மத் 27:46. ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
இயேசு சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது சொன்ன நான்காம் வார்த்தை ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி. அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தம். மிகுந்த சத்தமிட்டு இந்த வார்த்தையை இயேசு சொன்னார். ஆங்கிலத்தில் Jesus cried out with a loud (agonized) voice என்று எழுதப்பட்டிருக்கிறது. அவருடைய சத்தம் அழுகையின் சத்தமாக இருந்தது. இயேசு கைவிடப்பட்ட சூழ்நிலையில் இருந்தார். சீஷர்கள் இயேசுவை விட்டு கடந்து சென்றபோது இருந்த வேதனையை விட, பேதுரு இயேசுவை மறுதலித்தபோது இருந்த வேதனையை விட, யூதாஸ் இயேசுவை முத்தத்தால் காட்டிக்கொடுத்தபோது இருந்த வேதனையை விட, ஆணிகள் கடாவப்பட்டதின் மூலமாக வந்த வேதனையை விட, ரோமர்கள் போர்ச்சேவகர்கள் யூத மக்கள் கொடுத்த சிலுவை மரணத்தின் வேதனையை விட, முழு உலகத்தின் பாவமும் சாபமும் இயேசுவின் மீது வைக்கப்பட்ட போது இருந்த வேதனையை விட, இப்பொழுது இயேசுவுக்கு தாங்கிக்கொள்ள முடியாத, ஒருவராலும் ஈடுகொடுக்க முடியாத ஒரு வேதனையை கடந்து சென்றார். அது என்ன வேதனை? ஆதியிலிருந்தே பிதாவின் மடியில் செல்ல பிள்ளையாக இருந்தவர், ஒருபோதும் பிதாவின் தரிசனத்தை இழக்காதவர், இப்பொழுது பிதாவின் முகம் மறைக்கப்படும் வேலை வந்தது. அந்த வேதனையை இயேசுவால் சகிக்க முடியவில்லை; தாங்கி கொள்ள முடியவில்லை. ஆகையால் தான் எல்லா வலியை காட்டிலும் மேலான வலி பிதாவின் முகம் மறைக்கப்படும் போது வருகிற வலியை தாங்கி கொள்ள முடியாமல் மிகுந்த சத்தத்தோடு அழுது சொல்லுகிறார் என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்.
சாதாரணமாக சுமார் 18 மணி நேரமாக ஒன்றும் சாப்பிடாமல், தண்ணீர் கூட அருந்தாமல், வாரினால் அடிபட்டு, முள்முடி சூட்டப்பட்டு, சிலுவையை சுமந்து சென்று, ஆணிகளால் அடிக்கப்பட்ட பிறகு ஒரு மனிதன் மிகுந்த சத்தத்தோடு கூப்பிட முடியமா என்றால், நிச்சயமாக முடியாது. குரல் கொஞ்சம் கூட எழும்பாது. ஆனால் இயேசு மிகுந்த வியாகுலத்துடன் அழுது கத்தினார். பிதாவின் முகம் இயேசுவுக்கு மறைக்கப்பட்டது.
நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை என்பது தேவனுடைய வாக்குத்தத்தம். தேவன் நம்மை கைவிடாமல் இருக்க வேண்டுமென்றால், இந்த வாக்குத்தத்தம் நிறைவேற வேண்டுமென்றால், பிதாவானவர் இயேசுவை கைவிட்டு ஆகவேண்டும். பிதா இயேசுவுக்கு தன் முகத்தை மறைத்தே ஆக வேண்டும். நீங்கள் கைவிடப்படாமல் இருக்கும்படியாக, இயேசு கைவிடப்பட்டார். அந்த வேதனையை இயேசு உங்களுக்காக கல்வாரி சிலுவையில் சகித்தார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org