நேற்று வந்தவன்(You came only yesterday).

நீ நேற்றுதானே வந்தாய், இன்று நான் உன்னை எங்களோடே நடந்துவரும் படிக்கு அழைத்துக்கொண்டு போகலாமா? நான் போகக்கூடிய இடத்துக்குப் போகிறேன்,  நீ உன் சகோதரரையும் அழைத்துக் கொண்டு திரும்பிப்போ,  கிருபையும் உண்மையும் உன்னோடே கூட இருப்பதாக என்றான் (2 சாமு. 15:20).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/vb-D1yICrUM

தாவீது கித்தியனாகிய ஈத்தாயைப் பார்த்துச் சொன்ன வார்த்தையாக மேற்குறிப்பிடப்பட்ட வசனம் காணப்படுகிறது.  ஈத்தாய் தாவீதின்  ஊழியக்காரனாகி ஒரு நாள் தான் ஆனது. அப்போது  தாவீதின்  குமாரனாகிய  அப்சலோம்  தாவீதுக்கு விரோதமாக எழும்பினான். தாவீதோடு பல வருடங்களாய் காணப்பட்ட  அகித்தோப்பேல் என்ற ஆலோசனைக் காரனும்  அப்சலோமோடு  சோந்து கொண்டான். இஸ்ரவேலின் குடிகளில் திரளான பேரும் நன்றியில்லாதவர்களாக அப்சலோமோடு சேர்ந்து கொண்டார்கள். இச்செய்தியைக் கேள்விப்பட்ட  தாவீது  உயிருக்குப்  பயந்து தன் வீட்டாரோடு கால்நடையாய் புறப்பட்டான். அப்போது  கித்தியனாகிய  ஈத்தாயும் தாவீதோடு புறப்பட்டு அவனுடன் சென்றான். அந்த வேளையில் தாவீது அவனைப்பார்த்து நீயும் உன் சகோதரரும்  திரும்பிச் சென்று அப்சலோமோடு காணப்படுங்கள், நீ நேற்று தானே வேலைக்கு வந்தாய் என்றான். ஆனால்  ஈத்தாய் தாவீதைப் பார்த்து ராஜாவாகிய என் ஆண்டவன் எங்கேயிருப்பாரோ, அங்கே உமது அடியானும், செத்தாலும் பிழைத்தாலும் இருப்பான் என்று கர்த்தருடைய ஜீவனையும் ராஜாவாகிய என் ஆண்டவனுடைய ஜீவனையும் கொண்டு சொல்கிறேன் என்றான்.  அப்பொழுது தாவீது ஈத்தாயை நோக்கி: நடந்து வா என்றான், அப்படியே கித்தியனாகிய ஈத்தாயும் அவனுடைய எல்லா  மனுஷரும் அவனோடிருக்கிற எல்லாப் பிள்ளைகளும்  தாவீதோடு நடந்து போனார்கள்.

ஈத்தாய் தாவீதோடு வந்து சேர்ந்து ஒரு நாள் ஆகியிருந்தும் தன் உண்மையையும், உத்தமத்தையும் தாவீதுக்கு காண்பித்தான். சில வேளைகளில் பல வருடங்களாய் விசுவாசிகளாய் காணப்படுகிறவர்களைப்  பார்க்கிலும் சமீபத்தில் வந்தவர்கள் அதிக கனிகளைக் கொடுக்கிறவர்களாய் காணப்படுவதுண்டு. பல வருடங்களாய் நிறுவனத்தில் வேலைப் பார்ப்பவர்களைப்  பார்க்கிலும் சமீபத்தில் சேர்ந்தவர்கள் அதிக உத்தமமாய் காணப்படுவதுமுண்டு. பல வருடங்களாய் நம்மோடு இருப்பவர்கள் புரிந்து கொள்வதைப் பார்க்கிலும் சமீபத்தில் வந்தவர்கள் அதிகமாய் புரிந்து கொள்வது உண்டு. நீ நேற்று வந்தவன் என்று கூறி அப்படி வந்தவர்களை மனமடிவாக்குகிறவர்களும் உண்டு. ஆகையால் சமீபத்தில் நம்மோடு இணைந்துகொண்டவர்களை அற்பமாய் எண்ணாதிருங்கள். இயேசு பரலோக ராஜ்யத்தைப் பற்றிக் கூறிய உவமையில்; பரலோக ராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது, அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான். வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு பணம் கூலி பேசி, அவர்களைத் தன்  திராட்சத்தோட்டத்துக்கு  அனுப்பினான். மூன்றாம் மணிவேளையிலும் (காலை 9 மணி) அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைக் கண்டு நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான், அவர்களும் போனார்கள். அப்படியே ஆறாம் (மதியம் 12 மணி) ஒன்பதாம் ( மாலை 3மணி) பதினாராம் (மாலை 5 மணி) மணிவேளையிலும் அவன் போய் அப்படியே செய்தான்.  சாயங்காலத்தில், திராட்சத்  தோட்டத்துக்கு  எஜமான் தன் வேலைக்காரனை நோக்கி, நீ வேலையாட்களை அழைத்து, பிந்திவந்தவர்கள் தொடங்கி முந்திவந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலிகொடு என்றான். அப்பொழுது பதினோராம்  மணிவேளையில் வேலையமர்த்தப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள். முந்தி அமர்த்தப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள். வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானை நோக்கி, பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒரு மணி நேரமாத்திரம் வேலைசெய்தார்கள், பகலின் கஷ்டத்தையும் வெயிலின் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள். அவர்களில் ஒருவனுக்கு அவன் பிரதியுத்தரமாக, சினேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை, நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்குச் சம்மதிக்கவில்லையா?  உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்ததுபோலப் பிந்திவந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம். என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான். இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள் என்றார். 

இயேசு பிந்தினோரையும் முந்தினோராய் வைத்தது போல, தாவீது கூட கித்தியனாகிய ஈத்தாய், புறஜாதியானாய் காணப்பட்டிருந்தும் அவனை தன்னோடு காணப்பட்ட ஜனங்களில் மூன்றில் ஒரு பங்கின் அதிபதியாக வைத்தான் என்று 2சாமு.18:1,2ல் எழுதப்பட்டிருக்கிறது. சொந்த ஜனங்களாகிய யூதர்களுக்கு அவனை ஒப்புமைப் படுத்துகிறதைப் பார்க்கமுடிகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே, சமீபத்தில் இரட்சிக்கப்பட்ட உங்களுக்குள்ளாகவும் கேள்விகள் ஒருவேளைக் காணப்படக் கூடும். இன்னும் சில வருடங்களுக்கு முன்பாக மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டிருந்தால் கர்த்தருக்காக மற்றவர்களைப் போல இன்னும் அதிகக் காரியங்களைச் செய்திருக்கமுடியும் என்று. கர்த்தர் மற்றவர்களைப் போல உங்களையும் பிரகாசிக்கச் செய்ய வல்லவர். ஆகையால் உற்சாகமாய்  கர்த்தரைச் சேவியுங்கள். கர்த்தருடைய பணியைச் செய்கிறவர்களும் எல்லோரையும் கனத்திற்குரிய பாத்திரங்களாகவும், சமமாகவும் கருதுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *