எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும் படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்தி சொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம் (கொலோ.1:28).
அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தில் ஒரு நோக்கம் காணப்பட்டது. அந்த நோக்கத்தின் நிறைவேறுதலுக்காகக் கர்த்தருடைய பலத்தின்படி போராடி பிரயாசப்பட்டார். எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவர்களாக நிறுத்த வேண்டும் என்பதே அந்த நோக்கமாகும். தேறினவர்கள் என்பதின் அர்த்தம், பூரணமாக்கப்படுவது, ஒட்டத்தை முடித்து நிற்பது, இலக்கை அடைவது என்பதாகும். எந்த மனுஷனையும், மொழி, நிறம், இனம் ஏதுவாகக் காணப்பட்டாலும் அவர்களுக்கு கிறிஸ்துவை அறிவித்து, புத்தி சொல்லி, எல்லா ஞானத்தோடும் கர்த்தருடைய வார்த்தையை உபதேசம் பண்ணி, தேவனுடைய ஆலோசனைகளில் ஒன்றையும் மறைத்து வைக்காமல், சகலவற்றையும் கருத்தாய் கற்றுக்கொடுத்து, பூரணப்படுத்தி கர்த்தருடைய வருகையில் கொண்டு நிறுத்துகிறதையே தன் கடமையாகக் கருதி ஊழியம் செய்தார். நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன் என்று தன் வைராக்கியத்தைக்குறித்தும், அதுபோல கிறிஸ்து ஒவ்வொருவரிலும் உருவாகும் வரையிலும் ஒவ்வொரு ஆத்துமாக்களுக்காகவும் கர்ப்ப வேதனைப்படுகிறேன் என்று ஆத்தும பாரத்தைக் குறித்தும் சாட்சி பகிர்ந்தார்.
இந்நாட்களில் ஊழியம் செய்கிறவர்களுடைய நோக்கமும் இதுவாகவே காணப்படவேண்டும். கர்த்தர் நம்மை நம்பி கனமான ஊழியத்தைக் கொடுத்திருக்கிறார், அதை எந்த நோக்கத்தோடு செய்கிறோம் என்பது முக்கியமானது. ஒரு கூட்ட ஆத்துமாக்களைச் சம்பாதித்து, அவர்களைப் பாதியில் விட்டு விடுகிற மேய்ப்பனல்லாதவர்களும், கூலியாட்களுமாய் அல்ல, மாறாக ஒவ்வொரு ஆத்துமாக்களையும் கிறிஸ்துவுக்குள் தேறினவர்களாய் நிறுத்தவேண்டும் என்பதற்காக பிரயாசப்பட வேண்டும். கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களைவிட்டு, ஒவ்வொருவரையையும் பூரணத்திற்கு நேராக நடத்தவேண்டும் என்றும் கர்த்தர் விரும்புகிறார். பரலோகத்திலிருக்கிற பிதா பூரணசற்குணராய் இருக்கிறது போல நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள் என்றும் வேதம் கூறுகிறது. கர்த்தருடைய ஜனங்களை நடத்துகிறவர்கள், அவர்களுடைய ஆத்துமாக்களுக்கு உத்தரவாதம் செய்து, கர்த்தருடைய வருகையில் கொண்டு நிறுத்த பிரயாசப்பட வேண்டும். வேறுவிதமான நோக்கத்தோடு ஊழியம் செய்கிற அநேகர் இந்நாட்களில் உண்டு, அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன், அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள் என்று அப்படிப்பட்டவர்களைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் எச்சரித்தார்.
அதுபோல கர்த்தருடைய பிள்ளைகளும் தேறின பாத்திரங்களாய் காணப்பட வாஞ்சிக்க வேண்டும். நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன், நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன் என்று 1கொரி. 13:11ல் எழுதப்பட்டிருக்கிறது, அதுபோல பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிற படியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான். பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானோந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும் என்றும் வேதம் கூறுகிறது. ஆகையால் வசனத்தில் வளர்ந்து, நன்மை தீமைகளைப் பகுத்தறிந்து, கர்த்தருடைய வருகையைச் சந்திக்க ஆயத்தமாகவேண்டும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar