யோவான் 14:16 நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
இயேசு இவ்வுலகத்தில் இருக்கும்போது அநேகரை தேற்றினார், விடுதலையை கொடுத்தார், குஷ்டரோகிகளுக்கு சுகத்தை கொடுத்தார். சுமார் முப்பத்துமூன்றரை வருடங்கள் இந்த உலகத்தில் இருந்தார். அவற்றில் சுமார் மூன்றரை வருடங்கள் சீடர்களோடு கூட இருந்தார். பின்பு இயேசு தான் திரும்பவும் தன்னை அனுப்பின பிதாவிடம் செல்லவேண்டிய நேரம் நெருங்குகிறது என்பதை அறிந்தார். இயேசு ஜனங்களின் நிலைமையை பார்த்த அவர் எல்லாரையும் தனித்துவிடபட்டவர்களாக விட்டுப்போக அவருக்கு மனதில்லை. ஆகையால் தான் இயேசு சொல்லுகிறார் நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன். பிதாவானவரிடம் இயேசு என்னதான் வேண்டிக்கொள்ளவேண்டும். அநேக காரியங்களை நமக்காக இயேசு வேண்டினார். இருந்தாலும் எல்லாவற்றிலும் பிரதானமான, இன்றியமையான ஒன்று நமக்கு வேண்டும் என்பதை அறிந்த இயேசு, பிதாவிடம் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை உங்களுக்காக அனுப்பும்படி வேண்டிக்கொண்டார்.
இங்கே இயேசு பரிசுத்த ஆவியானவரை வேறொரு தேற்றரவாளன் என்று குறிப்பிடுவதைக் காண்கிறோம். இந்த இரண்டு வார்த்தைகளும்: ‘வேறொரு’ மற்றும் ‘தேற்றரவாளன்’ என்பதை நாம் கவனித்து பார்க்கவேண்டும்.
உங்களிடம் ஒரு நல்ல நாற்காலி இருந்தால், அதை ‘வேறொரு’ நாற்காலியாக மாற்றவேண்டும் என்று முயற்சித்தால், இதற்கு முன்பு இருந்த அதே மாதிரியான, அதே தரத்தில், அதை மாற்ற வேண்டும் என்று நினைப்பீர்கள். அதுபோல தான் இயேசுவைபோல வேறொரு தேற்றரவாளன் ஒருவர் மாத்திரமே. அவர் பரிசுத்த ஆவியானவர். அவர் உங்களோடு என்றென்றைக்கும் இருப்பார்.
‘தேறுதல்’ என்ற வார்த்தை வலி அல்லது துன்பத்தின் போது வலிமை அல்லது ஆதரவைக் கொடுப்பது, மனச்சோர்வு அல்லது பிரச்சனையிலிருந்து விடுபடுவது, ஆறுதல் அல்லது ஊக்கப்படுத்துவது. ஆகையால் நீங்கள் கடினமான காலங்களில், தனிமையாகவோ அல்லது பயமாகவோ உணரும்போது, பெரும் இழப்பைச் சந்திக்கும் போது ஆறுதல் தேவை. நம் அனைவருக்கும் ஆறுதல் தேவைப்படும் நேரங்கள் வரும். மேலும் யாரோ ஒருவர் நம்முடன் வந்து, நம்மைச் சுற்றி ஒரு கையை வைத்து, நம் வலியிலும் துயரத்திலும் நம்மை ஆற்றினால் நல்லது என்பதை உணரும் நேரம் வரும். அப்படிப்பட்ட நேரங்களில் உங்களை ஆறுதல்படுத்துவதற்கு வேறு யாரும் இல்லாவிட்டாலும், உங்களுக்கு பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். நாம் அவரைப் பார்த்தால், அவர் நமக்கு ஆறுதலையும் ஊக்கத்தையும் தருவார். அவர் சிறந்த ஆறுதல் அளிப்பவர் மற்றும் சரியான நேரத்தில் சரியான விஷயங்களைச் சொல்லித்தருகிறவர்.
சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் என்றென்றைக்கும் உங்களோடுகூட இருப்பார் என்று இயேசு சொன்னார். பரிசுத்த ஆவியானவர் குறிப்பிட்ட நேரத்திற்கு மாத்திரம் வந்து செல்பவராக இல்லாமல், என்றென்றைக்கும் உங்களோடுகூட இருக்கும்படியாக விரும்புகிறவர். இந்த வருடம் மாத்திரமல்ல என்றென்றைக்கும் பரிசுத்த ஆவியானவர் உங்களோடு இருக்கிறார் என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். இந்த 2022ல் என்றென்றைக்கும் சத்திய ஆவியாகிய பரிசுத்த ஆவியானவர் உங்களை தேற்றுவார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God church
Doha – Qatar
www.wogim.org