காயுவுக்களும், தியோத்திரேப்புகளும்(Gaius and Diotrephes).

பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான், தீமை செய்கிறவன் தேவனைக் காணவில்லை (3 யோவான். 11).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/ART0mW5fUm4

யோவான் தன்னுடைய வயோதிப காலத்தில், தன்னுடைய  ஊழியத்தினிமித்தம்  சந்திக்கப்பட்டு,  விசுவாசத்தில் வளர்ந்து, தன்னால் நிறுவப்பட்ட சபையின் அங்கமாகக் காணப்பட்ட, சத்தியத்தினிமித்தம்  தான் நேசிக்கிற பிரியமான காயுவுக்கு எழுதின நிருபம் மூன்று யோவானாய் காணப்படுகிறது. இந்த கடிதத்தில் இரண்டு முக்கியமான நபர்களைக் குறித்து எழுதுகிறார், ஒருவன் காயுவு, இன்னொருவன்   தியோத்திரேப்பு. இரண்டு பேரும் ஒரே சபையின் விசுவாசிகள் தான், ஆனால் அவர்களுடைய வளர்ச்சியிலும், கனிகொடுப்பதிலும் அனேக வித்தியாசங்கள் காணப்பட்டது. இந்நாட்களிலும் கூட, சபைகளில் பலவருடங்களாய் அனேகர் காணப்படுவார்கள். சிலர்  கனிகொடுக்கிறவர்களாகவும், சிலர்  கனிகொடாமல் பிரயோஜனமற்றவர்களாகவும் காணப்படுவதுண்டு.

காயுவு சத்திய வசனத்தில் வளர்ந்து, தான் கற்றுக்கொண்ட சத்தியத்தில் நடந்துகொள்ளுகிறவனாய் காணப்பட்டான். அதுபோல எதைச் செய்தாலும் உண்மையாய் செய்தான், அவனுடைய அன்பு மாயமற்றதாக காணப்பட்டது. ஆகையால் தான், சகோதரர் வந்து காயுவு சத்தியத்தில் நடந்துகொள்ளுகிறான் என்றும், அவனுடைய உண்மையைக்குறித்தும் சாட்சி கொடுத்த வேளையில் யோவான் மிகவும் சந்தோஷப்பட்டான். கர்த்தருடைய பிள்ளைகளே, பல வருட விசுவாசிகளாய் காணப்படுகிறோம். சத்திய வசனம் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறதா? உண்மையாய் காரியங்களைச் செய்து, ஊழியர்களை நேசித்து, தேவனுடைய ராஜ்யத்தின் விரிவாக்கப் பணிக்குப் பிரயோஜனமுள்ளவர்களாய் காணப்படுகிறோமா?. காயுவுடைய ஆத்துமா கர்த்தருக்குள் வாழ்ந்திருந்ததினால்,  யோவான் அவனுக்காகக் கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான். பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன் என்று சொல்லி,  அவனுடைய சரீர நன்மைகளுக்காகவும் ஜெபிக்கிறவனான காணப்பட்டான்.

தியோத்திரேப்பு நேர் எதிர்மறையாய் காணப்பட்டான். அப்போஸ்தலனாகிய யோவான் சபைக்கு  எழுதின நிருபத்தையே ஏற்றுக்கொள்ளாமல் ஒதுக்கினான். எல்லாவற்றிலும் முதன்மையாக இருக்க விரும்பி, மற்றவர்களை அற்பமாகக் கருதினான். அப்போஸ்தலர்களுக்கு விரோதமாய்ப் பொல்லாத வார்த்தைகளைப் பேசி அலப்புகிறவனாகக் காணப்பட்டான். விரோதங்களை உண்டாக்குகிறவனாகவும், அவதூறுகளைப் பேசுகிற நபராகவும் காணப்பட்டான்.  ஊழியத்தினிமித்தம்  கடந்து வருகிற அப்போஸ்தலர்களை கூட ஏற்றுக்கொள்ளாதவனாகவும், ஏற்றுக்கொள்ளுகிறவர்களைத் தடை செய்கிறவனாகவும் காணப்பட்டான். அவனைக் குறித்து யோவான் எழுதும் போது நான் வரும்போது அவனை நினைத்துக் கொள்வேன் என்று எச்சரிக்கிறதைப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட நபர்கள் இந்நாட்களிலும் சபைகளில் காணப்படுகிறார்கள். இவர்களுடைய பணி  இடித்துத் தள்ளுவதும், ஆத்துமாக்களைச் சிதறடிப்பதுமாய் காணப்படுகிறது. கசப்பும், உவர்ப்புமான கனிகளைக் கொடுத்து தேவனுடைய  ராஜ்யத்திற்குப் பிரயோஜனமற்றவர்கள். இயேசு இவர்களைக் குறித்துக் கூறும் போது, என்னோடிராவன் எனக்கு விரோதி என்றும், என்னோடு சேர்க்காதவன் சத்துருவோடு சேர்ந்து சிதறடிக்கிறான் என்றும் கூறினார்.

கர்த்தருடைய பிள்ளைகளே, நாம் காயுவின் கூட்டத்தைச் சேர்ந்தவர்களா, தியோத்திரேப்பின் கூட்டத்தைச் சேர்ந்தவர்களா? உண்மையும், உத்தமுமுள்ள காயுவுக்களால் நிறைந்த சபை பாக்கியமுள்ளது. காயுவின் கூட்டம் நன்மையானதைப் பின்பற்றி, தேவனால் பிறந்தவர்கள். தியோத்திரேப்பின் கூட்டம் தீமையானதைப் பின்பற்றி, தேவனைக் அறியாதவர்கள். கர்த்தருடைய பிள்ளைகளே, உண்மையும், உத்தமும் உங்களைக் காக்கட்டும். சத்திய வசனத்தில்   நடக்க உங்களை முழுவதுமாக அர்ப்பணியுங்கள். உங்கள் ஆத்துமா கர்த்தருக்குள் வாழ்ந்திருப்பதைக்  கர்த்தர் கண்டு, மற்ற எல்லா நன்மைகளையும் தந்து உங்களை வாழ்ந்திருக்கும் படிக்குச் செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *