சங் 24:3-4. யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்? கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.
ஊசாவை கர்த்தர் அடித்தபிறகு தாவீது பாடின சங்கீதம் தான் 24வது சங்கீதம். யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்? என்ற கேள்விகேட்டு பிறகு கர்த்தர் நான்கு பதில்களை கொடுக்கிறார். அவற்றில் ஒன்று தான் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமல் இருப்பவன்.
பிரசங்கி புஸ்தகத்தில் ஞானி அநேக முறை மாயை குறித்து எழுதுகிறார். ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடுப்பது என்றால் என்ன? அப்படிப்பட்ட மாயைகள் எவை ? முதலாவது உலகம் மாயை (பிர 3:15-19). இரண்டாவது மனிதன் மாயை (யோவா 12:42-43). மூன்றாவதாக பணம் மாயை (லுக் 16:13). இந்த மூன்றிலும் அன்பு கூறுகிறவர்கள் தங்கள் ஆத்துமாவை மாயைக்கு ஒப்பு கொடுத்தவர்கள். உலகமாகிய பூமி நமக்கு வேண்டும் தான்; நிலங்களை வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும் எல்லாம் நல்லது தான். மனிதர்களாகிய ஆத்துமாக்களை நமக்கு வேண்டும் தான்; ஆத்துமாக்களை நாம் சம்பதிக்க வேண்டும். பணமும் அத்தியாவசியம்; நீ பிச்சைக்காரனாயிரு என்று கர்த்தர் சொல்லவில்லை. பணம் சம்பாதிக்க வேண்டும். அதெல்லாம் சரி தான். ஆனால் அதன் மீது அன்பு வைக்கிறவர்கள் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடுத்தவர்கள். உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை (1 யோவா 2:15) என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் எல்லாவற்றிலும் தேவனுக்கு முதலிடம் கொடுக்கவேண்டும். உங்கள் வீடு, நிலத்தை காட்டிலும் தேவனை நேசிக்க வேண்டும். உங்கள் பெற்றோர், பிள்ளைகள், கணவன், மனைவியை காட்டிலும் தேவன் மீது அன்பு செலுத்த வேண்டும். உங்கள் பணம், வங்கியில் இருக்கும் சேமிப்பு தொகை, நகைகள், ஆடைகள் போன்றவற்றை காட்டிலும் கர்த்தர் மீது பற்றுதலாய் இருக்க வேண்டும். அப்படி இல்லாதவர்கள் தங்கள் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடுத்தவர்கள். நம்முடைய முன்னோர்கள் மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன் என்று பாடியதின் நோக்கமே மாயைக்கு தன்னை ஒப்புக்கொடுக்கமாட்டேன் என்பதாக காணப்படுகிறது.
கடைசி காலத்தில் வாழ்ந்துகொண்டிருந்த தேவ ஜனங்கள் உலகத்தின் பொருட்கள் மீது ஆசை வைக்காமல், ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமல் காத்துக்கொள்ளுங்கள். ஆத்துமா விலையேறப்பெற்றது. அதை நஷ்டப்படுத்திக்கொள்ளாதிருங்கள். அப்படி ஆத்துமாவை காத்துக்கொள்ளுகிறவர்கள் கர்த்தருடைய பர்வதத்தில், அவருடைய வாசஸ்தலத்தில் நிலைத்திருப்பார்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God church
Doha – Qatar
www.wogim.org