உனக்குச் சமாதானம்:-

நியா 6:23 – 24 அதற்குக் கர்த்தர்: உனக்குச் சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார். அங்கே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பேரிட்டான்; அது இந்நாள்வரைக்கும் அபியேஸ்ரியரின் ஊராகிய ஒப்ராவில் இருக்கிறது.

இஸ்ரவேல் ஜனங்கள் சுமார் ஏழு வருஷங்கள் மீதியானியர் கையில் இருந்தார்கள். இஸ்ரவேலின் விளைச்சல்களையெல்லாம் மீதியானியர்கள் கெடுத்துப்போடுகிறவர்களாக காணப்பட்டார்கள். ஏழு வருடங்களும் இதே மாதிரி செய்து வந்தார்கள். நம்முடைய சம்பாத்தியத்தை வேறே யாரவது முழுவதுமாக கெடுத்துப்போடுவார்களென்றால் நமக்கு எப்படி இருக்கும் என்று சற்று யோசித்துப்பாருங்கள். மாதம் முழுவதும் கடினமாக உழைக்கிறோம், பல தேவைகள் பூர்த்தி செய்யும்படியாக மாத கடைசியில் வருமானம் வர எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். ஆனால் முடிவில் வேறே யாரோ வந்து அவைகளெல்லாவற்றையும் அபகரித்துக்கொண்டால் நமக்கு எப்படி இருக்கும். இப்படியாக தொடர்ந்து ஏழு வருடங்கள் நம்முடைய உழைப்பையெல்லாம் யாராவது கெடுத்து போட்டால் எப்படி இருக்கும். இப்படியாக தான் இஸ்ரவேல் ஜனங்கள் நெருக்கப்பட்டார்கள்; ஒடுக்கப்பட்டார்கள்; சிறுமைப்பட்டார்கள். கர்த்தர் கிதியோனை பார்த்து சொன்னார் பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார். உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.

இன்றும் கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் பார்த்து இதே வார்த்தையை தான் சொல்லுகிறார். ஒடுக்கப்படுகிற சூழ்நிலை வருகிறதா? உங்களுக்கு இருக்கிற பெலத்தோடு சத்துரு என்னும் பொல்லாத பிசாசை எதிர்கொள்ளுங்கள். உங்களோடு கூட தேவ சேனையும் இணைந்து மக்னாயிமாக பிசாசை துரத்துவார்கள். நீங்கள் தனித்து விடப்படுவதில்லை.

மாத்திரமல்ல கர்த்தர் கிதியோனை பார்த்து சொன்னார் உனக்கு சமாதானம். உங்களுக்கும் கர்த்தர் சொல்லுகிறார் உங்களுக்கு சமாதானம் என்று. குடும்பத்தில், வேலை ஸ்தலத்தில், ஊழியத்தில் கர்த்தர் சமாதானத்தை கொடுப்பார். சாமாதானத்தை இழந்து, தூக்கமில்லாமல், கசப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா, கர்த்தருடைய சமாதானம் உங்களோடு இருக்கும். காரணம் இயேசு சமாதான கர்த்தர்; அவர் சமாதான பிரபு. ஆகையால் தான் இயேசு இவ்வுலகத்தை விட்டு செல்லும்போது சொல்லுகிறார் என்னுடைய சமாதானத்தையே உங்களுக்கு விட்டு செல்கிறேன். நான் உங்களுக்கு கொடுக்கும் சமாதானம் உலகம் கொடுக்க கூடியதாய் இராது. இயேசுவின் சமாதானம் தெய்வீக சமாதானமாக இருக்கும்.

இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையில் தான் கிதியோன் சமாதான கர்த்தருக்கு ஒரு நாமத்தை இடுகிறான், யெகோவா ஷாலோம் என்பதாக. ஷாலோம் என்ற வார்த்தையில் அணைத்து ஆசிர்வாதங்களும், ஐசுவரியங்களும் அடங்கி இருக்கிறது. அப்படிப்பட்ட சமாதானத்தை, சமாதானத்தின் தேவன் யெகோவா ஷாலோம் உங்களுக்கு தருவராக.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *