அப்பொழுது, அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து: குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள் (மத். 27:3,4).
இயேசுவை முப்பது வெள்ளிக்காசுக்காகக் காட்டிக்கொடுத்த பின்பு, அவர் மரணத்திற்குப் பாத்திரவான் என்று தீர்ப்பு செய்யப்பட்டதைக் கண்ட யூதாஸ் பிரதான ஆசாரியனிடத்திற்கும், மூப்பர்களிடத்திற்கும் கடந்து சென்று, குற்றமில்லாத இரத்தத்தைக் காட்டிக் கொடுத்தேன் என்றான். இயேசுவின் தனிப்பட்ட வாழ்க்கையையும், பொது வாழ்க்கையையும் கூட இருந்து மூன்றரை வருடங்கள் கவனித்தவன். இயேசு முழுவதும் குற்றமில்லாதவர் என்பதை யூதாஸ் தெளிவாக அறிந்திருந்தான். ஆகிலும் பிசாசிற்கு இடம் கொடுத்ததினாலும், பண ஆசையினிமித்தமும் ஆண்டவரைக் காட்டிக் கொடுத்துவிட்டான். கர்த்தருடைய பிள்ளைகளே, பூமியில் சிந்தப்பட்ட ரத்தங்களில் இயேசுகிறிஸ்துவின் ரத்தம் ஒன்றே குற்றமில்லாதது, மாசற்றது. ஆகையால் அவருடைய ரத்தம் நம்மைப் பரிசுத்தப்படுத்தவும், பாதுகாக்கவும் வல்லமையுள்ளது. மாமிசத்தின் உயிர் ரத்தத்தில் இருப்பதினால், அவருடைய இரத்தம் நமக்கு நன்மையுண்டாக பேசுகிறதாயும் காணப்படுகிறது.
யூதாஸ் மனஸ்தாபப்பட்டு, பாவஞ்செய்தேன் என்று ஆசாரியர்களிடத்தில் கூறினான். அவர்கள் எங்களுக்கென்ன அது உன்பாடு என்று கூறி ஒதுங்கிவிட்டார்கள். யூதாஸ் பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டான், ஆனால் தன்னை பாவத்திலிருந்து விடுவிக்கிறவரையும், மன்னிக்கிறவரையும் அறியாமல் காணப்பட்டான். இயேசுவிடம் கடந்து சென்று என்னை மன்னியும் என்று கூறியிருப்பானேயென்றால் ஆண்டவர் அவனையும் மன்னித்திருக்கக் கூடும். தன்னை விட்டோடினவனையும், யார் என்று அறியேன் என்று சபித்து, சத்தியம் செய்த பேதுருவை மன்னித்த கர்த்தர் யூதாஸையும் மன்னித்திருப்பார். ஆனால், ஒருவிதங்களிலும் உதவிசெய்யக் கூடாத மனுஷர்களிடத்தில் கடந்து சென்று பாவஞ்செய்தேன் என்றான். கர்த்தருடைய பிள்ளைகளே பாவஞ்செய்த பின்பு மனஸ்தாபப்படுகிறவர்களாய் மாத்திரம் காணப்படாதிருங்கள், மன்னிக்கிற ஆண்டவரிடம் வந்துவிடுங்கள். மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பாவங்களை மன்னிப்பதற்கு அவர் ஒருவராலே மாத்திரம் கூடும். மன்னிக்கத் திராணியில்லா மனுஷர்களிடத்தில் சென்று பாவங்களைக் கூறி அவனுடைய மாயவலையில் மாட்டிக்கொள்ளாதிருங்கள். பாவங்களை மறைக்காமல் அவற்றை ஆண்டவரிடம் அறிக்கைச் செய்து விட்டுவிடுங்கள், அவர் மன்னிக்கிறதற்கு தயைபெருத்தவர், அவரிடத்தில் இரக்கங்களும் திரளான மன்னிப்புகளும் உண்டு. இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்க வல்லமையுள்ளது.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar