வெளிச்சம் உதித்தது.

இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள், மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது (மத். 4:15).

உலகம் முழுவதிலும் கிறிஸ்துப் பிறப்பின் நாட்களை நினைவு கூறும் போது வண்ண விளங்குகளால் பட்டணங்களையும், சபைகளையும், வீடுகளையும் அலங்கரித்துக்  கொண்டாடி மகிழ்வது வழக்கமாகக் காணப்படுகிறது. எல்லா வீடுகளிலும் நட்சத்திரங்களும் வெளிச்சம் வீசிக்கொண்டிருப்பதைப் பார்க்கமுடியும். உலகத்தின் ஒளியான இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் போது ஒளியினால் அலங்கரித்து மகிழ்வதில் தவறொன்றுமில்லை.  மேற்குறிப்பிடப்பட்ட வசனம் இயேசு பிறந்து தன் ஊழியத்தைத் துவங்கின வேளையில்,  யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள செபுலோன் நப்தலி   ஆகிய புறஜாதி யாருடைய கலிலேயாவிலே இருளில் காணப்பட்ட ஜனங்கள் பெரிய வெளிச்சமாகிய இயேசுவைக் கண்டார்கள் என்று குறிப்பிடுகிறது. ஓளியினால் அலங்கரித்து களிகூர்ந்து மகிழுகிற அதே வேளையில், பெரிய வெளிச்சமாகிய இயேசு நம்வாழ்க்கையில் காணப்படுகிற இருளின் கிரியைகளை அகற்றி நம்மை ஒளியின் பிள்ளைகளாய் முழுவதுமாக மாற்றுகிறவராய், கலிலேயாவின் ஜனங்கள் கண்டதுபோல, நாமும் கண்டுகொண்டால் மிகவும் பொருத்தமாகக் காணப்படும். 

நாம் ஆராதிக்கிற தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை என்று வேதம் கூறுகிறது. ஆனால் பிசாசு முற்றிலும் இருளானவன், அவனில் எவ்வளவேனும் ஒளியில்லை. அவனை இருளின் அதிபதி என்றும் வேதம் அழைக்கிறது. பாவங்களிலும், துர்க்கிரியைகளிலும், போதைப் பழக்கவழக்கங்களிலும், மாம்சீக  கிரியைகளிலும்   ஜனங்களைச்  சிறைப்படுத்தி, இருளின் பிள்ளைகளாகவே ஜனங்கள் எப்பொழுதும்  காணப்பட வேண்டும் என்பதே பிசாசின் வாஞ்சையாகும்.  பண்டிகை நாட்களிலும் கூட பெரிய வெளிச்சமாக இயேசு உதித்ததை நினைவு கூறுகிற வேளையில், இருளின் கிரியைகளைச் செய்கிற திரளான கிறிஸ்தவர்களைப் பார்க்கமுடிகிறது. பாவத்தின் பிடியில்  சிறைப்பட்டுப்போய்  காணப்பட்ட  கலிலேயாவின்  ஜனங்கள் பெரிய வெளிச்சமாகிய இயேசுவைக் கண்டுகொண்டதைப் போல, பாவத்தின் இருள் அகற்ற உலகத்தின் வெளிச்சமாய் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பாக உதித்த ஆண்டவரை இரட்சகராய்க் கண்டு பாவத்தின் கிரியைகளை விட்டொழிய   வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.

மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவரு முன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று அறிந்தவுடன் யோசேப்பு அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு:  தாவீதின்  குமாரனாகிய யோசேப்பே, உன்  மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே, அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக@  ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்று கூறினான். இயேசு தமது ஜனங்களின் பாவங்களை நீங்கி அவர்களை இரட்சிப்பார், என்று எழுதப்பட்டிருப்பதைப் போல, இந்த பண்டிகைக் காலங்களிலும் தமது ஜனங்களின் இருளின் கிரியைகளைக் கர்த்தர் அகற்றி இரட்சித்தால் நலமாயிருக்கும். 

உலகத்தின் ஒளியாய் அவதரித்த பெரிய வெளிச்சமாகிய ஆண்டவர் உங்கள் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் இல்லத்திலும் உதிக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.  

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *