யோவா 19:28. அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.
இயேசு சிலுவையில் சொன்ன ஐந்தாவது வார்த்தை தாகமாயிருக்கிறேன். என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது (சங் 22:15), என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள் (சங் 69:21) என்ற வேத வாக்கியங்கள் நிறைவேறும்படியாக இயேசு சிலுவையில் சொன்னார் தாகமாயிருக்கிறேன். ஒருபுறம் இயேசுவுக்கு சரீரத்திற்கு தேவையான தண்ணீர் இல்லாமல் தாகமாயிருக்கிறேன் என்று சொன்னார்; மறுபுறம் இயேசுவுக்குள்ளாக ஆத்தும தாகம் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது இருந்தது. கசப்பு கலந்த காடியை கொடுத்தார்கள், இயேசு அதை பருகி வேதனையை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஆகையால் அவருடைய நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது. வேதாகம வல்லுநர்கள் சொல்லுகிறார்கள் இந்த தாகம் சாதாரண தாகமல்ல, மாறாக, அக்கினியின் மத்தியில் இருக்கிற ஒரு மனிதனுக்கு ஏற்படும் மரண தாகம் போன்றது என்பதாக. நரகத்தில் நாம் நம்முடைய பாவத்தின் விளைவாக மரண வேதனை அனுபவிக்கும் வேதனையில் இயேசு இருந்தார். இது ஒரு மரண வேதனைக்கு அடையாளம் என்று வேதாகம வல்லுநர்கள் சொல்லுகிறார்கள். நாம் ஒவ்வொருவரும் பரலோக இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக இயேசு நரக வேதனை அனுபவித்தார்.
பொதுவாக துக்க வீட்டில் கசப்பு கலந்த வேப்ப இலை சாறை நம்முடைய ஊர்களில் கொடுப்பதுண்டு. அது துக்கத்திற்கு அடையாளமாகவும், எந்த கிருமியும் தொற்றாமல் இருக்கும் படியாகவும், முன்னோர்களின் பாவத்தை நாங்கள் அனுபவிக்கிறோம் என்று காட்டும்படியாகவும் அதை செய்வார்கள். ஆனால் இயேசுவோ கசப்பு கலந்த காடியை குடிக்க மறுத்துவிட்டார். எல்லா பாவத்தையும் அவர் சுமந்தார், ஒவ்வொரு நிமிடமும் மரணத்தை ருசிபார்த்தார்.
இன்றும் இயேசு இதே வார்த்தையை சொல்லி கொண்டே தான் காணப்படுகிறார். தாகமாயிருக்கிறேன், ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படவேண்டும் என்று தாகமாயிருக்கிறேன். ஒரு பெரிய தொழிலதிபர், ஒருவரை வேலைக்கு எடுக்கும்போது சொன்னார் நீ இந்த நிறுவனத்திற்கு அதிக வருமானத்தை ஈட்டி தரவேண்டுமென்று நான் தாகமாயிருக்கிறேன், பசியாயிருக்கிறேன் என்று சொன்னார். உலகத்தில் பலருக்கு அவர்களது தாகம் பணம், பதவி என்பதையே நாடி ஓடி அலைகிறார்கள். ஆனால் இயேசுவின் தாகமோ ஆத்துமாக்கள் மீது இருக்கிறது. அந்த தாகத்தை தீர்க்கும்படியாக இயேசுவைக்குறித்து ஒரு கூட்ட ஜனங்களுக்கு சொல்லி அவர்களை அழிவிலிருந்து மீட்கும்படியாக நீங்கள் ஒவ்வொருவரும் எழும்ப வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். இயேசுவின் தாகத்தை தீர்க்கும் தண்ணீர் நீங்கள் தான்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org