என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார் (பிலிப்பியர் 4:19).
நாம் ஆராதிக்கிற தேவன் நம்முடைய குறைவுகள் எல்லாவற்றையும் நிறைவேற்றுகிறவர். அவர் தம்முடைய ஐசுவரியத்தின்படி, தம்முடைய குமாரனாகிய கிறிஸ்துவுக்குள் நிறைவேற்றி, நம்முடைய எல்லாத் தேவைகளையும் அருளிச் செய்கிறவர். நன்மையான எல்லா ஈவுகளும் அவரிடத்திலிருந்து வருகிறது, வேதனையில்லாத ஆசீர்வாதங்களைத் தருகிறவர் கர்த்தர்.
அப்போஸ்தலனாகிய பவுல், பிலிப்பிய சபை மக்களுக்கு இந்த ஆசீர்வாதமான வார்த்தையை எழுதும் போது, இவருடைய சுவிசேஷ ஊழியத்தின் ஆரம்பத்தில், பிலிப்பிய சபை மக்கள் கொடுக்கல் வாங்கல் காரியத்தில் இவருக்கு உதவி செய்ததை நினைவு கூறுகிறார். தெசலோனிக்கேயா பட்டணத்தில் ஊழியம் செய்த வேளையிலும் அவனுடைய குறைச்சலை நீக்குகிறவர்களாக இரண்டொரு தரம் அவர்கள் காணப்பட்டார்கள். அப்படிப்பட்ட தியாகமான பலிகளால் தன்னை திருப்தியாக்கியவர்களை மனதார ஆசீர்வதித்து எழுதியது தான் மேற்குறிப்பிடப்பட்ட வசனமாய் காணப்படுகிறது. பிலிப்பிய சபை மக்கள் தன்னுடைய சில தேவைகளைச் சந்தித்தார்கள், ஆனால் தேவன் அவர்களுடைய எல்லா தேவைகளையும் சந்திக்குப்படிக்கு வேண்டுகிறார். அவர்கள் தங்கள் தரித்திரத்தில் பவுலுக்கு உதவி செய்தார்கள், ஆனால் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின் மகிமையின்படி உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பார் என்றும் வேண்டினார்.
கர்த்தருடைய பிள்ளைகளே, நம்முடைய தேவன் அவருடைய ஐசுவரியத்தின் படி உங்களை ஆசீர்வதிக்கிறவர். அவருடைய மகிமையின் படி நிறைவாய் ஆசீர்வதிக்கிறவர். ஆனால் அவருடைய ஆசீர்வாதங்கள் எல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் காணப்படுகிறது. ஆகையால் தேவனுடைய ஆசீர்வாதங்களை இயேசு கிறிஸ்துவின் மூலமாக மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியும். இயேசுவின் மூலமாக அன்றி வேறொரு வழியிலும் பிதாவின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஆகையால் தேவனுடைய எல்லா ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ளுவதற்கு, இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளுங்கள், அவருடைய இரத்தத்தின் நீதியினால் பாவங்களறக் கழுவப்பட்ட ஜீவியத்தை அனுதினமும் செய்யுங்கள். கிறிஸ்துவின் ஆவியாகிய ஆவியானவரில் அனுதினமும் நிரம்புங்கள். கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்துவின் சாயலாக மாறுங்கள். கர்த்தருடைய சித்தத்தைச் செய்யுங்கள். அவருடைய ஊழியத்தை நிறைவேற்றுங்கள். பரிசுத்தவான்களின் குறைச்சலில் அவர்களுக்கு உதவி செய்யுங்கள். தாவீது, தன் நெஞ்சத்தைக் கர்த்தருக்கு நேராக ஏற்றெடுத்து, என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல், பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னதை நினைவில் கொள்ளுங்கள். அப்போது பிதாவாகிய தேவன் அவருடைய ஐசுவரியத்தின் படி உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து, உங்கள் குறைவுகளையெல்லாம் தன்னுடைய மகிமையின் வல்லமையின்படி நிறைவேற்றி, ஆசீர்வதித்து உயர்த்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar