ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள், உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் என்றார் (லூக். 8:18).
கர்த்தருடைய தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிறவர்கள் பாக்கியவான்கள் என்று வேதம் கூறுகிறது. ஆகையால் சரியான விதத்தில் வசனத்தைக் கேட்பது முக்கியமானது. ஆண்டவர் விதைக்கிறவனைப் பற்றிக் கூறிய உவமையில், கர்த்தருடைய வார்த்தை விதைக்கப்படும் போது நான்கு விதத்தில் கேட்கிறவர்களைப் பற்றி கர்த்தர் கற்றுக் கொடுத்தார். அதைத் தியானிக்கும் போது நாம் எந்தக் கூட்டத்தைச் சார்ந்தவர்கள் என்று கண்டு கொண்டு, சரியான விதத்தில் கேட்டு பாக்கியவான்களாய் மாறமுடியும்.
தேவனுடைய வசனமாகிய விதை இந்நாட்களில் எங்கும் விதைக்கப்படுகிறது. அதை விதைக்கிறவர் மனுஷகுமாரனாகிய கிறிஸ்து. விதைக்கிற ஊழியர்கள் கர்த்தருடைய வாயாகக் காணப்படுகிறார்களே தவிர வசனத்தை விதைக்கிறவர் ஆதியிலே வார்த்தையாக இருந்த கிறிஸ்துவே. வசனம் விதைக்கப்படும் போது சில விதை வழியருகே விழுகிறது. அப்படிப்பட்டவர்களுடைய இருதயம் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கிறபடியால் பிசாசானவன் வந்து அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கக் கூடாதபடிக்கு அவ்வசனத்தை இருதயத்திலிருந்து எடுத்துவிடுகிறான். உணர்வு உள்ள மனுஷன் உண்டோ என்று கர்த்தருடைய கண்கள் இன்றும் தேடுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தருடைய வசனம் கேட்கும் போது உணர்வடைந்து பாவங்களிலிருந்து வெளியே வந்துவிடுங்கள். உணர்வற்ற கேடுபாடுள்ள இருதயம் நம்மை அழிவுக்கு நேராக அழைத்துச் செல்லும். சிலவிதைகள் கற்பாறையின் மேல் விழுந்தது. அப்படிப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கும்போது சந்தோஷத்துடனே ஏற்றுக்கொள்ளுகிறார்கள். ஆயினும் தங்களுக்குள்ளே வேர்கொள்ள இடம் கொடுப்பதில்லை, ஆகையால் கொஞ்சக் காலமாத்திரம் விசுவாசித்து, சோதனை காலத்தில் பின்வாங்கிப்போய்விடுவார்கள். ஆகையால் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள், கற்பாறையாகக் காணப்படுகிற இருதயங்களைக் கர்த்தர் எடுத்துப்போட்டு சதையான இருதயங்களைத் தரும்படிக்கு வேண்டிக்கொள்ளுங்கள். காரணம் வசனம் வேர்கொள்ளவில்லை என்றால் கடினமான நாட்களிலும் சோதனை வேளைகளிலும் சோர்ந்து போய்விடுவோம். விசுவாசம் தேவனுடைய வசனத்தைக் கேட்பதினால் வரும் என்று வேதம் கூறுகிறது. அற்ப விசுவாசமுள்ளவர்களாய் காணப்படும் போது சோதனைகளைக் கடந்து செல்வது கடினம்.
சிலவிதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தது. அப்படிப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள், கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளும் ஐசுவரியத்தின் மயக்கமும், சிற்றின்பங்களும் முட்களைப்போல நெருக்குவதினால் பலன்கொடாதிருக்கிறார்கள். கர்த்தருடைய ஜனங்கள் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரிக்கும்படிக்கு அழைக்கப்படவில்லை, தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்க தாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள் என்று வேதம் கூறுகிறது. உலகத்திற்கு உரியக் காரியங்கள் முட்களைப் போல் நெருக்குவதினால் விசுவாச ஜீவியத்தில் தொடர்ந்து ஓடக்கூடாதபடிக்கு, பலன்கொடுக்கக் கூடாதபடிக்கும் பின்வாங்கிப் போனவர்கள் அதிகம். சிலவிதைகள் நல்ல நிலத்தில் விழுந்தது. அப்படிப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலிகொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள். வசனத்தைக் கேட்டு, அதை இருதயங்களில் காத்து, பலன் கொடுக்கும் பாத்திரங்கள் பாக்கியவான்கள். அப்படிப்பட்டவர்கள் பிழைத்திருப்பதற்குக் கர்த்தர் தம்முடைய வார்த்தையின் படி அவர்களை ஆதரித்து ஆசீர்வதித்து உயர்த்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar