இராட்ச்சத சத்துருக்களை துரத்துவீர்கள்:-

யோசு 14:12. ஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத் தாரும்; அங்கே ஏனாக்கியரும், அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான்.

மேற்குறிப்பிட்ட வசனம் எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் , யோசுவாவிடம் சொன்ன வார்த்தையாக காணப்படுகிறது. யோசுவா இஸ்ரவேல் ஜனங்களுக்கு தேசத்தை பங்கிடும்போது காலேப் தனக்கு மலைநாட்டை தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அந்த மலைநாட்டில் ஏனாக்கியர் இருந்தார்கள். ஏனாக்கியர் ஒரு இராட்சதர்கள், பலசாலிகள், பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக தோற்றமளிக்கக்கூடியவர்கள். யோசுவா இப்படிப்பட்ட மலைநாட்டை கேட்டபோது அவன் வயது சென்றவனாய் இருந்தான். காலேப் சொல்லுகிறான், இஸ்ரவேலர் வனாந்தரத்தில் சஞ்சரிக்கையில், கர்த்தர் அந்த வார்த்தையை மோசேயோடே சொல்லி இப்போது நாற்பத்தைந்து வருஷமாயிற்று; இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன்.மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்துக்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது. காலேபுக்குள்ளாக இருந்த பெலன் இன்று ஒவ்வொருவருக்கும் காணப்படவேண்டும். எனக்கு வயதாகிவிட்டது, இனி நான் கர்த்தருக்காக என்ன செய்ய போகிறேன், எனக்கு பெலனில்லை, என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கர்த்தருடைய பிள்ளைகள் சொல்லலாகாது. மாறாக காலேபை போல இன்னும் எனக்குள் பெலன் இருக்கிறது என்று சொல்லுகிறவர்களாக காணப்படவேண்டும்.

மாத்திரமல்ல இந்த வயதான காலத்திலும் யுத்தத்துக்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறேன் என்று காலேப் சொல்லுகிறவனாக காணப்படுகிறான். நீங்களும் வயது வித்தியாசம் இல்லாமல் சத்துருவுக்கு எதிராக யுத்தம் செய்கிறவர்களாக காணப்படவேண்டும். யோசுவா அணைத்து பட்டங்களையும் யுத்தம் செய்து பிடித்தான் என்று வசனம் சொல்லுகிறது. அப்படியாக உங்களுக்கும் இவ்வுலகத்தில் பொல்லாத பிரபஞ்ச அந்தகார லோகாதிபதியோடு யுத்தம் காணப்படுகிறது. உங்கள் மாம்சீக இச்சைகள், பெருமை, கோபம், சுய இன்பம், விபச்சாரம், குடிவெறி போன்றவற்றிற்கு எதிராக யுத்தம் செய்கிறவர்களாக காணப்பட வேண்டும்.

ஏனாக்கியர் இராட்சதர்களாக காணப்பட்டும் கூட, அவர்களை துரத்துவேன் என்று காலேப் தன்னுடைய வயோதிப காலத்தில் சொல்லுகிறதை பார்க்கிறோம். உங்கள் மாம்சீக இச்சைகள் இராட்சதன் போல காணப்படலாம், அவைகள் மேற்கொள்ள முடியாதைவைகள் போல காணப்படலாம், இருந்தாலும் உங்களுக்குள்ளாக ஆண்டவருடைய பெலன் இருக்குமாயின், நீங்கள் எளிதாக எல்லா சந்துருவின் கிரியைகளையும், இச்சைகளை கொண்டுவருகிற பொல்லாத ஆவிகளையும், எல்லா ஏனாக்கிய ஆவிகளையும் எளிதாக துரத்திவிடுவீர்கள். அப்படிப்பட்ட பெலன், காலேபுக்குள்ளாக இருந்த பெலனை கர்த்தர் உங்கள் ஒவ்வொருவருக்கும் கொடுப்பார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *