நியா 5:23. மேரோசைச் சபியுங்கள்; அதின் குடிகளைச் சபிக்கவே சபியுங்கள் என்று கர்த்தருடைய தூதனானவர் சொல்லுகிறார்; அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க வரவில்லை; பராக்கிரமசாலிகளுக்கு விரோதமாய் அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணை நிற்க வரவில்லையே.
ஏன் மோரேசை சபிக்கவேண்டும்? காரணம் அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் எந்த வெளிப்பிரகாரமான பாவம் செய்யவில்லை; ஆனால் ஒன்றும் செய்யாமல் இருந்தார்கள். எதிரி யுத்தத்திற்காக வரும்போது கர்த்தருக்கு துணையாக நிற்க வரவில்லை.
ஒருவேளை நீங்கள் ஒரு பாவமும் செய்யாமல் இருக்கலாம். வாரந்தோறும் கிறிஸ்தவன் என்ற முறையில் சபைக்கு வரலாம் போகலாம். செய்திகளை கேக்கலாம், பாடல் பாடலாம், காணிக்கை செலுத்தலாம். ஆனால் நீங்கள் வெளியே போய் சத்துருவோடு ஆவிக்குரிய யுத்தம் செய்யாமலிருந்தால் அதுவே பாவமாக மாறிவிடும். மற்றவர்கள் சத்துருவோடுகூட ஆவிக்குரிய யுத்தம் செய்யும்போது, நீங்கள் சுகமாக, வீட்டில் சும்மா இருந்துகொண்டு ஒன்றும் செய்யாமல் இருப்பீர்களென்றால் அது பாவம்.
பாவத்தில் இரண்டு வகை காணப்படுகிறது. Sin of commission என்பது செய்யக்கூடாது என்ற காரியத்தை துணிகரமாக செய்வது. மற்றொன்று Sin of omission செய்யவேண்டும் என்றிருப்பதை செய்யாமல் இருப்பது. மேரேசியர்கள் செய்த பாவம் இரண்டாம் வகையை சேர்ந்தது. அவர்கள் ஒன்றும் செய்யாமல் இருந்து விட்டார்கள். யுத்தத்திற்கு கர்த்தரோடு கூட துணையாக நிற்க வேண்டியவர்கள் ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டார்கள்.
குற்றுருயிராய் இருந்த சமாரியனை மீட்காமல் ஆசிரியனும் லேவியனும் ஒன்றும் செய்யாமல் பக்கமாய் வழிவிலகி போனார்கள். இவர்கள் செய்த காரியமும் இரண்டாம் வகையை சேர்ந்த பாவம்.
கர்த்தர் ஒவ்வொருவருக்கும் ஒரு வரங்களை, கிருபைகளை, தாலந்தை கொடுத்திருக்கிறார். எதற்காக கொடுத்திருக்கிறார் என்றால், நீங்கள் கர்த்தர் பட்சத்திலிருந்து எதிரியை வீழ்த்தவேண்டும் என்பதற்காக. ஒரு சிலருக்கு ஜெப வரத்தை கர்த்தர் கொடுத்திருப்பார், தனியாகவும் சபையாகவும் சேர்ந்து ஆவிக்குரிய யுத்தம் செய்வதற்கு. சிலருக்கு இசை தாலந்தை கொடுத்திருப்பார், கர்த்தருக்காக தாவீதை போல வாசிப்பதற்கு. சிலருக்கு மீடியா தாலந்தை கொடுத்திருப்பார், கர்த்தருடைய காரியங்களை சபையில் இணைந்து செய்வதற்கு. சிலருக்கு பாடும் தாலந்து, சிலருக்கு தொண்டு செய்யும் தாலந்து, சேவை செய்யும் தாலந்து என்று கொடுத்திருப்பார். அவைகளை கர்த்தருக்காக செய்யாமல் வாரத்தில் ஒரு நாள் ஆராதனை பின்பு உலக காரியங்கள், வேலை என்று மாத்திரம் இருப்பீர்களென்றால், அது இரண்டாம் வகை பாவம் Sin of omission. கர்த்தருக்காக ஏதாவது செய்வதற்கு ஊழியக்காரர் இருக்கிறார், மற்ற சில நபர்கள் இருக்கிறார்கள் அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும், நாம் வாரத்தில் ஒருமுறை ஆராதனை மாத்திரம் பங்குகொள்வேன் என்றிருப்பவர்களுக்கு அன்போடு சொல்லிக்கொள்ளுகிற காரியம் தயவு செய்து சாபத்தை உங்கள் வாழ்க்கையில் வருவித்துக்கொள்ளாதிருங்கள். சுவிசேஷம் எல்லார் மேலும் விழுந்த கடமை என்பதை தேவ ஜனங்கள் உணர்ந்து அதற்கேற்ப கர்த்தர் பட்சத்தில் நிற்கும்படியாக உங்களை ஒப்புக்கொடுங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களோடுகூட இருந்து நரைவயது மட்டும் உங்களை தாங்கி நடத்துவார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God church
Doha – Qatar
www.wogim.org