பிலே 1:18. அவன் உமக்கு யாதொரு அநியாயஞ்செய்ததும், உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும்.
அப்போஸ்தலனாகிய பவுல் பிலேமோனுக்கு எழுதின வசனமாய் மேற்குறிப்பிட்ட வசனம் காணப்படுகிறது. சுவிசேஷத்தினால் தான் பெற்ற ஒநேசிமுவை ஏற்றுக்கொள்ளும்படியாக பவுல் பிலேமோனுக்கு எழுதுகிறான். ஓநேசிமு பிலேமோனுக்கு ஒரு அடிமையாக இருந்தவன். இந்த ஒநேசிமு பிலேமோனிடிதிலிருந்து ஓடிப்போனவனாக காணப்பட்டான். அந்நாட்களில் அடிமையானவன் தன் எஜமானை விட்டு ஓடிப்போகலாகாது. அப்படி மீறி ஓடிப்போகிறவன் பிடிபட்டால் அவனை கொலைசெய்யும் அதிகாரம் எஜமான்களுக்கு இருந்தது. ஓநேசிமு ஓடிப்போனபிறகு அப்போஸ்தலனாகிய பவுலால் இரட்சிக்கப்பட்டான். அவனை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு பிலேமோனிடம் பவுல் கேட்கிறவனாக காணப்படுகிறான். இப்படித்தான் நீங்கள் உங்கள் சொந்த வீடாகிய இயேசுவின் வீட்டிலிருந்து தூரம் போயிருக்கலாம். பாவ வாழ்க்கையில், சிற்றின்பங்களில் சிக்கி, நண்பர்களோடு போதைகளை உட்கொள்ளுகிறவர்களாக காணப்பட்டு இருக்கலாம். மீண்டும் எப்படி இயேசுவிடம் வருவது என்று சொல்லி கலங்கி கொண்டே இருக்கலாம். ஒநேசிமுக்காக பிலேமோனிடம் மன்றாடிய பவுலை போல இன்றும் இயேசுகிறிஸ்து உங்களுக்காக பிதாவிடம் மன்றாடிக்கொண்டே இருக்கிறார் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
பவுல் சொல்லுகிறான் பிலேமோனிடம் யாதொரு அநியாயஞ்செய்ததும், உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும். பவுல் வேலை செய்து ஊழியம் செய்தவன். தனக்கென்று இருந்த கொஞ்ச பணம் மூலமாக, ஒநேசிமு கொடுக்க வேண்டிய பணத்தை தான் கொடுக்கிறேன் என்று சொல்லுகிறவனாக பவுல் காணப்படுகிறான். அதுபோலத்தான் உங்கள் பாவ கடன்கள் எல்லாவற்றையும் இயேசு ஏற்கெனவே சிலுவையில் செலுத்தி தீர்ந்தார். நீங்கள் செய்த பாவத்தினிமித்தமாக இயேசு பாடுகளை சகித்தார். நீங்கள் சாகவேண்டுமென்றிருந்த இடத்தில் இயேசு தன்னை தாமே கிருபாதார பலியாக ஓப்புக்கொடுத்தார். உங்கள் பாவ கடன்கள், ஒட்டு மொத்த உலக பாவக்கடன்களையும் யாரவது ஒருவர் சுமந்து தீர்க்கவேண்டும். ஒருவர் பாவத்தை ஒருவர் சுமப்பதே இயலாத காரியம். ஆனால் சிலுவையில் ஒட்டுமொத்த மக்களின் பாவங்களும் ஒரே நேரத்தில் இயேசுவின் மீது வைக்கவேண்டிய சூழ்நிலை வந்தது. அந்த நேரம் மகா வேதனையான நேரமாக இயேசுவுக்கு இருந்திருக்கும். ஒருவராலும் தாங்கக்கூடாத வேதனை, சொல்லமுடியாத வேதனை, இவ்வுலகத்தில் இதற்கு முன்பும், இதற்கு பின்பும் யாரும் சந்திக்காத வேதனையை இயேசு சந்தித்தார். எல்லாருடைய பாவக்கடன்களும் அவர் மேல் வைக்கப்பட்டது. இயேசு ஒவ்வொருவருடைய பாவத்தையும் மகிழ்ச்சியோடு சிலுவையில் சுமந்தார். ஆகையால் இன்று நீங்களும் நானும் தண்டனைக்கு தப்பி சமாதானமுள்ள வாழக்கை வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நீங்கள் இனி கடனாளிகள் அல்ல. உங்கள் கடனை இயேசு ஏற்கெனவே செலுத்திவிட்டார். இனி நீ பாவம் செய்யாதே என்று இயேசு ஒவ்வொருவருக்கும் சொல்லுகிறவராக காணப்படுகிறார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God church
Doha – Qatar
www.wogim.org