத்தோடு கிறிஸ்வுக்குள்ளாய் ஓட வேண்டியது அவசியமாயிருக்கிறது. அவர்தான் உன்னை ஆசீர்வதிக்க முடியும். தேவனுடைய இரக்கம் தான் ஒரு மனிதனை ஆசீர்வதிக்க முடியுமே. எந்த ஒரு மனிதனுடைய கடின உழைப்போ பிரயாசங்களோ அவனை ஒருபோதும் ஆசீர்வதிக்கவே முடியாது. கர்த்தர் தான் ஒரு மனிதனை உயர்த்தவும், தாழ்த்தவும் முடியும். அது அவருக்கு லேசான காரியம். அவர் கரத்தில் தான் எல்லாம் உள்ளது. ஆகையால் நான் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன்(ரோமர் 9:15) என்பது கர்த்தருடைய வார்த்தை. அதிக பிரயாசத்தோடு கர்த்தருடைய இரக்கத்தை பெற்று கொண்டு ஓடுங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீவதித்து உயர்த்துவாராக.
David .P
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

