கைவிடாமல் நடத்தினவருக்கு நன்றி செலுத்துவோம்:-

ஓசியா 11:8 எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போலாக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உங்கள் ஒவ்வொருவரையும் தாயின் கர்ப்பதிலிருக்கும்போதே முன்னறிந்து, அழைத்து, இளைஞனாய் இருக்கையில் நேசித்து நடத்தினார். கடந்த வருடம் முழுவதும் கைவிடாமல் நடத்தினார். ஓசியா 11:3ல் கர்த்தர் சொல்லுகிறார் நான் எப்பிராயீமைக் கைபிடித்து நடக்கப் பழக்கினேன்; ஆனாலும் நான் தங்களைக் குணமாக்குகிறவரென்று அறியாமற்போனார்கள் என்று சொல்லுகிறார். எத்தனையோ சூழ்நிலையில் எப்பிராயீமைக் கைபிடித்து நடத்தினதுபோல, உங்கள் ஒவ்வொருவரையும் கடந்த வருடம் முழுவதும் கைபிடித்து நடத்தினார். தடுக்கிவிழும் சூழ்நிலை வந்தபோது கைபிடித்து நடத்தினார். வழிதெரியாமல் திகைத்து நின்றபோது கைபிடித்து நடத்தினார். எந்த வேலைக்கு செல்வது என்ற குழப்பத்திலிருக்கும்போது கைபிடித்து நடத்தினார். குடும்ப காரியங்களில் என்ன முடிவு எடுக்கவேண்டும் என்று தவித்த போது கைபிடித்து நடத்தினார். ஆனால் வருந்தத்தக்க காரியம் என்னவென்றால் எப்பிராயீமை போல கர்த்தர் தங்களைக் குணமாக்குகிறவரென்று அறியாமற்போன நாட்களும் மாதங்களும் அநேகம் அநேகம். கைபிடித்து நடத்தினவரை அறியாமல் போகும்போது, கர்த்தருடைய இருதயம் எவ்வளவாய் துக்கம்கொள்ளும்.

சற்று திரும்பி பார்த்தால் கட்டி இழுக்கிற அன்பின் கயிற்றினால் கர்த்தர் நம்மை இழுத்தார், உங்கள் கழுத்திலிருக்கும் நுகத்தடியை எடுத்துப்போட்டார், உங்கள் பட்சமாய் சாய்ந்தார், உங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை கொடுத்தார். மாத்திரமல்ல மனம்திரும்ப மாட்டோம் என்ற கடின இருதயத்திலிருந்த வேலையிலும், மாறுபாடான இருதயம் உடையவர்களாய் இருந்தபோதும் உங்களை பார்த்து நான் உன்னை எப்படிக் கைவிடுவேன் என்று சொல்லி உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கைவிடாமல் பாதுகாத்த தேவனுக்கு நன்றி செலுத்துகிறவர்களாக ஒவ்வொருவரும் காணப்படவேண்டும்.

இந்த மாதம் முழுவதும் கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து தவறாமல் நன்றி செலுத்துங்கள். இதுவரைக்கும் கைவிடாமல் நடத்தினர் வருகிற வருடங்களிலும் கைவிடாமல் நடத்துவார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *