வந்து பார்.

அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான் (யோவான் 1:46).

இயேசுவின் ஊழியத்தின் துவக்க நாட்களில் அவர் கலிலேயாவிற்கு வந்து பிலிப்புவை கண்டு தன்னைப் பின்பற்றி வரும்படிக்கு அழைத்தார். பிலிப்பு தன் நண்பனாகிய கானா  ஊரானாகிய  நாத்தான்வேலைக் கண்டு மேசியாவைக் கண்டோம் அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசு என்றான். உடனே பர்த்தொலொமேயு என்ற மறுபெயர் கொண்ட நத்தான்வேல், நாசரேத்திலிருந்து நன்மை உண்டாகக் கூடுமா என்றான், அதற்குக் காரணம்  அந்நாட்களில் நாசரேத் அற்பமானதும், புறக்கணிக்கப்பட்டதுமாய்  காணப்பட்ட ஒரு கிராம்.  யூதேயாவிலுள்ள  ஆயிரக்கணக்கான கிராமங்களில் சிறியதான  பெத்லகேமை  தன்னுடைய பிறப்பிற்காகத் தெரிந்தெடுத்த இயேசு, தான் வளருவதற்கும் ஒரு நன்மையும் இல்லாத நாசரேத்தூரை தெரிந்தெடுத்தார். கர்த்தருடைய பிள்ளைகளே, ஞானிகளை  வெட்கப்படுத்துவதுற்கு  உலகத்தில் பைத்தியமானவற்றைத் தெரிந்தெடுக்கிறவர், பலமுள்ளவற்றை  வெட்கப்படுத்தும்படி  பலவீனமானவற்றைத்  தெரிந்துகொள்ளுகிறவர்,  உள்ளவற்றை அவமாக்கும்படி, உலகத்தின்  இழிவானவற்றையும்,  அற்பமாய் எண்ணப்பட்டவற்றையும், இல்லாதவைகளையும் தெரிந்துகொள்ளுகிறவர், அவரால் நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள், ஆகையால் நீங்கள் பாக்கியவான்கள்  என்பதை மறந்துவிடாதிருங்கள்.  உடனே பிலிப்பு, கேள்வி கேட்ட நந்தான்வேலைப் பார்த்து, நீ வந்து பார் என்றான். இயேசுவும்  யோவான்  ஸ்நானகனுடைய  சீஷர்கள்  அவரிடம் ரபீ எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டவுடன் வந்து பாருங்கள் என்றார். இன்றும் இயேசு யார் என்றும், அவருடைய வல்லமையைக் குறித்தும்,  இரட்சிப்பின் வழி அவரா என்றும், அனேகரிடம்  சந்தேகங்கள் காணப்படுகிறது. நாம் அவர்களிடம் வந்து பாருங்கள், எங்களோடு ஐக்கியம் கொள்ளுங்கள், நாங்கள் அவரிடம் உங்களை அழைத்துச் செல்லுகிறோம், வழிகாட்டுகிறோம் என்று தைரியமாகக் கூறுகிறவர்களாய் காணப்படவேண்டும்.

பிலிப்புவின் அழைப்பை ஏற்று  நாத்தான்வேல்  இயேசுவிடம்  வந்தவேளையில், அவர் அவனைக் குறித்து, இதோ, கபடமற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார். அதிர்ச்சியடைந்த நத்தான்வேல்,  நீர் என்னை எப்படி அறிவீர் என்ற வேளையில், அவர் அவனை நோக்கி, பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது  உன்னைக் கண்டேன் என்றார். இயேசு நத்தான்வேலைக் குறித்து கபடற்றவன், உண்மையுள்ளவன், வஞ்சகமில்லாதவன், பொய்யில்லாதவன் என்று சாட்சி பகிர்ந்தார், பூமியெங்கும் உலாவுகிற கர்த்தருடைய கண்கள், அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையை அவன் அத்திமரத்தின் கீழ்க் காணப்பட்ட வேளையில் கண்டு அவனைக் குறித்து நற்சாட்சி பகிர்ந்தார். கர்த்தருடைய பிள்ளைகளே, ஆண்டவர் நம்முடைய தனிப்பட்ட வாழக்கையைக் குறித்து இப்படிப்பட்ட  சாட்சியைக்  கூற முடியுமா?  நாம் நம்முடைய  பொதுவாழ்க்கையிலும்,  தனிப்பட்ட வாழ்க்கையிலும் சாட்சியுள்ளவர்களாய்  வாழ நம்மை அர்ப்பணிக்கவேண்டும். தன்னைப்பற்றி கர்த்தருடைய சாட்சியைக் கேட்ட நத்தான்வேல், அது உண்மையாய் காணப்பட்டதினால், இயேசுவை நோக்கி நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்று முதல்முதலாக இயேசுவை மேசியா என்று அறிக்கையிட்டான். இயேசு அவனை நோக்கி, இதிலும் பெரிதானவைகளைக் காணப்பாய் என்று சொல்லி அவனையும் தன்னுடைய பன்னிரண்டு சீஷர்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டார்.

இயேசு யார் என்று அவரை அறியும் படிக்கு உண்மை மனதுடன் அவரண்டை வருகிற எல்லாருடைய கண்களையும் திறக்கிற தேவன் அவர். அந்திரேயா, பிலிப்புவைப்  போல  சிலரையாகிலும் ஆண்டவரண்டை, வந்து பார்  என அழைத்துக் கொண்டு வருகிற கருவிகளாய் நாம் காணப்படுவோம். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

One Reply to “வந்து பார்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *