முடிவு சம்பூரணமாய் இருக்க வேண்டும்:-

மத்தேயு 10:22 என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.

நம்முடைய விசுவாச வாழ்க்கையை தொடங்கும்போது ஆண்டவர் பேரில் வைத்த அன்பு குறைந்திருந்தாலும், காலப்போக்கில் அந்த விசுவாசம் வளர வேண்டும். அதினாலே சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகின (அப் 16:5) என்று வசனம் சொல்லுகிறது.
ஆரம்பம் அற்பமாய் இருந்தாலும் முடிவு சம்பூரணமாய் இருக்க வேண்டும். சிலர் ஆரம்பத்தில் மிகவும் வைராக்கியமாக கிருஸ்துவிற்காக நான் பல காரியங்களை செய்தேன், என் வாலிப காலத்தில் எப்பொழுதும் சபையில் கர்த்தரை தொழுதுகொல்லுவேன் ஆனால் இப்பொழுதோ உலகத்தின் பாரங்களினால் என்னால் முன் இருந்த அளவிற்கு ஜெபிக்க இயலவில்லை, வேதம் வாசிக்க இயலவில்லை, கர்த்தருடைய ஊழியத்தை செய்ய முடியவில்லை என்று சொல்லுவார்கள். இப்படியாக பின்வாங்கி போகிற ஜனங்களாக நீங்கள் இருக்கலாகாது.

கிதியோன் ஆரம்பத்தில் கர்த்தருடைய யுத்தத்தை முன்னின்று மீதியானிய படைகளையெல்லாம் தோற்கடித்தான். ஆனால் அவன் முடிவோ பொன்கடுக்கன்களின் மீது ஆசைப்பட்டு, ஏபோத்தை உண்டாக்கி, இஸ்ரவேலரெல்லாரும் அதை பின்பற்றி சோரம்போகும்படி செய்தான். அவனுடைய முடிவு தோல்வியில், பின்மாற்றத்தில் முடிந்தது.

சிம்சோனும் இப்படியாகத்தான் அவன் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவன், கர்த்தருடைய ஆவியானவரால் அபிஷேகம் பண்ணப்பட்டவன், கெர்ச்சிக்கிற பாலசிங்கம் ஒன்றை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப்போட்டவன், அஸ்கலோனுக்குப்போய், அவ்வூராரில் முப்பதுபேரைக் கொன்று போட்டவன், முன்னூறு நரிகளை கொண்டு பெலிஸ்தியரின் வெள்ளாண்மையை ஒன்றுமில்லாமல் செய்தவன், அவர்களைச் சின்னபின்னமாகச் சங்காரம்பண்ணி போட்டவன், கழுதையின் பச்சைத் தாடையெலும்பைக் கொண்டு அதினாலே ஆயிரம் பேரைக் கொன்று போட்டவன். அப்படிப்பட்டவன் தெலீலாள் மடியில் படுத்து தன்னுடைய அபிஷேகத்தை இழந்து போனான். கர்த்தர் தன்னைவிட்டு போனார் என்பதைக்கூட அறியாமல் இருந்தான். கண்கள் பிடுங்கப்பட்டவனாக, வேடிக்கைப்பொருளாக மாறிப்போனான். அவனுடைய ஆரம்பம் மிகவும் வல்லமையாக இருந்தது; ஆனால் முடிவோ பரிதாபம்.

இப்படிப்பட்டவர்களை போல அல்லாமல் பழைய ஏற்பாட்டில் உதாரணத்திற்கு சாமுவேலை போல இருக்கவேண்டும். அவன் கடைசி காலத்தில் சொன்னான் இதோ, இருக்கிறேன்; கர்த்தரின் சந்நிதியிலும் அவர் அபிஷேகம்பண்ணி வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக்குறித்துச் சாட்சி சொல்லுங்கள்; நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக்கொண்டேன்? யாருக்கு அநியாயஞ்செய்தேன்? யாருக்கு இடுக்கண்செய்தேன்? யார் கையில் பரிதானம் வாங்கிக்கொண்டு கண்சாடையாயிருந்தேன்? சொல்லுங்கள்; அப்படியுண்டானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான் (1 சாமு 12:3). புதிய ஏற்பாட்டில் உதாரணத்திற்கு பவுலைப்போல இருக்க வேண்டும். பவுல் சொல்லுகிறான் ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை (அப் 20:33), நாங்கள் ஒருவனுக்கும் அநியாயஞ்செய்யவில்லை, ஒருவனையும் கெடுக்கவில்லை, ஒருவனையும் வஞ்சிக்கவில்லை (2 கொரி 7:2) என்று கடைசிமட்டும் பின்வாங்காமல், வழிவிலகிப்போகாமல் உத்தமத்தில் உறுதியாய் தரித்திருந்தார்கள். அப்படியாக நீங்கள் ஒவ்வொருவரும் முடிவபரியந்தம் கர்த்தருக்காக நிற்கும்போது, நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *