ஆதி 39:2. கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.
ஆதியாகமம் 39ம் அதிகாரத்தில் கர்த்தர் யோசேப்போடு இருந்தார் என்பதை அடிக்கடி வாசிக்கலாம். யோசேப்பு கடந்து சென்ற எல்லா கடினமான சூழ்நிலையிலும் கர்த்தர் அவனோடிருந்தார். யோசேப்பு அடிமையாக விற்கப்பட்டான். தன்னுடைய தகப்பன், குடும்பம், தேசம் எல்லாவற்றையும் இழந்து, வேறொரு தேசத்தில், யாரும் தெரியாத இடத்தில் அடிமையாக விற்கப்பட்டான். இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையில் கர்த்தர் அவனோடிருந்தார். கர்த்தர் யோசேப்போடு இருக்கிறார் என்று தன் எஜமான் கண்டு அவன் மேல் தயவு வைத்தான். நீங்கள் செல்கிற கடினமான சூழ்நிலையில் கர்த்தர் உங்களோடு இருப்பார் என்றால், உங்களுக்கும் மனித தயவு உண்டாகும். நாம் வாழ்கிற இந்த காலத்தில் மனித தயவு மிகவும் தேவையான ஒன்று. காரணம் அநேக துஷ்டர்களும், துன்மார்க்கர்களும் எங்கு பார்த்தாலும் பரவி இருக்கிற சூழ்நிலை. எந்த காரியத்தை செய்ய நாம் முன் வந்தாலும் இப்படிபோன்ற துஷ்டர்களால் வருகிற தடைகளும் நிந்தைகளும் அதிகம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கர்த்தர் உங்களோடு இருந்து உங்களுக்கு மனித தயவை கட்டளையிடுவார்.
யோசேப்பு சரசம்பண்ணும்படி தன்னிடத்தில் வந்தான் என்று போத்திபாரின் மனைவி அபாண்ட பழிச்சொல்லை யோசேப்பின் மீது செலுத்தினாள். அதனால் யோசேப்பு சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டான். இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையை யோசேப்பு கடந்த போது கர்த்தர் அவனோடிருந்தார். ஆகையால் சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார். உங்கள் மேல் யாரவது அபாண்டமான பழிச்சொல் சொல்லுகிறார்கள் என்று மன வேதனை படுகிறீர்களா? உங்கள் மேல் எந்த ஒரு தவறும் இல்லாதிருக்க, காரணமில்லாமல் நிந்திக்கப்படுகிறீர்களா? ஒன்று நிச்சயம் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இயேசு உங்களோடு இருப்பார். உங்களுக்கு வேறொரு விதத்தில் மனித தயவை கர்த்தர் கட்டளையிடுவார்.
இயேசு உங்களோடிருப்பதை மாத்திரம் ஒவ்வொருநாளும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அப்பொழுது இந்த உலகத்தில் மனித தயவை கர்த்தர் கட்டளையிடுவார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org