அவள் தன் புருஷனை நோக்கி: இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன் (2 ராஜா. 4:9).
கனம் பொருந்திய சூனேம் ஊராளாகிய ஸ்திரீ எலிசா தீர்க்கதரிசியைப் பரிசுத்தவானாய் கண்டாள். அவன் சூனேம் ஊருக்கு ஊழியத்திமித்தம் வரும்போதெல்லாம், போஜனம் பண்ணும் படிக்கு வருந்திக் கேட்டுக்கொள்வாள். அவனும் போஜனம் பண்ணும் படிக்கு அங்கே வந்து தங்குவதை வழக்கமாக்கிக் கொண்டான். இப்படி அனேக நாட்கள் எலிசா தீர்க்கதரிசியுடைய சாட்சியின் ஜீவியத்தைப் பார்த்த பின்பு, அவள் தன் புருஷனை நோக்கி, இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன் என்று கூறினாள். அத்துடன் தன் வீட்டின் மெத்தையின்மேல் ஒரு சிறிய அறைவீட்டைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைப்போம், அவர் நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கலாம் என்று தன் புருஷனிடம் கூற, அவனும் அதை ஏற்றுக்கொண்டான். கர்த்தருடைய பிள்ளைகளே, மரம் தன்னுடைய கனியினால் அறியப்படும். மரம் சுவையான கனியைக் கொடுக்கிறதா, உவர்ப்பான, கசப்பான கனியைக் கொடுக்கிறதா என்பதற்குக் காத்திருக்கிற ஒரு காலம் காணப்படுகிறது. அதன்பின்பு கனியை வைத்துத் தான் நல்ல மரமா, இல்லையா என்பதை நிர்ணயிக்கமுடியும். அதுபோல நாம் பழகுகிறவர்கள், ஊழியக்காரர்கள் எவ்விதமான கனியை உடையவர்கள் என்பதை அறிய நாட்கள் ஆகும். ஆகையால் ஒருமுறை சந்தித்த உடனே, முழுவதும் நம்பி விடாதிருங்கள். பரிசுத்த ஜீவியம் செய்கிறவர்களாய் காணப்படுகிறார்களா என்பதைச் சோதித்து அறியுங்கள்.
ஒருநாள் எலிசா தன் வேலைக்காரன் மூலம் சூனேமியாளை அழைத்து, அதிக கருணையோடு எங்களை விசாரிக்கிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும். உனக்காக நான் ராஜாவிடத்தில் நன்மையுண்டாக பேசவேண்டுமா என்று கேட்ட வேளையில், அவள் என் ஜனத்தின் நடுவே சுகமாய் குடியிருக்கிறேன் என்று கூறினாள். இதிலிருந்து அவள் ஒன்றும் எதிர்பாராமல் கர்த்தருடைய ஊழிக்காதரன் என்பதினால் அவனுக்கு உதவி செய்தாள் என்பதை அறியமுடிகிறது. இந்நாட்களில் எதைச் செய்தாலும் பதில் செய்யவேண்டும் என்றும், தங்களிடத்தில் பட்சமாய் இருக்கவேண்டும் என்றும், தங்களைக் கனப்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்க்கிற ஜனங்களிடத்திலிருந்து சூனேமியாள் உயர்ந்து நிற்கிறதைப் பார்க்கமுடிகிறது. தாவீது, கர்த்தரை நோக்கி, தேவரீர் என் ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல், பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாயிருக்கிறது என்றான். அதுபோல சூனேமியாளும், பரிசுத்தவானாகிய எலிசா கர்த்தருடைய ஊழியக்காரனாக இருப்பதினால் தன்னுடைய ஆஸ்திகள் மூலம் அவனுக்கு ஊழியம் செய்தாள்.
பின்பு எலிசா, சூனேமியாள் பிள்ளை இல்லை என்ற ஒரு பெரிய குறையோடு காணப்படுகிறாள் என்பதை கேயாசியின் மூலம் அறிந்து கொண்டான். அத்துடன் அவளும் அவள் புருஷனும் வயது சென்றவர்கள் என்பதையும் அறிந்துகொண்டான். கருணையோடு தன்னை விசாரிக்கிற குடும்பம் ஆசீர்வாதமாய் காணப்படவேண்டும் என்பதை வேண்டி, ஒரு பிராண உற்பத்திகாலத்திட்டத்திலே ஒரு குமாரனை அணைத்துக்கொண்டிருப்பாய் என்று கர்த்தருடைய வார்த்தையை எலிசா சூனேமியாளிடம் கூறினான். அப்படியே கர்த்தர் ஒருகுமாரனைக் கொடுத்து கடாட்சித்தார், மாத்திரமல்ல, பின்னாட்களில் அந்ந பிள்ளையானவன் வியாதிப்பட்டு, மரித்த வேளையிலும் அவனை உயிரோடு எழுப்பித் திரும்பவும் அவளிடம் கொடுத்தான். கர்த்தருடைய பிள்ளைகளே, தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான், நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான். சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற் போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று இயேசு கூறினார். பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள், அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள். பரிசுத்தமாய் கர்த்தருடைய பணியைச செய்கிறவர்களை கனம் பண்ணும் போது, கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, உங்கள் தேவைகளைச் சந்தித்து சுகமாய் வாழும் படிக்குச் செய்வார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar