ரோமர் 4:21 தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.
தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்றவல்லவர். இந்த புதிய வருடம் 2022ல் அடிவைத்திருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் சபையிலிருந்து கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்த வசனங்களை பெற்றிருப்பார்கள். வேதத்தில் இருக்கும் ஒவ்வொரு வசனமும் கர்த்தருடைய ஜனங்களுக்காக கொடுக்கப்பட்டது. விசேஷமாக கர்த்தர் சபைக்கென்று கொடுக்கிற வாக்குத்தத்தை ஒவ்வொருவரும் பிடித்துக்கொண்டு அந்த வசனத்தை வைத்து ஜெபித்து, அந்த வசனத்தை உங்களுக்காக உரிதாக்கிக்கொள்ள வேண்டும்.
என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன் என்று சொன்ன இயேசு, சொன்ன வார்த்தையின் படி நமக்கு பரிசுத்த ஆவியானவரை கொடுத்தார். பரிசுத்த ஆவியானவரையே உங்களுக்காக கொடுத்தவர், அவர் கொடுத்த வாக்குத்தத்தை நிறைவேற்றாமல் விட்டுவிடுவாரோ? நிச்சயமாய் நிறைவேற்றுவார். அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்காவது அவன் சந்ததிக்காவது நியாயப்பிரமாணத்தினால் கிடையாமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது (ரோமர் 4:31). ஆகையால் கர்த்தர் உங்களுக்கு கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் என்று விசுவாசிக்கவேண்டும். ஆபிரகாம் விசுவாசித்தான் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. உங்கள் விசுவாசத்தின் படியே கர்த்தர் உங்கள் சபையில் கொடுத்த வாக்குத்தத்தம் உங்கள் வாழ்க்கையில் நிறைவேறும். கடினமான நேரங்கள், சோதனையின் நேரங்கள் என்று எந்த சூழ்நிலையிலும் விசுவாசத்தை விட்டுவிடாமல், வாக்குத்தத்த வசனத்தை வைத்து ஜெபியுங்கள். அவைகள் அனைத்தும் நிறைவேறும்படி கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார்.
ஒரு குறிப்பிட்ட செய்தித்தாளில் புது வருடம் துவங்கியவுடன் ராசி, நட்சத்திரம் ஒவ்வொருவருக்கும் எப்படி இருக்கும் என்று சொல்லி விளம்பரபடுத்திக்கொண்டிருந்தார்கள். உலகத்து ஜனங்கள் அதை நம்பி மாய வலைக்குள் சிக்கிக்கொள்ளுகிறார்கள். சிலர் குறிசொல்லுகிறவர்களை நாடி ஓடி திரிகிறார்கள். சிலர் இந்த வருடம் எப்படி இருக்கும் என்று அறிய ஜோசியர்களை நாடி தேடி தங்கள் பணத்தை விரயமாக்கி விடுகிறார்கள். ஆனால் கர்த்தருடைய பிள்ளைகளாகிய உங்கள் விசுவாசம் யார் மீது இருக்கவேண்டும்? உங்களுக்கு வாக்குத்தத்தம் கொடுத்தவர் உண்மையுள்ளவர், ஆகையால் அவர் மீது உங்கள் விசுவாசத்தை வையுங்கள். அவர் மாறாதவராய் இருப்பதால், நிச்சயமாக உங்கள் சபையில் உங்களுக்கு கொடுத்த வாக்குத்தத்தை கர்த்தர் நிறைவேற்றுவார். நீதியின் பலனை சுதந்தரிப்பீர்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God church
Doha – Qatar
www.wogim.org