சோர்ந்துபோகிறவர்களுக்குப் பெலன்.

சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து,சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார் (ஏசாயா 40:29).

பூமியை தம்முடைய வல்லமையினால் சிருஷ்டித்த தேவன் சோர்ந்து போவதுமில்லை, இளைப்படைவதுமில்லை. ஆகையால் அவருடைய பிள்ளைகளாய் காணப்படுகிற நாமும் சோர்ந்துபோகக் கூடாது, பெலனற்றவர்களாய் போய்விடக் கூடாது என்று அவர் விரும்புகிறார். சோர்வை உண்டாக்குகிற காரியங்கள் நம்முடைய வாழ்க்கையில் நடந்தாலும்,நம்மைச்சுற்றிச் சம்பவிக்கிறவை சோர்வை உண்டாக்கினாலும், நமக்குப் பெலனையும்,சத்துவத்தையும் கொடுத்து தொடர்ந்து ஓடச்செய்கிற ஆண்டவரை நாம் நோக்கிப் பார்க்கவேண்டும். சத்துரு, தேவ ஜனங்கள் சோர்ந்து போய்,முடங்கிப் போனவர்களாய்  காணப்படவேண்டும் என்பதை விரும்புகிறவன்.  ஆகையால் சோர்வை உண்டாக்குகிற பல ஆயுதங்களை நமக்கு விரோதமாக எய்வான். அதற்குக் காரணம், நாம் செயல்பட்டால் அவனுடைய ராஜ்யத்திற்கு வீழ்ச்சியுண்டாகும், நாம் முடங்கிப்போனால் அவனுடைய ஆதிக்கம் வளர்ந்து பெருகும். அவனுடைய தந்திரங்களை அறிந்து கர்த்தருடைய பிள்ளைகள் முன்னேறிச் செல்லவேண்டும். 

எலியா தீர்க்கதரிசி கர்மேல் பர்வதத்தில் கர்த்தருக்காக வைராக்கியமாய் நின்று,  இருநினைவுகளால் பின்வாங்கிப் போன இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தரண்டை திருப்பினான். அவன் பாகாலின் தீர்க்கதரிசிகளை அழித்ததினால் ஆகாப் ராஜாவின் மனைவி யேசபேல் அவன் மேல் கோபம் கொண்டு, எலியாவை கொலை செய்யத் திட்டம் போட்டாள். அதையறிந்த எலியா உயிர் பிழைக்க ஓடி சூரைச்செடியின் கீழ் படுத்துக்கொண்டு,போதும் ஆண்டவரே என் உயிரை எடுத்துக்கொள்ளும் என்று சோர்ந்து போய் முறையிட்டான். யோனா தீர்க்கதரிசியும் சோர்ந்து போய், தான் கூறின தீர்க்கதரிசனம் நிறைவேறாமல் போனதினிமித்தம்,கர்த்தர் பேரில் எரிச்சலாகி, ஆமணக்கு செடியின்கீழ் படுத்துக்கொண்டு, தனக்குள்ளே சாவை விரும்பி,நான் உயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான். சோர்வு இரண்டு பேருடைய ஊழியத்திற்கும் முடிவைக் கொண்டு வந்தது. 

கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் சோர்ந்து போய் காணப்படக்கூடும். குடும்ப வாழ்க்கையிலும் சோர்வுகளை உண்டாக்குகிற அனேக சம்பவங்கள் நடந்திருக்கக் கூடும். ஊழியங்களிலும் கூட சோர்வை உண்டாக்குகிற காரியங்கள் சம்பவித்திருக்கும். நாம் செய்யவேண்டியது என்ன,சோர்ந்து போகிறவனுக்குப் பெலன் கொடுக்கிற கர்த்தரை நோக்கிப் பார்க்கவேண்டும், காத்திருந்து ஜெபிக்கிறவர்களாய் காணப்படவேண்டும். அப்போது கர்த்தருடைய புதுப்பெலன் நம்மை மூடும். எரேமியா தீர்க்கதரிசி தனிமை உணர்வினால் சோர்ந்து போனவனாய், நான் பிறந்தநாள் சபிக்கப்படுவதாக, என் தாயார் என்னைப் பெற்ற நாள் ஆசீர்வதிக்கப்படாதிருப்பதாக. உமக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்ததென்று என் தகப்பனுக்கு நற்செய்தியாக அறிவித்து,அவனை மிகவும் சந்தோஷப்படுத்தின மனுஷன் சபிக்கப்படக்கடவன் (எரே.20:14-15) என்றான். ஆகிலும் தன்னை கர்த்தருக்குள் திடப்படுத்திக் கொண்டு, அழுகையும் கண்ணீரோடும் கர்த்தருடைய முகத்தை தேடுகிறவனாய் தொடர்ந்து காணப்பட்டான். கர்த்தர் நேபுகாத்நேச்சாருடைய கண்களில் கூட அவனுக்குத் தயவு கிடைக்குப்படிக்குச் செய்து, பாபிலோனியச் சிறையிருப்புக்கும் அவனை தப்புவித்தார். யோபு கூட, தான் பிறந்த நாளைச் சபித்து,வசனித்துச் சொன்ன வார்த்தைகள் யோபு மூன்றாவது அதிகாரத்தில் எழுதப்பட்டிருக்கிறது, அவைகள் துக்கத்தின் வார்த்தைகளாய் காணப்படுகிறது. ஆகிலும் அவன் தன்னுடைய உத்தமத்தைக் கெட்டியாய் பிடித்தவனாய், அவர் என்னைக் கொன்று போட்டாலும் அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன் என்று கர்த்தர் மேல் வைத்த விசுவாசத்தில் உறுதியாய் காணப்பட்டதினால் இரட்டிப்பான ஆசீர்வாதங்களைப் பெற்றான்.  ஆகையால் நீங்களும் சோர்ந்து போகாமல் காணப்படுங்கள், உற்சாக மனதோடு கர்த்தரைச் சேவியுங்கள். கர்த்தர் உங்களுக்குப் பலனளிக்கும் நாட்கள் விரைவில் வருகிறது.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *