நீ இனி அழுதுகொண்டிராய்.

சீயோனைச் சேர்ந்த ஜனங்கள் எருசலேமில் வாசமாயிருப்பார்கள், இனி நீ அழுதுகொண்டிராய், உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறு உத்தரவு அருளுவார் (ஏசாயா 30:19).

அசீரிய இராணுவம் இஸ்ரவேலின் மேல் யுத்தம் செய்து அவர்களை மேற்கொண்டார்கள், அதன்பின்பு, யூதாவின் மேலும் யுத்தம் பண்ணும் படிக்கு  நெருங்கினார்கள். அந்த வேளையில் யூதாவின் தலைவர்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேளாமல், கர்த்தருடைய உதவியை நாடாமல் பார்வோனின் பெலத்தை நம்பி எகிப்தின் நிழலிலே அடைக்கலம் தேடினார்கள் (ஏசா.30:1,2). ஆபத்துகளும், பயங்களும், கலக்கங்களும் வருகிற வேளையில் யாருடைய உதவியை நாடுகிறோம்?.  யாருடைய நிழலின் கீழ் அடைக்கலம் தேடுகிறோம்? எகிப்தின் நிழல் நிலையற்றது, அது முட்செடியின் நிழலுக்கு ஒத்தது. கர்த்தருடைய பிள்ளைகள், எப்பொழுதும் சர்வ வல்லவருடைய நிழலில் அடைக்கலத்தை தேடுங்கள். சூலமித்தி கிச்சிலி மரம் போன்ற தன் நேசருடைய நிழலின் கீழ் வாஞ்சையாகத் தங்கினதைப் போல, இயேசுவின் நிழலின் கீழ் எப்பொழுதும் காணப்பட வாஞ்சியுங்கள்.

யூதா கர்த்தரை நம்பாமல் எகிப்தையும், அவர்கள் பலத்தையும் நம்பினதால் ஒருவன் பயமுறுத்த ஆயிரம் பேரும், ஐந்துபேர் பயமுறுத்த நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள்(ஏசா. 30:17) என்று கர்த்தர் கடிந்துகொண்டார். இந்த வார்த்தை, கர்த்தர் ஏற்கனவே கொடுத்த ஆசீர்வாதத்தின் வார்த்தைக்கு எதிராய் காணப்படுகிறதைப் பார்க்கமுடிகிறது.  உங்களில்  ஒருவன் ஆயிரம் பேரைத் துரத்தி, இரண்டுபேர் பதினாயிரம் பேரைத் துரத்துவார்கள் (உபா. 32:30) என்றும் உங்களில் ஐந்துபேர் நூறுபேரைத் துரத்துவார்கள், உங்களில் நூறுபேர் பதினாயிரம் பேரைத் துரத்துவார்கள், உங்கள் சத்துருக்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள் (லேவி. 26:8) என்ற வாக்குத்தத்த வார்த்தைக்கு எதிராய் காணப்படுகிறது. ஆகையால் தான், கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் நிபந்தனைக்குட்பட்டது. நாம் கர்த்தரை சார்ந்திருந்தால் அவர் நமக்காக யுத்தம் பண்ணுவார், நம்முடைய எதிரிகளை எளிதாய் மேற்கொள்ளலாம், ஆனால் மாம்ச பலத்தையும், மற்றவர்களையும் சார்ந்திருந்தால் அவர்கள் பயமுறுத்தும் போதும், துரத்தும் போதும் நாம் ஓடவேண்டியதுதான். ஆகையால் வாக்குத்தத்தை மாத்திரம் உரிமை கொண்டாடாதபடிக்கு, அதைச் சுதந்தரிக்க நாம் பாத்திரவான்களாகவும் காணப்படுகிறோமா என்று சோதித்தறிய வேண்டும்.

நம்முடைய தேவன் அன்புள்ளவர், அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை, யூதா மனம்திரும்பினால் அவர்களுக்கு இரங்கும்படிக்கு கர்த்தர் காத்திருப்பார் என்றும், அவர்கள் மேல் மனதுருகும் படிக்கு எழுந்திருப்பார் (ஏசாயா 30:18) என்று வாக்குக் கொடுத்தார். சீயோனைச் சேர்ந்த ஜனங்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடும் போது, கூப்பிடுதலின் சத்தத்திற்கு உருக்கமாக இரங்கி, சத்தத்தைக் கேட்டவுடனே மறு உத்தரவு அருளுவேன் என்றும் வாக்குக் கொடுத்தார். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் தான் கர்த்தருடைய சீயோனாய் காணப்படுகிறோம். ஒருவேளை நம்முடைய நம்பிக்கையைப் பல காரியங்கள் மேல் இது வரைக்கும் வைத்திருக்கக் கூடும். ஆனால் நாம் ஆண்டவரண்டை திரும்பும் போது அவர் உங்களுக்காக மனுதுருகுவார். உங்களுடைய கூப்பிடுதலின் சத்தத்தைக் கேட்டு மறு உத்தரவு அருளுவார். உங்கள் அழுகையை மாற்றுவார். நீங்கள் இனி அழுதுகொண்டிருப்பதில்லை. 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *