நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?

ரோம 8:31. இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?

நம்முடைய அன்றாட வாழ்வில் நமக்கு விரோதமாக அநேக சூழ்நிலைகள் வரலாம். வேலை ஸ்தலங்களில், குடும்பத்தில் நாம் நினைப்பதற்கு மாறாக நமக்கு விரோதமாக சிலர் எழும்பலாம். குறிப்பாக நாம் தேவனுடைய சித்தத்தை செய்யாமல் வேறு வழிகளில் செல்வதற்கு சத்துரு நமக்கு விரோதமாக செயல்படுவான். இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான் (வெளி 12:10) என்று வசனம் சொல்வதை பார்க்கலாம். சாத்தான் எப்போதும் நம்மை குற்றப்படுத்தும் பொருட்டு நமக்கு விரோதமாக செயல்படுகிறவனாக காணப்படுகிறான். இருந்தாலும் நம் பட்சம் தேவன் இருக்கிறார். சர்வத்தையும் நியாயம் செய்கிறவர் நம் பட்சத்தில் இருக்கிறார். அவர் நீதிபரர்; செம்மையாய் நீதி செய்கிறவர். தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவர். அப்படிப்பட்ட தேவன் நம் பட்சத்திலிருக்கும்போது நமக்கு விரோதமாய் நிற்பவன் யார்?

எல்லாராலும் பகைக்கப்படுகிற சூழ்நிலை, எல்லாராலும் ஒதுக்கப்படுகிற சூழ்நிலையில் நீங்கள் இருப்பீர்களென்றால், கவலைபடாதிருங்கள். காரணம் உங்கள் பட்சத்தில் தேவன் இருக்கிறார். யோசேப்பை எல்லாரும் ஒதுக்கினார்கள். உடன் சகோதரர்கள் குழியில் போட்டார்கள், அடிமையாக அவனை விற்றுப்போட்டார்கள், சிறைச்சாலையில் அடைத்தார்கள். ஆனால் எல்லா சூழ்நிலையிலும் தேவன் யோசேப்பின் பட்சத்தில் இருந்தார்.

உங்கள் வேலை ஸ்தலத்தில் உங்களுக்கு விரோதமாக செயல்படுகிறவர் பட்சத்தில் உயர் அதிகாரிகள் இருக்கலாம், ஊழியத்தில் உங்களுக்கு விரோதமாக செயல்படுகிறவர்கள் பட்சத்தில் அரசாங்க அதிகாரிகள் இருக்கலாம், குடும்பத்தில் உங்களுக்கு விரோதமாக செயல்படுகிறவர்கள் பட்சத்தில் அநேகர் கூட்டம் கூடி இருக்கலாம், நண்பர்கள் விரோதமாக எழும்பலாம், ஆனால் ஒன்று நிச்சயம் உங்கள் பட்சத்தில் தேவன் இருக்கிறார். தேவன் உங்கள் பட்சத்திலிருக்கும்போது ஒருவனும் உங்களுக்கு விரோதமாக எழும்பி உங்களை மேற்கொள்ள முடியாது. அவர்களை தேடியும் காணாமல் போகும்படி செய்வார். தேவன் உங்களோடு இருப்பதை ஒவ்வொருநாளும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh.R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *