உன்னைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்வேன்(I will look after you well).

இப்போதும், இதோ, உன் கைகளிலிடப்பட்ட விலங்குகளை இன்று நீக்கிப்போட்டேன், என்னோடே கூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்மையாய்த்தோன்றினால் வா, நான் உன்னைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்வேன், என்னோடே கூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்றாய்த் தோன்றாவிட்டால், இருக்கட்டும்: இதோ, தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது, எவ்விடத்துக்குப்போக உனக்கு நன்மையும் செவ்வையுமாய்க் காண்கிறதோ அவ்விடத்துக்குப் போ என்றான் (எரேமியா 40:4).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/1-l-7scjHzM

பாபிலோனிய ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் காவல் சேனாதிபதியாகிய நேபுசராதான் என்பவன் எரேமியா தீர்க்கதரிசியைப்  பார்த்துச் சொன்ன வார்த்தையாக மேற்குறிப்பிடப்பட்ட வசனம் காணப்படுகிறது.  நம்முடைய தேவன்  பட்சிக்கிறவனிடத்திலிருந்து  பட்சணத்தையும், பலவானிடத்திலிருந்து மதுரத்தையும் தருகிறவர். யூதாவின் குடிகள் நேபுகாத்நேச்சாரால் சிறைபிடிக்கப்படுவார்கள் என்றும், எருசலேம் தேவலாயம் இடிக்கப்படும் என்றும் கர்த்தருடைய வார்த்தையைச் சொன்ன எரேமியாவை தூக்கித் துரவில் போட்டார்கள், அதின் பின்பு விலங்கிடப்பட்டவனாய் காணப்பட்ட  எரேமியாவை, நேபுசராதான் கைகளிலிடப்பட்ட விலங்குகளை நீக்கி விடுதலையாக்கினான் என்று எரே. 40:-1-4ல் எழுதப்பட்டிருக்கிறது. தன்னுடைய  சொந்த ஜனங்கள் கர்த்தருடைய  வார்த்தையைச்  சொன்னதின் நிமித்தம்  உபத்திரவப்படுத்தினார்கள், ஆனால் பாபிலோனியனாகிய  நேபுசராதான் தயை பாராட்டினான். அதோடு அவன் கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிக்கிறவனாகவும் காணப்பட்டான். உன் தேவனாகிய கர்த்தர் இந்த ஸ்தலத்துக்கு இந்தத் தீங்கு வருமென்றுசொல்லியிருந்தார், தாம் சொன்னபடியே வரப்பண்ணியுமிருக்கிறார், நீங்கள் கர்த்தருக்கு விரோதமாய்ப்  பாவஞ்செய்து, அவருடைய சத்தத்துக்குச்  செவிகொடாமற்போனீர்கள், ஆகையால் உங்களுக்கு இந்தக் காரியம் வந்தது என்று  நேபுசராதான்  சாட்சி பகர்ந்தான். இந்நாட்களிலும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள்  கூட கர்த்தருடைய வார்த்தையை நம்பி மற்றவர்களுக்கு இரக்கம் பாராட்டுகிறார்கள். காவல் துறையைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் காற்றும் மழையின் நிமித்தம் மரம் முறிந்து விழுந்ததில் சிக்கிக் கொண்ட வாலிபனைக் காப்பாற்றின வேளையில் வேதத்தின் வார்த்தைகள் இப்படிப்பட்ட  நற்கிரியைகளைச்  செய்ய  என்னைத்  தூண்டினது என்று பேட்டி கொடுத்தார்கள்.  ஆனால் கர்த்தருடைய ஜனங்கள் வேதத்தின் மகத்துவங்களை அறிந்திருந்தும்  வேதத்திற்குப்  புறம்பான காரியங்களைச் செய்து, கர்த்தருடைய  நாமத்திற்குத்  தூஷணத்தைக்  கொண்டுவருகிறார்கள்.  

நேபுசராதான், எரேமியா தீர்க்கதரிசியுடைய விலங்குகளை நீக்கிப்போட்டது மாத்திரமல்ல, நீ என்னோடு பாபிலோனுக்கு வா, உன்னைப் பத்திரமாய் பார்த்துக் கொள்ளுவேன் என்றும் அன்போடு கூறுகிறதைப் பார்க்கிறோம். கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கும் என்பதைப் போல  கல்தேயனாகிய  நேபுசராதான் என்பவனுக்குள்ளும் இரக்கம் காணப்பட்டது. ஒருவேளை என்னோடே கூட  பாபிலோனுக்கு வர உனக்கு நன்றாய்த் தோன்றாவிட்டால், இதோ, தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது, எவ்விடத்துக்குப்போக உனக்கு நன்மையும் செவ்வையுமாய்க் காண்கிறதோ அவ்விடத்துக்குப்போ என்ற சுதந்திரத்தை  அவனுக்குக்  கொடுத்தான். கர்த்தருடைய பிள்ளைகளே பல கதவுகள் உங்களுக்கு அடைக்கப்பட்டிருக்கலாம், எதிர்பார்த்தவர்களிடமிருந்து  கூட இரக்கம் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் நீங்கள் எதிர்பாராதவர்களிடமிருந்து கர்த்தர் உங்களுக்கு உதவியைக் தருவார், ஆகையால் சோர்ந்து போகாதிருங்கள். 

எரேமியா பாபிலோனுக்கு போக விரும்பாததினால், அவன்  விரும்புகிற  இடத்திற்குப் போவதற்குரிய வழிச்செலவையும் வெகுமதியையும் கூட நேபுசராதான் கொடுத்து அனுப்பினான் என்று எரே. 40:5ல் எழுதப்பட்டிருக்கிறது. தேசம் முழுவதும் பஞ்சமும், பட்டினியும் காணப்பட்டது,  ஒன்றுமில்லாத ஏழைகளில் சிலரும் யூதா தேசத்திலே காணப்பட்டார்கள். அந்த வேளையிலும் கர்த்தருடைய ஊழியக்காரனுக்கு பணமும், வெகுமதியும் கிடைத்தது. காகத்தைக் கொண்டும், விதவையைக் கொண்டும் கூட கர்த்தர் தன்னுடைய  ஊழியக்காரர்களைப்  போஷிக்கிறவர்.  நீங்கள் கர்த்தரை உண்மையாய் பின்பற்றும் போதும், உங்கள் வழிகளில் மாறுபாடுகள் இல்லாமல் இருக்கும் போதும் கர்த்தர் உங்களை நடத்துவார்.  உத்தமனுக்குக் கர்த்தர் உத்தமராகவும், புனிதனுக்கு  புனிதராகவும்  காணப்படுவார். அவர் உங்களுக்கு ஆதரவாயிருப்பார், உங்களுக்கு ஒருகுறைவும் இல்லாமல் பார்த்துக் கொள்வார். உங்கள் பாடுகளையும், துக்கங்களையும் நீக்கி மகிழப்பண்ணுவார். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *