ஏசா 51:2. உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணினேன்.
ஆபிரகாம் தனியாக இருந்தான் என்றால் அவன் மாத்திரமல்ல சாராளையும் சேர்த்து தான் ஆண்டவர் சொல்லுகிறார். காரணம் வசனம் சொல்லுகிறது இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். அப்படியாக ஆபிரகாம் தனித்து இருந்த போது, தனிமை அவனை வாட்டி வதைத்தபோது கர்த்தரின் கண்கள் ஆபிரகாமை கண்டது. நீங்களும் இப்படியாக தனிமையுணர்வால் கவலைப்பட்டு கஷ்டப்பட்டு கொண்டிருக்கலாம். ஆபிரகாம் தனிமையாய் இருந்த போது கர்த்தர் அவனை அழைத்தார், அவனை ஆசிர்வதித்தார், அவனை பெருகப்பண்ணினார். அவர் சொன்ன வார்த்தையை நிறைவேற்றுகிறவர். சொன்னபடி ஆபிரகாமின் சந்ததி வானத்து நட்சத்திரங்களை போல பெருகியது. உங்களையும் பெருகப்பண்ணுவார்.
மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்று சொல்லி ஏவாளை சிருஷ்டித்தார். ஆகையால் கர்த்தர் யாரையும் தனிமையாய் இருக்க விடுவதில்லை. ஏதோவொரு தனிமையுணர்வு உங்களை பாதித்துக்கொண்டிருக்கலாம். குடும்பத்தில் யாரையாவது இழந்து தனிமையாக இருப்பதைப்போல இருக்கிறீர்களா, வேலைஸ்தலங்களில் எல்லாராலும் ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறீர்களா, பிள்ளைப்பேறு இல்லாமல் தனிமையாய் இருந்து வேதனைக்குள்ளாக இருக்கிறீர்களா, எதுவாக இருந்தாலும், கர்த்தர் உங்கள் தனிமையை மாற்றுவார். கர்த்தரே உங்கள் கூட இருப்பார். ஆபிரகாமை பெருகப்பண்ணினவர் உங்களையும் பெருகப்பண்ணுவார்.
திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனாக இருப்பார். தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்; துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள் (சங்கீதம் 68:6) என்று வசனம் சொல்லுகிறது. நான் உன்னோடு கூட இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் வாழ்க்கை பாதையில் நடந்து செல்லும்போது தனியாக நடந்து போவதில்லை.உங்களோடு உங்கள் கரத்தை பிடித்துக்கொண்டு கடைசிமட்டும் உங்களோடு கூட வருகிற இயேசு உண்டு. வழி இதுவே என்ற சொல்லும் சத்தத்தை கேட்பீர்கள். மகிமையின் மேகம் உங்களோடு கூட வரும். ஆவியாகிய தேவன் துணையாளராக உங்களோடு கூட இருப்பார். நீங்கள் தனித்து விடப்படுவதில்லை. உங்களை முன்னும் பின்னுமாக நெருக்கி உங்களோடு கூட இயேசு நடந்து வருவார். எல்லாவற்றையும் குறித்து போதிப்பார். விசுவாசத்துடன் இருங்கள், உங்கள் தனிமையை கர்த்தர் மாற்றுவார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org