யோவா 19:30. இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
இயேசு சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும்போது அவர் சொன்ன ஆறாவது வார்த்தை முடிந்தது. கிரேக்க மொழியில் டெட்டெலெஸ்டாய் (tetelestai) என்ற வார்த்தைதான் தமிழில் முடிந்தது என்று அர்த்தமாய் காணப்படுகிறது. அந்நாட்களில் நிலத்தையோ, ஒரு விலையேறப்பெற்ற பொருளையோ வாங்கும்போது, அதற்கான முழுக் கிரயமும் செலுத்தப்பட்டுவிட்டது என்பதைக் காட்ட ‘டெட்டெலெஸ்டாய்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். அதாவது, இந்தக் காலத்தில் ரசீதுகளில் PAID என்று முத்திரை குத்துவதுபோல, அந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். ஆகவே இயேசு சிலுவையில் தொங்கின போது ‘முடிந்தது’ என்று சொன்னது நமது பாவ மன்னிப்பிற்கான முழுக் கிரயத்தையும் அவர் செலுத்திவிட்டார் என்பதைக் காட்டுகிறது.
முடிந்தது என்று இயேசு சொல்ல காரணம் என்ன? ஏனென்றால் ஆண்டவர் சிலுவையில் என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் வைத்திருந்தரோ அதை சரியாக செய்து முடித்தார்; பழைய ஏற்பாட்டில் அவருடைய பாடுகளை குறித்து சொன்ன அத்தனையும் நிறைவேற்றி முடிந்தது என்று சொன்னார்; பாவத்திற்கு பரிகாரம் செய்து முடிந்தது என்று சொன்னார்; எத்தனையோ தீராத வியாதிக்கும் தேவையான எல்லா மருந்துகளையும் நமக்காக சம்பாதித்து வைத்து முடிந்தது என்று சொன்னார்; இயேசுவின் உலக வாழ்க்கையும் முடிந்தது. மனித யுகம் முடிந்து ஆவிக்குரிய யுகம் பிறக்கப்போவதையும் அறிந்து முடிந்தது என்றார். ஆவிக்குரிய யுகம் பெந்தேகோஸ்தே நாளில் ஆவியானவர் பலத்த காற்றோடு இறங்கப்போகிறார் என்பதை அறிந்து மனித, மனுஷீக யுகம், அதன் வல்லமைகள் அனைத்தும் முடியப்போகிறது என்பதை அறிந்து முடிந்தது என்று சொன்னார்.
தன்னுடைய பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்த தகப்பனிடம் போய் திருமணமெல்லாம் எப்படி இருந்தது என்று கேட்டால், அவர் சொல்லுவார் எல்லாம் நல்லபடியாக முடிந்தது என்று. சுற்றுலா சென்ற வாலிபரிடம், உன் பிரயாணம் எப்படி இருந்தது என்று கேட்டால், எல்லாம் நல்லபடியாக இருந்தது என்று சொல்லுவான். அது போல தான் இயேசுவும் கூட உங்களுக்காக சிலுவையில் உங்களை இரட்சிக்கும்படியாக என்னென்ன விலைக்கிறையத்தை செலுத்தவேண்டுமோ எல்லாவற்றையும் செலுத்தி தீர்த்த பிறகு சொல்லுகிறார் முடிந்தது என்று.
மாத்திரமல்ல இயேசு முடிந்தது என்று சொன்னது சகல சத்துருக்களின் சதித்திட்டங்களையும், அவனுடைய ஆயுதங்களையும் உரித்து, அவனை வெளியரங்கமாக கோலமாக்கி, சாத்தானை தோற்கடித்து இயேசு சிலுவையில் வெற்றி சிறந்தார், உங்களுக்காக.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org