மோசம் போகாதிருங்கள்,தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார், மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் (கலா. 6:7).
கர்த்தருடைய ஜனங்கள் நன்மைக்கேதுவானவைகளை விதைக்கும் படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். ஒருவேளை மற்றவர்களுக்கு நன்மைகள் செய்ய முடியவில்லையென்றாலும் கூட ஒருநாளும் தீமைகள் செய்துவிடாதிருங்கள். மற்றவர்களுடைய வாழ்க்கையையும், குடும்பத்தையும் கட்ட முயற்சி செய்ய வேண்டுமே ஒழிய இடித்துத் தள்ளுகிறவர்களாய் காணப்படக் கூடாது. ஒருநாளும் ஒருவிதங்களிலும் மற்றவர்களை ஏமாற்றாதிருங்கள். கொடுக்கல் வாங்கல் காரியங்களில் உங்கள் உத்தமத்தை எப்பொழுதும் வெளிப்படுத்துங்கள், வார்த்தை பிசகாமல் வாழக் கற்றுக் கொள்ளுங்கள். ஒருவிதங்களிலும் சபைகளை இடிக்கிறவர்களாய் காணப்படாதிருங்கள். அநியாயத்தையும், தீவினையையும் விதைத்தால் அதையே அறுப்பீர்கள் என்று வேதம் எச்சரிக்கிறது.
ஐசுவரிய வானையும், லாசருவையும் பற்றிய உவமையை ஆண்டவர் கூறும் போது, ஐசுவரிய வான் பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் நன்மைகளைப் பெற்றுக்கொண்டு அதை அனுபவிக்கிறவனாய் மாத்திரம் காணப்பட்டான். இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அனுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான். லாசரு என்னும் பேர்கொண்ட ஒருதரித்திரனும் இருந்தான், அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரிய வானுடைய வாசலருகே கிடந்து, அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான். ஆனால் அந்த துணிக்கைகளைக் கூட கொடுப்பதற்கு ஐசுவரிய வான் விருப்பப் படவில்லை. அவன் ஆசீர்வாதமாய் வாழ்ந்து கொண்டுவந்து நாட்களில் தேவையோடு காணப்பட்டவனுக்கு ஒரு நன்மையை விதைப்பதற்குக் கூட அவன் விரும்பவில்லை. அவர்கள் இருவரும் மரித்தார்கள், தரித்திரன் தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான், ஐசுவரிய வான், அக்கினி ஜுவாலையில் வேதனைப்படுவதற்குப் பாதாளத்திலே கொண்டு போய் விடப்பட்டான். அங்கே ஒரு விரல் நுனி தண்ணீருக்காக ஏங்கின வேளையில், அது கூட அவனுக்குக் கிடைக்கவில்லை. அதோடு அங்கிருந்து அவன் ஏறெடுத்த வேண்டுதலும் கேட்கப்படவில்லை. கர்த்தருடைய பிள்ளைகளே, உங்களுடைய நீதி உங்களை மரணத்துக்குத் தப்புவிக்கும். ஆகையால் நீதியைத் திரளாய் விதையுங்கள், நற்கிரியைகளை விதையுங்கள்.
யோபு என்ற பக்தன் தன்னைக்குறித்துக் கூறும் போது, நீதியைத் தரித்துக்கொண்டேன்,அது என் உடுப்பாயிருந்தது,என் நியாயம் எனக்குச் சால்வையும்,பாகையுமாய் இருந்தது என்றான். அவன் முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும்,உதவியற்றவனையும் இரட்சிக்கிறவனாய் காணப்பட்டான். கெட்டுப்போக இருந்தவர்களுக்கு அவன் நன்மை செய்ததினால் அவர்களுடைய ஆசீர்வாதம் அவன்மேல் வந்தது, விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கப்பண்ணினான், குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்குக் காலுமாயிருந்தான். இப்படி நன்மைகளைத் திரளாய் விதைத்ததினால், கர்த்தர் அவனுடைய வியாதிகளை மாற்றி,அவன் இழந்து போன எல்லாவற்றையும் இரட்டிப்பாய் திரும்பக் கொடுத்தார். பூரண வயதுள்ளவனாய் மரிக்குப்படிக்குச் செய்தார். ஆகையால் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாதிருங்கள், அப்போது உங்கள் நீதியின் பலனைக் கர்த்தர் அறுவடைச் செய்யும்படிக்குச் செய்வார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar