யோவா 19:26,27. அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.
இயேசு சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும்போது சொன்ன மூன்றாம் வார்த்தை ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். இயேசு தன்னுடைய தாயை நோக்கி ஸ்திரீயே என்று அழைத்தார். கானாவூர் கலியாண வீட்டில் திராட்ச ரசம் குறைவுபட்ட போது ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்று இயேசு ஸ்திரீயே என்று அழைத்தார். இருந்தாலும் இந்த உலகத்தில் பெற்றெடுத்த தாயாக மரியாள் இருந்ததால் பெற்றோருக்கு கொடுக்கவேண்டிய கனத்தையும், பராமரிப்பையும் இயேசு கொடுத்துக்கொண்டே இருந்தார். தேவ தூதன் மரியாளுக்கு இயேசுவின் பிறப்பை குறித்து கூறும்போது இயேசு இவ்வுலகத்தின் பாவங்களுக்காக இரட்சகராக வெளிப்படுகிறார் என்பதை அவள் நன்றாக அறிந்திருந்தாள். சிமியோன் உன் ஆத்துமாவை ஒரு பட்டயம் உருவிப்போம் என்று தீர்க்கதரிசனமாக மரியாளுக்கு அறிவித்திருந்தார். இயேசு உலகத்தின் ஜனங்களுக்காக மரிக்கப்போகிறார் என்பதை மரியாள் ஏற்கெனவே அறிந்திருந்ததால், இயேசு சிலுவையில் தொங்கும் போது ஒரு வேலை மரியாளின் இதயத்தில் பட்டயம் ஊடுருவி சென்றாலும், தன் மனதை அவள் தேற்றியிருக்க கூடும்.
இயேசு வீட்டில் பிறந்த மூத்த மகன். அவருக்கு பின்பு அநேக பிள்ளைகள் மரியாள் யோசேப்புக்கு பிறந்தார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மரியாளுக்கு தன்னுடைய ஸ்தானத்திலிருந்து அவளை கடைசிமட்டும் பராமரித்துக்கொள்ளும்படியாக தனக்கு அன்பாயிருந்த சீஷன் யோவானிடம் மரியாளை ஒப்படைக்கிறார். சிலுவையில் தொங்கும்போது கூட தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக என்ற கட்டளையை நிறைவேற்றுகிறவராக, மரியாளின் மீது பாசம் நிறைந்தவராக, அவளை பராமரிக்கும்படியாக மரியாளை பார்த்து சொன்னார் அதோ உன் மகன்.
அதே இயேசுதான் இன்று உங்கள் மீதும் கரிசனையுள்ளவராக காணப்படுகிறார். உலகத்தில் என் மீது கரிசனை செலுத்த யாருமே இல்லை என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா? இயேசு உங்கள் மீது கரிசனையாக இருக்கிறார். நீங்கள் தனித்து விடப்படுவதில்லை. உங்களை தேற்ற சிலுவையில் தொங்கின இயேசு காணப்படுகிறார்.
பின்பு அந்த சீஷன் மரியாளை சேர்த்துக்கொண்டான். நீங்களும் இயேசுவை போல உங்கள் பெற்றோர்களை கடைசிமட்டும் பராமரிக்கிறவர்களாக, தேவையான உதவிகளை செய்கிறவர்களாக காணப்பட வேண்டும் என்று கர்த்தர் விருப்பமுடையவராக காணப்படுகிறார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org