எதை செய்தாலும் அன்போடே செய்யுங்கள்.

கர்த்தர் அநேக காரியங்களை நம்முடைய வாழ்க்கையில் செய்ய விரும்புகிறார். அவர் நம்மேல் வைத்த அன்பு பெரியது. அவர் எதை செய்தாலும் அன்போடே செய்யக்கூடியவர். அவரை போன்று நாமும் எந்த காரியங்களை செய்தாலும் அன்போடே செய்யவேண்டும்(1கொரி16:14) என்று வேதம் சொல்லுகிறது.

கர்த்தர் பட்சபாதம் இல்லாதவர் எல்லோருக்கும் உதவி செய்கிற நல்ல தேவன். ஒருவேளை தேவனை அறியாத மனிதர்கள் கூட பாகுபாடுகள் பார்த்து உதவி செய்யலாம். சிலர் பெருமைக்காக செய்வார்கள். ஒரு சிலர் தமது நாம பிரஸ்தாபத்திற்காக செய்வார்கள். ஒருசிலர் பிறர் பார்க்கும் வண்ணமாக செய்வார்கள். நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறது உன் இடது கை அறியாதிருக்கக்கடவது;(மத் 6:3) என்று வேதம் போதிக்கிறது. கர்த்தருடைய பிள்ளைகள் அப்படி இருக்கலாகாது. நாம் எதை செய்தாலும் அன்போடே உற்சாகத்தோடு கொடுக்க வேண்டும். உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.

ஒரு முறை, இயேசு காணிக்கைப்பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, ஜனங்கள் காணிக்கைப்பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்; ஐசுவரியவான்கள் அநேகர் அதிகமாய்ப் போட்டார்கள்.
ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு துட்டுக்குச் சரியான இரண்டு காசைப் போட்டாள். அப்பொழுது அவர் தம்முடைய சீஷரை அழைத்து, காணிக்கைப்பெட்டியில் பணம்போட்ட மற்றெல்லாரைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாளென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்;
அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்து எடுத்துப்போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்(மாற்கு 12:41-44) அந்த ஏழை விதவைத்தாய் வறுமையான சூழ்நிலையிலும் கர்த்தர் மேல் வைத்த அன்பின் நிமித்தம் தன் ஜீவனத்திற்காக வைத்திருந்த எல்லா பணத்தையும் கர்த்தருக்கு செலுத்தினார்.

பிரியமானவர்களே!  நீங்கள் செய்கிற எந்த காரியங்களாக இருந்தாலும் அதை மனப்பூர்வமாக உற்சாகத்துடன் கூடிய அன்போடே செய்யுங்கள். அப்படி செய்யும் போது அதற்குண்டான பலன் இந்த பூமியிலே கிடைக்காமல் போனாலும் பரத்தில் கொடுக்கப்படும். திக்கற்றவர்களையும், விதவைகளையும் விசாரியுங்கள் என்று கர்த்தர் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். ஏழைக்கு கொடுக்கிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான்(நீதி19:17) இந்த மிகச் சிறியவரில் என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்று இயேசு சொல்வதை பார்க்க முடிகிறது. தேவ பிள்ளைகள் உற்சாகத்தோடு மனப்பூரவமாய் கொடுங்கள். சபை காரியங்களுக்கு உதவி செய்யுங்கள். ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்(யாக் 4:17) ஆக, உன்மையாய் அன்போடே செய்யுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீவதித்து உயர்த்துவாராக. ஆமென்…

David .P
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *