1 சாமு 1:11. சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனைபண்ணினாள்.
ஆண்டவர் அன்னாளின் கர்ப்பத்தை அடைத்து வைத்திருந்தார். அன்னாளை போல சில ஸ்த்ரீகளின் கர்ப்பத்தை கர்த்தர் அடைந்திருந்தார். சாராள், ரெபெக்காள், ராகேல் மற்றும் அன்னாள் போன்றோரின் கர்ப்பத்தை அடைந்திருந்தார். இவர்களெல்லாரும் ஆண்டவரை நோக்கி ஜெபித்தார்கள். அதன்விளைவாக பின்நாட்களில் கர்த்தர் கிருபையாய் அவர்களுக்கு ஆண் குழந்தையை கொடுத்தார். அவர்களெல்லாரும் பாரத்தோடு ஜெபித்தார்கள்; அவர்கள் ஜெபத்தை கேட்டு கர்த்தர் பதில் தந்தார்.
அன்னாள் பல வருடங்களாக தனக்கு ஒரு பிள்ளை வேண்டும் என்று தனது தேவைக்காக மாத்திரம் ஜெபித்துக்கொண்டு வந்தாள். பின்நாட்களில் அவளுடைய ஜெபத்தில் மாற்றம் காணப்பட்டது, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன் என்பதாக மாறியது. எப்பொழுதெல்லாம் நம்முடைய ஜெபம் தேவனுடைய தேவையை சார்ந்து இருக்கிறதோ, அப்பொழுதெல்லாம் கர்த்தர் உடனடியாக பதிலை கொடுக்கிறவராக காணப்படுகிறார்.
அந்நாட்களில் இஸ்ரவேல் தேசத்திற்கு ஒரு ஆவிக்குரிய தேவைகள் காணப்பட்டது. கர்த்தருடைய ஜனங்கள் சோரம்போன சூழ்நிலை, ஏலி போன்ற ஆசாரியர்கள் பின்வாங்கிப்போன சூழ்நிலை, மோசே மரித்த பிறகு சரியான தீர்க்கதரிசி இல்லாத சூழ்நிலையில் தேசம் காணப்பட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அன்னாள் இஸ்ரவேல் தேசத்திற்கு கர்த்தரால் எழுப்பப்படும் தீர்க்கதரிசி தேவை என்பதை உணர்ந்தாள். அதன் பின்பு அவளுடைய ஜெபம் தேவனுடைய தேவையை சார்ந்ததாக மாறி பொருத்தனை பண்ணி ஜெபித்தாள். அப்படிப்பட்ட நல்ல தாயிடம் பிறந்தவன் தான் சாமுவேல் தீர்க்கதரிசி.
உங்களுடைய ஜெபம் எதை சார்ந்ததாக காணப்படுகிறது? நான், என் பிள்ளைகள், என் குடும்பம், என் தேவை, என் பொருளாதாரம் என்று சுயநலமாகவே காணப்படுகிறதா? இல்லை ஆண்டவரின் இதய துடிப்பை அறிந்து அவருடைய தேவையை பூர்த்திசெய்யும்படியாக உங்கள் ஜெபம் இருக்கிறதா? இவை இரண்டில் எவ்வகையான ஜெபத்தை ஏறெடுக்கிறவர்களாக காணப்படுகிறீர்கள் ? நம்முடைய தேவைகள் அனைத்தும் தேவனுடைய தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளும் நாட்கள் இது. நம்முடைய ஜெபங்கள் அனைத்தும், மனிதர்களை அல்ல தேவனை பிரியப்படுத்தும் ஜெபமாக மாறவேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறவராக காணப்படுகிறார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org