நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம், அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார் (எபே. 1:3).
ஆசீர்வாதமாய் காணப்படவேண்டும் என்பதை விரும்பாதவர்கள் ஒருவரும் இருப்பதில்லை. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் காணப்பட வேண்டும் என்றும், ஊழியக்காரர்கள் தங்கள் ஊழியங்கள் ஆசீர்வாதமாய் காணப்படவேண்டும் என்றும், வியாபாரம் மற்றும் தொழில் செய்கிறவர்கள், தங்கள் தொழில் ஆசீர்வாதமாய் காணப்பட வேண்டும் என்றும், வேலைகள் செய்கிறவர்கள் தாங்கள் வேலை ஆசீர்வாதமாகக் காணப்படவேண்டுமென்றும் விரும்புவார்கள். தேவனும் நம்மை ஆசீர்வதிக்க விரும்புகிறார். பொதுவாகக் கர்த்தருடைய ஆசீர்வாதங்கள் மூன்று விதங்களில் வெளிப்படுகிறது, பூமிக்குரிய ஆசீர்வாதம், சரீரத்திற்குரிய ஆசீர்வாதம் மற்றும் உன்னதங்களுக்குரிய ஆசீர்வாதமாய் காணப்படுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளுக்கு ஆஸ்தி ஐசுவரியங்கள், வீடு வாசல்கள், ஆரோக்கியமான வாழ்க்கை, கர்ப்பத்தின் கனிகளாகிய பூமிக்குரிய ஆசீர்வாதங்களையும், சரீரத்திற்குரிய ஆசீர்வாதங்களையும் கொடுத்து நம்மை ஆசீர்வதிக்கிறார். அதற்காகவே சிலுவையில் தரித்திரராகவும், காயங்களை ஏற்றவராகவும் தொங்கினார்.
உன்னதங்களுக்குரிய ஆசீர்வாதம், பூமிக்குரிய ஐசுவரியங்களையும், சரீரத்திற்குரிய ஆசீர்வாதங்களை பார்க்கிலும் மேன்மையானது. அவருடைய கிருபையின் ஐசுவரியத்தினால் நமக்குப் பாவமன்னிப்பாகிய மீட்பு இயேசுகிறிஸ்துவுக்குள் நமக்கு வந்நது என்று எபே. 1:7 கூறுகிறது. மீட்பு என்ற வார்த்தை அடிமைகளை விற்கும் சந்தையிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தையாகக் காணப்படுகிறது. தகுதிக்கு மேற்பட்ட பெரிய கிரயத்தொகையைக் கொடுத்து அடிமைகளை விலைக்கு வாங்குவதற்கு ஒப்பாகக் காணப்படுகிறது. பாவம் செய்ததின் நிமித்தம் பிசாசிற்கு அடிமைகளாய் காணப்பட்ட நம்மை, அவருடைய கிருபையின் ஐசுவரியத்தினால், தம்முடைய விலைறேப் பெற்ற இரத்தத்தைக் கிரயமாய் கொடுத்து நம்மை மீட்டெடுத்தார். ஆகையால் மீட்பு என்பதும், இரட்சிப்பு என்பதும் மேன்மையான உன்னதங்களுக்குரிய ஆசீர்வாதமாய் காணப்படுகிறது. உன்னதமான தேவன் நம்மேல் அன்பு கூர்ந்ததினால் வெளிப்பட்ட இரக்கத்தின் ஐசுவரியமாகவும் (எபே. 2:4) அது காணப்படுகிறது. அவர் சாபமானதினாலே நமக்கு ஆசீர்வாதம். அவர் சிலுவையில் ஜீவனைக் கொடுத்ததினாலே நமக்கு நித்திய ஜீவன். அவர் தருகிற உன்னதங்களுக்குரிய ஆசீர்வாதங்கள் எத்தனை உயர்வானது.
ஆகையால் தான் கர்த்தருடைய பிள்ளைகள் மேலானவைகளையும், உன்னதங்களுக்குரிய காரியங்களையும் தேடவேண்டும். மனம் திரும்பி, பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்று, அதற்கு அடையாளமாய் பழைய மனுஷனை, பாவமனுஷனை ஞானஸ்நானத்தின் மூலமாய் தண்ணீரில் அடக்கம் செய்து, ஆவியானவருடைய அபிஷேகத்தின் நிறைவைப் பெற்று, கர்த்தருடைய வார்த்தையில் அனுதினமும் வளர்ந்து, கனிகொடுக்கிற ஜீவியம் செய்வது கர்த்தருக்குப் பிரியமான புது சிருஷ்டியின் ஜீவியமாகக் காணப்படுகிறது. அதுபோல, பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம், பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள், உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். தேவனுடைய இராஜ்யத்திற்குரியவைகளையும், நீதிக்குரியவைகளையும், உன்னதங்களுக்குரியவைகளையும் நீங்கள் தேடும்போது, தேவன் பூமிக்குரிய, சரீரத்திற்குரிய ஆசீர்வாதங்களையும் கூட்டிக் கொடுத்து உங்களைக் கனப்படுத்தி உயர்த்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar