சாலொமோனின் வீழ்ச்சி நமக்கு ஒரு எச்சரிக்கை:-

1 இராஜா 11:4. சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை.

கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்டவன், கர்த்தரால் உயர்த்தப்பட்டவன், கர்த்தருடைய ஞானம், புத்தி, மனோவிருத்தியை சம்பாதித்தவன், பின் நாட்களில் தொடர்ந்து வீழ்ந்துபோனான். சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தை கட்டிமுடிக்க ஏழுவருஷம் சென்றது. ஆனால் தன் அரமனை முழுதையும் கட்டிமுடிக்க பதின்மூன்று வருஷம் சென்றது. இதிலிருந்து தெரிகிறது அவன் எதை அதிகமாய் நேசித்தான் என்று. அவனுடைய வீழ்ச்சி படிப்படியாக சென்றது. அவன் ராஜாவாக பொறுப்பேற்றவுடன் தாவீது சொன்னவர்களை கொள்ளுகிறவனாக செயல்பட்டான். யோவாப், சீமேயி போன்றோர்களை கொன்றான். அதோனியாவை அவன் மன்னித்திருக்கலாம், ஆனால் அவனையும் கொன்றான். பார்வோனின் குமாரத்திகளை திருமணம் செய்து அந்நிய நுகத்தில் பங்கை சம்பாதித்துக்கொண்டான். கர்த்தர் கொடுத்த ஞானத்தை தவறாக பயன்படுத்த ஆரம்பித்தான். இப்படித்தான் அநேக கிறிஸ்தவர்களும் கர்த்தரிடமிருந்து நல்ல வரங்களை பெற்றுக்கொண்டு பின்பு அதை தவறான காரியத்திற்கு பயன்படுத்துகிறார்கள்.

700 மனைவிகள், 300 மறுமனையாட்டிகள் அவனுக்கு இருந்தார்கள். ஒவ்வொருவரையும் அவன் மூன்று வருடத்திற்கு ஒருமுறை தான் சந்தித்திருக்கக்கூடும். இந்த பெண்களெல்லாம் அவனை விக்கிரகத்தை ஆராதிக்கும்படியாக அவன் மனதை சாய்த்தார்கள். ஆகையால் தான் வாலிபர்கள் தங்கள் திருமண காரியத்தில் அவிசுவாசிகளிடம் சம்பந்தம் கலந்து அவர்களை விவாகம் செய்யலாகாது. சாலொமோன் செய்த தொடர் பாவங்களினிமித்தம் கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு வெளிப்பட்டது. அவனுக்கு பிறகு இராஜ்யபாரம் இரண்டாக பிரிந்தது. சாலொமோனுக்கு விரோதமாக கர்த்தர் யெரொபெயாமை எழுப்பினார்.

வேதாகமத்தில் சாலொமோன் மூன்று புஸ்தகங்களை எழுதினான். ஒன்று நீதிமொழிகள். அதிலிருக்கும் 31 அதிகாரங்களையும் தினமும் ஒரு அதிகாரம் என்று மறுபடியும் மறுபடியும் வாசிக்கும்போது நாம் அநேக கன்னிகளுக்கு தப்ப உதவியாய் இருக்கும். உன்னதப்பாட்டு புஸ்தகம் மணவாளன் இயேசுவுக்கும் மணவாட்டி சபைக்கும் உள்ள பக்தி உறவை வெளிப்படுத்துகிறது. சாலொமோன் வழிமாறியபிறகு எழுதின புஸ்தகம் தான் பிரசங்கி.

வேதாகமத்தில் மூன்று புஸ்தகங்களை எழுதினவன் இன்று எங்கு இருக்கிறான் என்று நாம் அறியவில்லை. அவனைக்குறித்து 1 ராஜாக்கள், 2 நாளாகம புஸ்தகத்தில் வாசிக்கும்போது அவன் மனம் திரும்பினான் என்று பார்க்க முடியவில்லை. பின்னாட்களில் மாயை மாயை என்று சொன்னவன் மனம் திரும்பினானா? ஆவியானவர் அவன் மனம் திரும்புதலை குறித்து எழுதவில்லையென்றால், இப்போது எங்கே இருப்பான் என்று புரியவில்லை.

கர்த்தருக்கென்று அநேக காரியங்களை செய்யலாம், அநேகருக்கு முன்பாக தான் பக்திமான் என்று காண்பித்துக்கொள்ளலாம், நன்றாக ஜெபம் செய்வதை போல வெளிப்படுத்திக்கொள்ளலாம், அநேக காணிக்கைகளை செலுத்தலாம், ஆனால் தன்னுடைய அந்தரங்க வாழ்க்கையில் சாலொமோனை போல வாழ்க்கை வாழ்வோமென்றால், அவனுடைய முடிவு நமக்கு ஒரு எச்சரிக்கையாகவும், பாடமாகவும் இருக்கட்டும். கர்த்தர் ஒருபோதும் நம்மை பார்த்து வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் என்று அழைக்காதவண்ணம் ஒவ்வொரு நாளும் பரிசுத்தத்தை வாஞ்சிக்கிறவர்களாக, நீதிக்குரிய ஜீவியம் செய்பவர்களாக நாம் காணப்பட வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறவராய் காணப்படுகிறார்.
பவுல் சொல்லுகிறார் மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன் (1 கொரி 9:27).

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh.R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *