சபையில் ஒரேகாரியத்தை நோக்கி சீர்பொருந்தியிருங்கள்:-

1 கொரி 1:10. சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும்வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.

தனக்கு தானே பிரிந்திருப்பவர்கள் சாத்தானின் கூட்டத்தார். தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத் தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எந்த பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது (மத் 12:25) என்று இயேசு சொன்னார். இன்று உலக முழுவதும் இந்த பிரிவினையின் ஆவிகள் செயல்படுகிறது. குறிப்பாக இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளில் அதிகமான பிரிவினைகள் காணப்படுகிறது என்று கர்த்தரிடம் சேர்ந்த கிளாடி ஈஸ்வராஜ் அவர்கள் சொல்லுகிறார். நம்முடைய தேசமும் கூட ஜாதியினால் அதிகமான பிரிவினைகள் இருப்பதை பார்க்கிறோம். அவைகள் சபைகளுக்குள்ளும் இருப்பது ஒரு துக்ககரமான விஷயம். ஜாதியை வைத்து வருகிற பிரிவினைகளும், சிறு கூட்டங்களும் கர்த்தருடைய ஊழியத்தை மிகவும் பாதிக்கும். அது கர்த்தருடைய பார்வையில் பிரியமாய் இராது.

அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய ஊழியப்பாதையில் அநேகரோடு கூட பயணம் செய்தார். குறிப்பாக தீமோத்தேயு, தீத்து மற்றும் மருத்துவர் லூக்காவிடம் அதிக தொடர்போடு இருந்திருந்தார். பவுல் ஒரு யூதன், பரிசேயர்களுக்கு பரிசேயன். ஆனால் அவனோடு இருந்தவர்களாகிய தீமோத்தேயு பாதி கிரேக்கன், அவனுடைய தகப்பன் ஒரு கிரேக்கன். தீத்து யூதனல்ல, அவன் ஒரு கிரேக்கன். பவுலோடு அதிகமாக பயணித்த, அப்போஸ்தல நடபடிகளை எழுதின லூக்கா ஒரு மருத்துவ கிரேக்கன். இப்படியாக எல்லாரும் வெவ்வேறு சமூகத்திலிருந்து வந்தாலும் எல்லாரும் ஒன்றாய் தேவனுக்கென்று செயல்பட்டார்கள். அதுபோல தான் கர்த்தருடைய சபையில் வித விதமான சமூகத்திலிருந்து, தேசங்களிலிருந்து, மாநிலத்திலிருந்து வந்தாலும் எல்லாரும் இசைந்த ஆத்துமாக்களாக, ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும்வேண்டுமென்று கர்த்தருடைய ஆவியானவர் விருப்பமுடையவராய் இருக்கிறார்.

நோவாவின் காலத்தில் பேழைக்குள் அநேக காட்டு மிருகங்களும், பறவைகளும், ஜந்துக்களும், மனிதர்களும் இருந்தாலும் எல்லாரும் ஒன்றாக தான் இருந்தார்கள். வித விதமான ஜோடு ஜோடான எல்லா மிருகங்களுக்கும் இது ஒரு புதிய அனுபவமாக இருந்திருக்கும். ஆனால் கர்த்தர் அவைகளெல்லாவற்றையும் ஒன்றாய் பேழைக்குள் இருக்கும்படியாக செய்தார். அதுபோலத்தான் பேழையாகிய கர்த்தருடைய சபையில் அநேக விதமான விசுவாசிகளும் ஒன்றையே சிந்திக்கவும், ஒற்றுமையாகவும், நின்று தேவ இராஜ்யத்தை கட்ட வேண்டும் என்று கர்த்தர் விருப்பமுடையவராய் இருக்கிறார்.

தீர்மானம் எடுங்கள் எல்லாரும் ஒரே தரிசனத்தில் ஒன்றாய் பரலோக இராஜ்யத்தை நோக்கி பயணிக்க.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *