சக 10:1. பின்மாரிகாலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்; அப்பொழுது கர்த்தர் மின்னல்களை உண்டாக்கி, வயல்வெளியில் அவரவருக்குப் பயிருண்டாக அவர்களுக்கு மழையைக் கட்டளையிடுவார்.
இப்போதிருக்கும் பாலஸ்தீனத்தில் மார்ச் மாதத்தில் முன்மாரி மழை பெய்யும். அப்போது கோதுமை மற்றும் பயிர்களை, விதைகளை வயலில் விதைப்பார்கள். எனவே விதைப்பதற்காக தேவன் கொடுக்கிற மழையே முன்மாரி மழை. ஆவிக்குரிய பிரகாரமாக இந்த முன்மாரி மழை அப்போஸ்தலர்கள் வாழ்ந்த காலத்தில் பெந்தேகோஸ்தே நாளில் முன்மாரி மழை பெய்தது. ஆவியானவரின் அபிஷேகம் 120 பேர் மேல் விழுந்தது. பாலஸ்தீன தேசத்தில் பின்மாரி மழை அக்டோபர் மாதத்தில் பெய்யக்கூடியது. முன்மாரி மழையை போலவே பின்மாரி மழை பத்து மடங்கு அதிகமாக பெய்யும் என்று வேதபண்டிதர்கள் கூறுகிறார்கள். 1906ஆம் வருடம் அமெரிக்காவில் அசூசா தெருவில் பின்மாரி மழை பெய்தது. பல லட்சக்கணக்கான ஜனங்கள் இயேசுவிடம் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். பின்மாரி மழை 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பொழிந்ததே தவிர அது முழுமையடையவில்லை. காரணம் பின்மாரி மழை முன்மாரி மழையை விட பத்து மடங்கு அதிகமாக பெய்ய வேண்டும். எருசலேம், அந்தியோகிய சபைகளில் அன்று இரண்டு லட்சம் விசுவாசிகள் இருந்தார்கள் என்றால் பின்மாரி மழை காலத்தில் அநேக சபைகளில் இருபது லட்சம் விசுவாசிகள் இருப்பார்கள். அப்படிப்பட்ட அபரிவிதமான அபிஷேகம் ஊற்ற பட, விடாமல் ஜெபியுங்கள்.
இயேசு கிறிஸ்து எனக்காக பிதாவிடம் பரிந்து பேசுகிறார் ஆகையால் நான் நன்று சாப்பிட்டு தூங்குவேன் என்று சொன்னால் நீங்கள் வஞ்சிக்கப்படுகிறீர்கள் என்று அர்த்தம். கடைசிக்காலத்தில் விடாமல் விழித்திருந்து, வாக்குத்தத்தங்களை பிடித்து, உபவாசித்து, தடைகள் உடைந்து நொறுங்கும்படியாக ஜெபத்தில் தரித்திருக்க வேண்டும். பின்மாரி மழை ஊற்றப்படும்படியாக ஜெபிக்கவேண்டும், மற்றவர்களையும் ஜெபிப்பதற்கு ஆயத்தப்படுத்தவேண்டும். இவ்விதமாக ஆதி அப்போஸ்தலர்கள் ஜெபித்து முன்மாரி மழையை கண்டார்கள். இன்று நாம் ஜெபித்து பின்மாரி மழையை காணவேண்டும். ஜெபமே ஜெயம்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org